தேங்காய்,ரவை பர்பி

தேவையானப் பொருள்கள்:

ரவை_1 கப்

தேங்காய்ப் பூ_2 கப்

சர்க்கரை_2 கப்

முந்திரி_10

நெய்_1/4 கப்

ஏலக்காய்_1

தண்ணீர்_2 கப்

செய்முறை:

ரவை,தேங்காய்ப் பூ இவற்றை  தனித்தனியாக ஒவ்வொரு ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.மேலும் சிறிது நெய் ஊற்றி முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காயைப் பொடிதுக்கொள்ளவும்.

ஒரு கெட்டியான பாத்திரத்தில் தண்ணீர்,சர்க்கரை எடுத்துக்கொண்டு அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும்.நல்ல கம்பிப்பதம் வர வேண்டும்.(ஒரு கரண்டியில் சிறிது பாகை எடுத்து இரண்டு விரல்களில் தொட்டு உருட்டி விரல்களைப் பிரித்தால் விரல்களுக்கிடையே கம்பி போன்று வர வேண்டும்.இதுதான் கம்பிப் பதம்.)

இப்போது ரவையை சிறிது சிறிதாக பாகில் கொட்டிக் கட்டி இல்லாமல் கிளற வேன்டும்.அடுத்து தேங்காய்ப் பூவை அதேபோல் கொட்டிக்கிளறவும்.தீ மிதமாக இருக்கட்டும்.ஏலப் பொடியைத் தூவி இடையிடையே நெய் ஊற்றிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.கொஞ்ச நேரம் கழித்து கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.அதுதான் சரியான பர்பி பதம்.அப்போது கலவையை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும்.வறுத்த முந்திரியைத் தூவி அலங்கரித்து ஆற வைக்கவும்.கொஞ்சம் ஆறியதும் ஒரு கத்தியால் சதுரமாகவோ(அ)டைமன்ட் வடிவத்திலோ துண்டுகள் போடவும்.நன்றாக ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில்(அ)பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும்.

இப்போது மிகவும் சுவையான,இனிப்பான,சாஃப்டான தேங்காய்,ரவை பர்பி தயார்.

சேமியா,ரவா கேசரி

தேவையான பொருள்கள்:

சேமியா_1 கப்

ரவை_1 கப்

சர்க்கரை_3 கப்புகள்

குங்குமப்பூ_சிறிது

ஏலக்காய்_1

முந்திரி_10

திராட்சை_10

நெய்_1/2 கப்

செய்முறை:

முதலில் சேமியா,ரவை இரண்டையும் தனித்தனியாக சிறிது நெய் ஊற்றி வறுத்துக்கொள்ளவும்.அதே பாத்திரத்தில் 4 கப்புகள் தண்னீர் ஊற்றி,குங்குமப் பூவையும் போட்டு சூடுபடுத்தவும்.(ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் சேமியா,ரவை நன்றாக வேகும்.)

ஒரு கொதி வந்ததும் முதலில் சேமியாவைக் கொட்டிக் கிளறவும்.அது வெந்து வரும்போது ரவையைக் கொட்டிக் கிளறவும்.கட்டித் தட்டாமல் பார்த்துக்கொள்ளாவும்.இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து வெந்து வரும்போது சர்க்கரையைக் கொட்டிக் கிளறு.இப்போது கேசரி நீர்க்க ஆரம்பிக்கும்.விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.இடையிடையே சிறிது சிறிதாக நெய்யை விட்டுக் கிளற வேண்டும்.எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வெந்த பிறகு இறக்கி ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.அல்லது அதே பாத்திரத்திலும் வைக்கலாம்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரி,திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்துக் கேசரியில் கொட்டி (நெய்யுடன் சேர்த்து) பரப்பி விட்டு துண்டுகள் போடலாம்.

குறிப்பு:

நான் இதில் food color சேர்க்கவில்லை.விருப்பமானால்  சேர்த்துக்கொள்ளலாம்.

இனிப்பு வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , , . Leave a Comment »

சோமாஸ்

 

தேவை:

மேல் மாவிற்கு:

மைதா_ 2 கப்
உப்பு_தேவையான அளவு

பூரணம் செய்வதற்கு:

ரவை_1 கப்
பொட்டுக்கடலை_1/2 கப்
சர்க்கரை_1 கப்
முந்திரி_10
ஏலம்_1
கசகசா_1 டீஸ்பூன்
தேங்காய் பூ_1 டீஸ்பூன்(விருப்பமானால்)
எண்ணெய்_பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மேல் மாவு செய்தல்:

முதலில் மைதா மாவுடன் உப்பைப் போட்டு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும்.பூரி மாவுப் பதத்தில் இருக்க வேண்டும்.

பூரணம் செய்தல்:

வெறும் வாணலியில் ரவை,பொட்டுக்கடலை,முந்திரி,கசகசா இவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். தேங்காய்ப் பூ போடுவதாக இருந்தால் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.இவை அனைத்தும் ஆறியதும் இவற்றுடன்  சர்க்கரை,பொடித்த ஏலம் போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.இப்போது பூரணம் தயார்.

இப்போது மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து பூரிக்குத் தேய்ப்பது போல் தேய்த்து அதை சோமாஸ் கரண்டியில் வைத்து தேவையான பூரணத்தையும் வைத்து  ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி கரண்டியை அழுத்தி மூட வேண்டும். கரண்டியை மூடிய பிறகு ஓரத்தில் உள்ள அதிகப்படியான மாவை எடுத்து விட வேண்டும்.இப்போது கரண்டியைத் திறந்து சோமாஸை எடுத்து மூடி வைக்கவும்.இது போலவே எல்லா மாவையும் போட்டு  வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து சோமாஸை ஒவ்வொன்றாகவோ(அ)எண்ணெய் கொண்ட மட்டும் போட்டு ஒருபுறம் சிவந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் சிவந்ததும் எடுத்து விடவும்.ஆறியதும் கண்ணாடி டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பொருளங்கா உருண்டை

   peanut ballspeanut balls

தேவை:

வேர்க்கடலை_2 கப்
வெல்லம்_ஒன்றரை கப்
பொட்டுக்கடலை_1/2 கப்
எள்_2 டீஸ்பூன்
அரிசி மாவு_1 கப்

செய்முறை:

வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். பொட்டுக்கடலை,எள் இவற்றை மிதமான சூட்டில் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காய் பொடித்துக்கொள்ளவும்.இவை எல்லாவற்றையும் வெறும் வாணலியில்தான் வறுக்க வேண்டும்.வறுத்த பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.

பாகு காய்ச்சுதல்: கல்பதம்

கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பிலேற்றவும். வெல்லம் கரைந்து நுரைத்துக் கொண்டு வரும்.சிறிது கவனமாக இருக்கவேண்டும்.இல்லை என்றால் பாகு தீய்ந்துவிட வாய்ப்புண்டு.

ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூனால் பாகிலிருந்து சிறிது எடுத்து தண்ணீரில் விட்டு கைகளால் உருட்டி எடுத்து ஒரு எவர்சில்வர் தட்டில் போட்டால் டங்கென்று சத்தம் வரவேண்டும்.அதுதான் கல்பதம்.

இப்போது பாகை அடுப்பில் இருந்து இறக்கி கடலை கலவையில் ஊற்றி மத்தின் அடிப்பகுதியால் நன்றாகக் கிளற வேண்டும்.

நல்ல சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்க வேண்டும்.அவ்வாறு பிடிக்கும்போது வெல்லம்  பிசுபிசுவென கையில் ஒட்டும்.மேலும் கலவை சூடாகவும் இருக்கும்.எனவே அரிசி மாவை தூவிக்கொண்டே உருண்டை பிடிக்க‌ வேண்டும்.  இப்போது நல்ல சத்தான, சுவையான சுமார் 15 உருண்டைகள் தயார்.

ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு மாலை வேளையில் சாப்பிடக் கொடுக்கலாம்.

இந்தக் குறிப்பினை ஃபாயிசாவின் ‘Passion On Plate Giveaway Event – Feb 10th – March -20th’க்கு அனுப்புகிறேன்.