கோதுமை மாவு இடியாப்பம்

 

கோதுமை மாவில் இடியாப்பமா !! நட்பூ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது முதலில் நானும் இப்படித்தான் ஆச்சரியமாகிப்போனேன்.  பிறகு அவர் சொன்னதை வைத்து முயற்சித்துப் பார்த்தேன். நன்றாக வந்தது. பதிந்து வைத்தால் யாருக்காவது உதவுமே என இங்கே எழுதுகிறேன்.

தேவையானவை :

கோதுமை மாவு _ 2 கப்

உப்பு _ ருசிக்கு ஏற்ப

செய்முறை :

இட்லி பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். கோதுமைமாவை ஒரு துணியில் முடிந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும்  இட்லி  தட்டில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும்.  நான் சுமார் 25 நிமிடங்களுக்கு அவித்து எடுத்தேன்.

(மாவு கொழகொழனு இருக்குமோ எந பயந்துகொண்டே எடுத்தேன். ஆனால் சூடான கெட்டியான கல்லு மாதிரி இருந்தது.)

அதை ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு உள்ளங்கைகளால் புட்டு மாவு பிசைவது மாதிரி செய்தால் பொலபொலவென மாவு உதிர்ந்த்கொள்ளும். தேவையான உப்பை சேர்க்கவும்.

இப்போது கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக மாவில் தெளித்து கெட்டியாக இடியாப்பம் பிழியும் பதத்திற்கு பிசையவும். ஒரேயடியாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டாம்.

(இடியாப்ப அச்சிலிருந்து மாவு வெளியே வருமா என சந்தேகத்துடனே பிழிந்தேன். கடகடவென அரிசிமாவு இடியாப்பம் மாதிரியே வந்தது.)

மீண்டும் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். இடியாப்ப அச்சில் மாவை நிரப்பிக்கொள்ளவும்.  தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு அதில் இடியாப்பத்தை பிழிந்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுக்கவும்.

சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு சர்க்கரை, தேங்காய் பூ, ஏலப்பொடி சேர்த்து சாப்பிடலாம்.

அல்லது விருப்பமான குருமாவுடன் சாப்பிடலாம்.

கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

இடியாப்பம் 2

தேங்காய்ப்பூ & சர்க்கரை  சேர்த்த இடியாப்பம்

இடியாப்பத்துடன் தேங்காய்ப்பால்,சர்க்கரை&தேங்காய்ப்பூ,வெஜ்&நான்வெஜ் குருமா சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

அதேபோல் புது ஈரமாவில் செய்தால்தான் பளீர் வெண்மை & softness & நல்ல சுவை கிடைக்கும்.என்றைக்கோ ஒரு நாள் செய்கிறோம்,புது மாவில் செய்துவிடுவோமே.

தேவையானவை:

பச்சரிசி_2 கப்
தேங்காய்ப்பூ_சுமார் 10 டீஸ்பூன்கள்
சர்க்கரை_தேவைக்கு
உப்பு_சிறிது

அரிசியைக் குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறவைத்து,நீரை வடிகட்டி,மிக்ஸியில் நைஸாக இடித்து இட்லிப்பானையில் வைத்து அவித்து,பிறகு மாவை உதிர்த்துவிட்டு,சிறிது உப்பு சேர்த்து,அதில் கொஞ்சங்கொஞ்சமாக warm water சேர்த்து முறுக்கு மாவைப்போல் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவேண்டும்.

மாவு அவிக்கும்போது நன்றாக வெந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் மாவு இடியாப்ப அச்சில் வெளியே வராது.மாவு நன்றாக வெந்திருந்தால் அச்சில் சரசரவென வந்துவிடும்.

மாவை அவித்தும் சரியாக வேகாமல் இருந்தால் மாவில் சிறிது தண்ணீர் தெளித்து மைக்ரோ அவனில் முதலில் ஒரு 30 செகண்ட் வைத்து எடுத்து ஒருமுறை பிசைந்துவிட்டு மீண்டும் ஒரு 30 செகண்ட் வைத்து எடுத்தால் சரியாகிவிடும்.

இட்லிப் பானையை அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதி வருவதற்குள் இடியாப்ப அச்சில் மாவைப் போட்டு,இட்லித்தட்டில் ஈரத்துணியைப்போட்டு படத்திலுள்ளதுபோல் பிழிந்துவிடவும்.

இரண்டு இட்லித்தட்டுகள் இருந்தால் வசதியாக இருக்கும்.ஒன்று வெந்துகொண்டிருக்கும்போதே மற்றொன்றில் பிழிந்து ரெடியாக வைத்துக்கொள்ளலாம்.

தண்ணீர் கொதி வந்ததும் இடியாப்பத் தட்டை/ இட்லித்தட்டை இட்லிப் பானையில் வைத்து மூடவும்.ஏற்கனவே மாவு வெந்திருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும்.மூடியைத் திறந்து இடியாப்பத்தைத் தொட்டுப் பார்த்து,கைகளில் ஒட்டாமலிருந்தால் எடுத்துவிடலாம்.

எடுத்து ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே நூல் பிரிப்பதுபோல் பிரித்து உதிர்த்துவிடவும்.துண்டுதுண்டுகளாக உடைத்துவிட வேண்டாம்.அப்படி செய்தால் உருண்டைஉருண்டையாக இருக்கும்.

இப்போது ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தேங்காய்ப் பூ,சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு  ஃபோர்க் ஸ்பூனால் சாப்பிடவேண்டியதுதான்.ஒவ்வொருவராக சாப்பிடுவதானால் இவ்வாறு செய்யலாம்.

அல்லது மொத்தமாக செய்வதானால் எல்லாவற்றையும் செய்து அப்போதைக்கப்போது உதிர்த்துவிட்டு,எல்லாவற்றிற்குமாக சேர்த்து தேங்காய்ப்பூ,சர்க்கரை சேர்த்து கலக்கலாம்.

இது ஈஸியா டைஜஸ்ட் ஆகக்கூடியது.முக்கியமா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.

இடியாப்பம்

தேவையான பொருட்கள்
பச்சரிசி –  2கப்புகள்
உப்பு -1 சிட்டிகை
தேங்காய்- 1/2 மூடி
பால் – 1 கப்
சர்க்கரை – தேவையான அளவு
ஏலக்காய் – 1
செய்முறை:

பச்சரிசியை சுமார் 2 மணி நேரத்திற்கு ஊறவைத்து வடிகட்ட வேண்டும். பிறகு  சிறிது  ஈரப்பதத்துடனே மிக்சியில் பொட்டு ஈர மாவாக இடித்துக் கொள்ளவும். பின் இட்லி பானையை அடுப்பில் ஏற்றி ஒரு இட்லி கொத்தில் துணியைப் போட்டு மாவை நன்றாக அவிக்கவேண்டும். மூடியைத்திறந்து மாவை கைகளால் தொட்டால் ஒட்டக் கூடாது. அந்தப் பதத்தில் மாவை இறக்கி உதிர்த்து ஆற வைக்க வேண்டும்.ஆறியதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இளஞ் சூடான தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். மீண்டும் இட்லி பானையை அடுப்பில் ஏற்றிவிட்டு ஒரு இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு சிறிது மாவை இடியாப்ப அச்சில் போட்டு தட்டு முழுவதும் பிழிந்து விட வேண்டும். பின் அதை இட்லிப் பானையில் வைது வேக விட வேண்டும். ஆவி வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி தேங்காய்ப்பாலை விட்டு சாப்பிட சுவையோ சுவை. இல்லை எனில் காய்கறி குருமா அல்லது கோழி குருமா சேர்த்து சாப்பிடலாம்.

தேங்காய்ப் பால் செய்முறை:

பாலைக் காய்ச்சவும்.தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு இளஞ்சூடான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து முதல் பால் பிழிந்து எடுத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை அறைத்து இரண்டாம் பாலையும் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். இதை பாலுடன் கலந்து சர்க்கரை,பொடித்த எலக்காய் சேர்த்து கலக்கவும்.

குறிப்பு:

மாவை பிசைந்த பிறகு கைகளால் தொட்டால் ஒட்டக் கூடாது. ஒட்டினால் மாவு நன்றாக வேகவில்லை என்று அர்த்தம்.எனவே மாவில் சிறிது நீர் தெளித்து மைக்ரோ அவனில் ஓரிரு மணித்துளிகள் வைத்து எடுக்கவும்.