ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா/Rice sticks upma

 

படத்திலுள்ளதுபோல் நிறைய வெரைட்டியில்  Rice sticks கிடைக்கும்.ஒரு பாக்கெட்டில் 3 அல்லது 4 bundles இருக்கும்.இதை வைத்து சாதாரண உப்புமா,கிச்சடி,கலவை சாதங்கள் செய்வது போலவும் வெரைட்டி சேவை  செய்யலாம்.

இவற்றை நூடுல்ஸ் போல நீளமாகவோ அல்லது உடைத்துவிட்டு நம்ம ஊர் சேமியா போலவோ பயன்படுத்தலாம். உடைத்து விடும்போது ஒரு ப்ளாஸ்டிக் கவரில் வைத்து செய்ய வேண்டும்.இல்லையென்றால் சுற்றிலும் சிதறும்.

தேவையானவை:

Rice sticks_ஒரு bundle ல் பாதி
சின்ன வெங்காயம்_5
விருப்பமான காய்கள்_பீன்ஸ்_10,கேரட்_1 சிறியது (நான் சேர்த்தது)
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறு துண்டு
உப்பு_தேவைக்கு
எலுமிச்சை சாறு_சிறிது
கொத்துமல்லி இலை

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
முந்திரி (போட மறந்தாச்சு)
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

Rice sticks ஐ அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு சேர்த்து ஒரு 20 நிமி வைக்கவும்.அப்போதுதான் ஊறி சாஃப்டாக இருக்கும்.பிறகு நீரை வடித்துவிட்டு ஒரு இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும்.சீக்கிரமே வெந்துவிடும். வெந்ததும் எடுத்து உதிர்த்துவிடவும்.அல்லது ஊறிய Rice sticks ஐ அப்படியேகூட‌ சேர்க்கலாம்.

இதற்கிடையில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி இவற்றை நறுக்கி வைக்கவும்.கேரட்,பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். அடுத்து கேரட்,பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து ,(ஏற்கனவே  Rice sticks ல் உப்பு சேர்த்துள்ளோம்) காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.

காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள Rice sticks ஐப் போட்டு forks ஐப் பயன்படுத்திக் கிளறிவிடவும்.எல்லாம் கலந்து  ரைஸ் ஸ்டிக்ஸ் நன்றாக சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

தேங்காய் சட்னி,வெஜ்&நான்வெஜ் குருமா தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

கினோவா உப்புமா (Quinoa upma)

இதுவும் மற்ற உப்புமாவைப்போல் சாதாரணமாக செய்யகூடியதுதான்.என்ன! வேக சிறிது நேரம் கூடுதலாக எடுக்கும்.

தேவையானப் பொருள்கள்:

கினோவா_ஒரு கப்
சின்ன வெங்காயம்_7
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறிது
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய் ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் கினோவாவை வெறும் வாணலியில் நன்கு சூடுவர வறுத்துக்கொள்ளவும்.அடுத்து வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து, வெங்காயம், பச்சை  மிளகாய், இஞ்சி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி ஒன்றுக்கு இரண்டு என் தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் கினோவாவைக் கொட்டி,உப்பு போட்டுக் கிளறிவிட்டு மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.வேகும் வரை இடையிடையேத் திறந்து கிண்டி விடவும்.கினோவா நன்றாக வெந்து வரும்போது எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இதற்கு நல்ல காரமானத் தேங்காய் சட்னிதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

சேமியா உப்புமா

 

 

தேவையானப் பொருள்கள்:

சேமியா_2 கப் அளவிற்கு
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்_2
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ண்ய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்.

சேமியாவை வெறும் வாணலியில் சூடுவர வறுத்துக்கொள்.அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கி மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மூடி வேக வை.ஒரு கொதி வந்ததும் திறந்து சேமியாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறு.தீ மிதமாக இருக்கட்டும்.மூடி வேக வை.சிறிது நேரம் கழித்து தண்ணீர் வற்றியதும் எலுமிச்சை சாறு விட்டு கொத்துமல்லி தூவி ஒரு முறை கிளறி இறக்கு.

இதற்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

குறிப்பு:

சேமியா உப்புமாவிற்கு தண்ணீர் சேர்க்கும்போது ரவைக்கு சேர்ப்பதை விட கொஞ்சம் குறைவாக சேர்க்க வேண்டும்.

ஓட்ஸ் உப்புமா (steel cut oats )

 

இது சாதாரன ரவை உப்புமா மாதிரிதான் செய்ய வேண்டும்.கொஞ்சம் பிசுபிசுப்பு இருக்கும்.ஆனால் ஓட்ஸை வறுத்து செய்யும்போது நல்ல வாசனையாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும். விருப்பமானக் காய்கறிகளையும் சேர்த்து செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:
ஓட்ஸ்_ 2 கப்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10 வரை
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்_2
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:
வெறும் வாணலியில் ஓட்ஸை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்.வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.பிறகு நறுக்கி வைத்துள்ள் வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி 4 கப்புகள் (ஒன்றுக்கு இரண்டு என) தண்ணீர் ஊற்றி கலக்கி உப்பு சேர்த்து மூடி கொதி வரும் வரை வேக விடு.
கொதி வந்ததும் திறந்து ஓட்ஸை சிறிது சிறிதாக சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.முழுவதும் சேர்த்த பிறகு நன்றாகக் கிளறி விட்டு மிதமானத் தீயில் மூடி வேக விடு.வேகும் வரையில் இடையிடையே அடிப் பிடிக்காதவாறு அடிக்கடி கிளறிவிடவும்.நன்றாக வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கொத்துமல்லி தூவி,எலுமிச்சை சாறு விட்டு இறக்கு.

இதனுடன் தேங்காய் சட்னி,மாங்காய் ஊறுகாய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கோதுமை உப்புமா

தேவையானவை:

உடைத்த கோதுமை_2 கப்
சின்ன வெங்காயம்_5
பச்சை மிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி(விருப்பமானால்)
தக்காளி_1/4 பாகம்
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
முந்திரி_5
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.கோதுமையை நன்றாக சூடு வர வறுத்துக்கொள்ளவும். வெங்காயம்,இஞ்சி இவற்றைப் பொடியாகவும்,பச்சை மிளகாயை நீள வாக்கிலும் நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்க உள்ளப் பொருள்களைத் தாளித்து  வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி,பட்டாணி சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டு என 4 கப்புகள் தண்ணீரை அளந்து ஊற்றவும்.மிதமானத் தீயில் மூடி போட்டு வேக விடவும்.

சிறிது நேரம் கழித்துத் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.அப்போது பட்டாணி வெந்துவிட்டதா எனப் பார்த்து அது வெந்தவுடன் கோதுமையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.இது ரவை மாதிரி கட்டித் தட்டாது.எனவே பொறுமையாகவேக் கிளறலாம்.நன்றாகக் கிளறி உப்பு சேர்த்து மூடி மீண்டும் வேக வைக்கவும். அடிப் பிடிக்காதவாறு பார்த்துக்கொள்ளவும்.நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லித் தூவி இறக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னிதான் பெஸ்ட் காம்பினேஷன்.

அவல் உப்புமா

தேவையானப் பொருள்கள்:

அவல்_2 கப்
சின்ன வெங்காயம்_5
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்_ஒரு துளி
கடலைப்பருப்பு_1 டீஸ்பூன்
வேர்க்கடலை_2 டீஸ்பூன்
முந்திரி_3
பச்சை மிளகாய்_1
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

முதலில் அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவிவிட்டு  தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து  ஊற வைக்கவும்.(மஞ்சள் தூள் சேர்ப்பதாக இருந்தால் அவல் ஊறும்போதே சேர்க்கவும்.) சீக்கிரமே ஊறிவிடும்.சுமார் ஒரு 5 நிமிடம் போதுமானது.நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.அவலைப்  பிழிந்தெடுத்தால்  குழையக் கூடாது.ஊறாமலும் இருக்கக்கூடாது.இவ்வாறு இருந்தால்தான் உப்புமா கட்டிகளில்லாமல் பொலபொலவென்று நன்றாக வரும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வங்கியதும் அவலை சேர்த்துக் கிளறவும்.தீ மிதமாக இருக்கட்டும்.அவல் ஏற்கனவே ஊறி இருப்பதால் தண்ணீர் சேர்க்கக் கூடாது.அவலில் ஏற்கனவே உப்பும் சேர்த்திருப்பதால் ஒரு துளி மட்டும் லேசாக தெளித்து விடவும்.அவல் சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி இலைத் தூவி இறக்கவும்.இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி.

நீண்ட நேரம் அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டாம்.மேலும் மூடியும் போட வேண்டாம்.அவ்வாறு செய்தால் குழைந்து விடும்.

குறிப்பு:

அவல் ஊறும் போதே உப்பு சேர்த்தால்தான் நன்றாக இருக்கும்.செய்முறையைப் பார்ப்பதற்குத்தான் நீளமாக உள்ளது.ஆனால் செய்வது மிகவும் சுலபம்.

இங்கு கறிவேப்பிலையை fresh   ஆக பார்ப்பதே அதிசயம்.சில சமயங்களில்தான் அவ்வாறு கிடைக்கும்.அப்படி கிடைத்தபோதுதான் ஒரு ஆர்வக்கோளாறில் ஒரு முழு குச்சியைப் போட்டுவிட்டேன்.

உப்புமா வகைகள், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 2 Comments »

இட்லி உப்புமா

தேவை:

இட்லி_5
சின்ன வெங்காயம்_5
கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
பெருங்காயம்_ துளி
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_சிறிது
உப்பு_துளி
எண்ணெய்_1 டீஸ்பூன்

செய்முறை:

இட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கடலைப் பருப்பு, பெருங்காயம்,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.

பிறகு சின்ன வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கி இட்லி உதிரியைக் கொட்டிக் கிளறி சூடேறியதும் இறக்கவும்.

குறிப்பு:

இட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் வெங்காயத்திற்கு மட்டும் உப்பு சேர்க்கவும்.இட்லியும் ஏற்கனவே வெந்து இருப்பதால் சூடேறியவுடன் இறக்கிவிடலாம்.