ப்ரோக்கலி , உருளை & வேர்க்கடலை பொரியல்

20150120_124052

ப்ரோக்கலி என்றாலே சிலருக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால் அதனுடன் இதுமாதிரி உருளை, கடலை போன்றவற்றை சேர்த்து சமைத்தால் சாப்பிடாதவர்களும் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்

தேவையானவை:

ப்ரோக்கலி _ 1
சிறிய உருளைக்கிழங்கு _ 1
அவித்த வேர்க்கடலை _ ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
பூண்டுப்பல் _ மூன்றுநான்கு
தேங்காய்ப் பூ
கொத்துமல்லி தழை
உப்பு _ தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல்நீக்கியோ அல்லது அப்படியேவோ சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும்.

அவித்த வேர்க்கடலையைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.

ப்ரோக்கலியை நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

பூண்டுப்பல்லை தட்டிக்கொள்ளவும்.

இவை எல்லாம் தயாரானவுடன், அடுப்பில் வாணலை ஏற்றித் தாளித்துவிட்டு, தட்டி வைத்துள்ள பூண்டு போட்டு வதக்கிகொண்டு ப்ரோக்கலி, உருளை, வேர்க்கடலை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது வதக்கிவிட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீரை தெளித்தாற்போல் விட்டு மூடி வேகவிட‌வும்.

உருளையும், வேர்க்கடலையும் ஏற்கனவே வெந்திருப்பதாலும், ப்ரோக்கலி சூடு பட்டாலே வெந்துவிடும் என்பதாலும் தண்ணீர் அதிகம் தேவையிராது.

தண்ணீர் சுண்டி மிளகாய்த்தூள் வாசனை போனதும் தேங்காய்ப்பூ & கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

ஸ்டஃப்டு சப்பாத்தி/Stuffed chapathi

தேவையானவை:

கோதுமைமாவு_2 கப்
பட்டர்(அ)எண்ணெய்_சிறிது
தயிர்_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

ஸ்டஃபிங்கிற்கு:

உருளைக்கிழங்கு_2
சின்ன வெங்காயம்_நான்கைந்து
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறிது
பூண்டிதழ்_1
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
எலுமிச்சை சாறு_சிறிது
கொத்துமல்லி இலை_கொஞ்சம்
வறுத்துப் பொடித்த சீரகத்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

செய்முறை:

ஒரு வாணலை அடுப்பிலேற்றி பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை நிறுத்திவிட்டு கோதுமை மாவை போட்டு நன்றாக்கிளறிவிட்டு தயிர் சேர்த்து,உப்பு சேர்த்து ப்ரெட் க்ரம்ஸ் மாதிரி பிசறி விட‌வும்.பிறகு சிறிதுசிறிதாக வெந்நீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி நான்கைந்து மணி நேரம் வைக்கவும்.அல்லது கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்துகொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்துவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.

பச்சைமிளகாய்,சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இஞ்சி,பூண்டு தட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு வதக்குவதக்கி மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து,கொத்துமல்லி தூவி, எலுமிச்சை சாறு விட்டு சீரகத்தூள் சேர்த்து அடுப்பை நிறுத்திவிடவும்.

மசாலாவை நன்றாகப் பிசைந்துவிட்டு சிறு எலுமிச்சை அளவு உருண்டகளாக்கிக்கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றவும்.பிறகு பிசைந்துவைத்துள்ள மாவில் ஒரு எலுமிச்சை அளவு மாவு எடுத்து சிறு வட்டமாகத் தட்டிக்கொண்டு அதில் ஒரு உருண்டை மசாலாவை வைத்து மூடி,மூடிய பகுதியை கீழ்ப்புறம் வைத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொண்டு போளிக்குத் தட்டுவதுபோல் கொஞ்சம் மெல்லியதாகத் தட்டவும்.

அல்லது பூரிக்கட்டையால் மெதுவாக,மசாலா வெளியே வந்துவிடாதவாறு உருட்டவும்.

மசாலா சப்பாத்தி முழுவதும் பரவியிருக்க வேண்டும்.அப்போதுதான் சாப்பிடும்போது நன்றாக இருக்கும்.

தோசைக்கல் சூடேறியதும் தட்டி வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும்,மேலாகவும் சிறிது எண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.

முதல்முறை செய்வதாக இருந்தால் சப்பாத்தி முழுவதையும் போட்டு வைத்துக்கொண்டு சுட்டெடுக்கவும்.அல்லது ஒன்றிரண்டு செய்யும்போதே வேகம் வந்துவிடும்.

உருளைக்கிழங்கிற்கு பதில் வெந்தயக்கீரை அல்லது முள்ளங்கி வைத்தும் செய்யலாம்.

தொட்டு சாப்பிட குருமா இல்லையென்றாலும் கெட்சப்புடன்,அதுவும்கூட வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.நன்றாக இருக்கும்.

பேக்(ட்)டு உருளைக்கிழங்கு/Baked potato


தேவையானவை:

உருளைக்கிழங்கு_2
ஆலிவ் ஆயில்_ஒன்றிரண்டு டீஸ்பூன்
உப்பு(Sea salt)_கொஞ்சம்

ஃபில்லிங்/filling செய்ய‌

வெண்ணெய்(Butter)_ஒரு சிறு துண்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம்
வெங்காயத்தாள்_1
துருவிய‌ ஷார்ப் செடார் சீஸ்/Shredded sharp cheddar cheese_கொஞ்சம்
சல்ஸா/Salsa_2 டீஸ்பூன் அளவிற்கு
Sour cream_கொஞ்சம்

உருளைக்கிழங்கை முதலில் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்.ஒரு சிறு அழுக்கோ,சொத்தையோ இல்லாமல் ஒரு ப்ரஷ்ஷால் நன்றாகத் தேய்த்துக் கழுவ‌ வேண்டும்.

துணி துவைக்கும் ப்ரஷ் வாங்கும்போதே நான்கைந்தாக வாங்கி வைத்துக்கொண்டால்,தோலுடன் சமைக்கக்கூடிய உருளை, கேரட், முள்ளங்கி,வள்ளிக்கிழங்கு போன்றவற்றைத் தேய்த்துக்கழுவ பயன்படுத்திக்கொள்ளலாம்.

கிழங்கைத் தோலுடனே   சாப்பிடப்போகிறோம் என்பதால்தான் இத்தனை சுத்தம் தேவைப்படுகிறது.

கழுவிய பிறகு ஈரம்போகத் துடைத்துவிட்டு ஒரு ஃபோர்க் ஸ்பூனால்/Fork spoon அங்கங்கே குத்திவிட்டு எண்ணெயைக் கிழங்கு முழுவதும் தடவிவிட்டு,உப்பையும் போட்டுத் தேய்த்துவிடவும்.ஆலிவ் எண்ணெயும், உப்பும் சேர்ந்து சாப்பிடும்போது க்ரிஸ்பியாக‌ இருக்கும்.

படத்திலுள்ளதுபோல் அவனில் நடு வரிசையில்/Middle rack ல் வைத்து 350 டிகிரியில் ஒரு மணி நேரம் பேக்/ Bake செய்யவும்.கிழங்கிற்கு கீழே உப்பு,எண்ணெய் சிந்தாமலிருக்க Aluminum foil அல்லது குக்கீ ஷீட்/cookie sheet  வைக்கவும்.இடையில் 1/2 மணி நேரம் கழித்து கிழங்கை ஒருமுறைத் திருப்பிவிட‌வும்.

கிழங்கு வெந்துவிட்டதா எனத் தெரிந்துகொள்ள கிழங்கை லேசாக அழுத்திப்பார்து அமுங்கினால் எடுத்துவிடலாம்.தோலின் நிறம்கூட‌ மாறியிருக்கும்.

வெந்த பிறகு வெளியே எடுத்து மேல் பகுதியில் கத்தியால் லேசாக நீளவாக்கில் கீறி விடவும்.

பிறகு கிழங்கின் இரண்டு பக்கமும் பிடித்து லேசாக அழுத்தி அதில் பட்டரை வைத்து அதன்மேல் சல்ஸா,சோவ‌ர் கிரீம்,வெங்காயம்,வெங்காயத்தாள்,சீஸ் என ஒவ்வொன்றாக வைத்து ஒரு அலுமினம் ஃபாயிலால் சுருட்டி ஃபோர்க் ஸ்பூனால் கலந்து சாப்பிட சுவையோ சுவைதான்.

முழு கிழங்கு,ஃபில்லிங் எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

பேக்(ட்)டு உருளைக்கிழங்கு சிப்ஸ்/Baked potato chips

  

 தேவையானவை:

உருளைக்கிழங்கு_1
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
ஆலிவ் ஆயில்_ஒரு டீஸ்பூன்
உப்பு_சிறிது

செய்முறை:

உருளையை நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டு சிப்ஸ் கட்டையில் வைத்து வில்லைகள் போடவும்.இதற்கு கத்தியைக்கூடப் பயன்படுத்தலாம்.ஆனால் வில்லைகள் ஒரே அளவாக வருமாறு பார்த்துக்கொள்ளவும். இல்லையென்றால் ஒவ்வொன்றின் வேகும் நேரமும் வேறுபடும்.

ஒரு தட்டில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலந்துகொண்டு,அதில் உருளை வில்லைகளைப்போட்டுப் புரட்டி,மிளகாய்த்தூள் எல்லா பகுதிகளிலும் சீராகப் படுமாறு செய்யவும்.

இவ்வாறு செய்த பிறகு எண்ணெயை வில்லகளின்மேல் பரவலாக ஊற்றிக் கிளறி ஒரு பௌளில் வைத்து மூடி ஃப்ரிட்ஜில் ஒரு 1/2 மணி நேரம் வைக்கவும்.

அவனை 350 டிகிரிக்கு சூடுபடுத்தவும்.பேக்கிங் ட்ரேயில் அலுமினம் ஃபாயிலைப்போட்டு ஒவ்வொரு வில்லையாக அடுக்கி அவனில் வைத்து பேக் செய்யவும்.

ஒரு 10 நிமி கழித்த பிறகு வெளியே எடுத்து வில்லைகளைத் திருப்பிவைக்கவும். இவ்வாறே அடுத்தடுத்து 8 லிருந்து 10 நிமிடத்திற்கு இரண்டுமூன்று தடவைத் திருப்பிவிடவும்.

அடுத்து நான்கைந்து நிமிடங்களுக்கு இரண்டுமூன்று தடவை அல்லது தேவைப்படும் நேரத்திற்கு ஒருமுறை திருப்பிவிடவும்.

கடைசியில் கொஞ்சம் கவனமாக‌ இருக்க வேண்டும்.இல்லையென்றால் தீய்ந்துபோக வாய்ப்புண்டு.

ஒவ்வொரு முறை ட்ரேயை வெளியில் எடுக்கும்போதும் சிவந்து, வெந்திருக்கும் ஒருசிலவற்றை எடுத்துவிடவும்.

கடைசியில் எல்லா சிப்ஸும் சிவந்த பிறகு ட்ரேயை வெளியில் வைத்து ஆறவிடவும்.

கொஞ்சம் இருக்கட்டுமே என்று ஸ்விட்ச் ஆஃப் செய்தபிறகு அவனிலேயே விட வேண்டாம்.கருகிவிடும்.

இப்போது சுவையான,கரகரப்பான பேக்(ட்)டு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.நன்றாக ஆறிய பிறகு எடுத்து சாப்பிடவும்.

உருளைக்கிழங்கு & ப்ரோக்கலி & பச்சைப்பயறு பொரியல்

 

தேவையானவை:

உருளைக்கிழங்கு _1
ப்ரோக்கலி_1
முழு பச்சைப் பயறு_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_5
பூண்டிதழ்_3
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முழு பச்சைப் பருப்பை முதல் நாளிரவே ஊறவைத்து விடவும்.அல்லது முளை கட்டிய பயறு என்றாலும் நன்றாகவே இருக்கும்.சமைக்கும்முன் ஒரு பாத்திரத்தில் போட்டு  அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து அரை பதமாக‌ வேக வைத்து நீரை வடித்து வைக்கவும்

உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி நீரை வடிக்கவும்.வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து விட்டு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்அது வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்

கூடவே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்

உருளை நன்றாக சிவந்து வந்ததும் வெந்த பச்சைப் பயறு,புரோக்கலியைச் சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் மூடி மிதமானத் தீயில் வேக விடவும்

எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும்  இறக்கவும்.தேவையானால் சிறிது தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்க்கலாம்.செய்யும்போது இவை இரண்டும்  இல்லாததால் நான் சேர்க்கவில்லை.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வறுவல்_2

உருளைக்கிழங்கு வறுவல் இதற்குத்தான் சைட்டிஷ் என்றில்லை. எல்லா வகையான சாதத்திற்கும் பொருந்த்தும். சமயங்களில் உருளையுடன் வெங்காயம்,தக்காளி சேர்த்து செய்வதுண்டு.ஆனால் இப்போது காமாக்ஷி அம்மாவின் உருளைக்கிழங்கு வதக்கலைப் பார்த்து எள்,இஞ்சி என சேர்த்து செய்தேன். அருமையாக வந்தது.

தேவையானவை:

உருளைக்கிழங்கு_2
சின்ன வெங்காயம்_7
இஞ்சி_சிறு துண்டு
பூண்டு_5 பல்
பச்சைமிளகாய்_1
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
எள்_1/2 டீஸ்பூன்
தயிர்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கிழங்கை வேக வைத்து தோலை உரித்துவிட்டு விருப்பமான வடிவத்தில் அரிந்து வைக்கவும்.

இஞ்சி,பூண்டு தட்டிக்கொண்டு,வெங்காயம் அரிந்து வைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி சூடேறியதும் எள்ளைப் போட்டு சூடாகியதும் ஒரு கிண்ணத்தில் தனியாக வைக்கவும்.

அடுத்து அதே வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதற்கடுத்து உருளை,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும். இவை வதங்கும்போதே தயிர் சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வைக்கவும்.

உருளைக்கிழங்குடன் மசாலா எல்லாம் நன்றாகக் கலந்து சிவந்து வரும்வரை இடையிடையேக் கிளறிக்கொடுத்து,இறுதியாக‌ வறுத்த எள்ளைச் சேர்த்து  இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக‌ இருக்கும்.

உருளைக்கிழங்கு,பெரும்பயறு,புரோக்கலி பொரியல்

தேவையானப் பொருள்கள்:

உருளைக்கிழங்கு_1
பெரும்பயறு_ஒரு கைப்பிடி
புரோக்கலி_1
பூண்டுப் பல்_2
சின்ன வெங்காயம்_3
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன் (தேங்காய் இல்லாததால் சேர்க்கவில்லை)
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கருவேப்பிலை

செய்முறை:

பெரும்பயறை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்.

உருளை,புரோக்கலி இவற்றை விருப்பமான வடிவத்தில்  நறுக்கிக்கொள்ளவும்.சிறு துண்டுகளாக இருந்தால் பயறுடன் பார்க்கும்போது ஒரே அளவாக இருக்கும்.

ஒரு பேனில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து விட்டு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அது வதங்கியதும் உருளைக்கிழங்கு,வெந்த பயறு சேர்த்து வதக்கவும்.

கூடவே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

இவை ஒன்றாகக் கலந்து வெந்ததும் புரோக்கலியைச் சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் மூடி மிதமான தீயில் வேக விடவும்.

புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.வெந்ததும்  தேங்காய்ப் பூ,கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இது சாதம்,சப்பாத்தி இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

குடை மிளகாய் & உருளைக்கிழங்கு பொரியல்

தேவையானப் பொருள்கள்:

உருளைக் கிழங்கு_1
குடைமிளகாய்_1
பூண்டு_2 பற்கள்
மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2  டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை

குறிப்பு:

குடைமிளகாயையும்,உருளைக்கிழங்கையும் ஒன்றாக வதக்கி வேக வைத்தால் மிளகாயின் நிறம் மாறி இருக்கும்.எனவே முதலில் மிளகாயை வதக்கி எடுத்துக்கொண்டு பிறகு உருளைக்கிழங்கு வெந்தபிறகு சேர்த்தால் அதன் பச்சை நிறம் அப்படியே இருக்கும்.இதனை எந்த மிளகாயில் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

செய்முறை:

குடைமிளகாயைக் கழுவி சுத்தம் செய்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.

உருளைக் கிழங்கை விருப்பமான வடிவத்தில் ந‌றுக்கி நீரில் போட்டு வைக்கவும்.பூண்டு உரித்து நறுக்கி/தட்டி வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு குடைமிளகாயைப் போட்டு,சிறிது உப்பு போட்டு  வதக்கவும்.வதங்கியதும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கி அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.பாதி வெந்த நிலையில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு மீண்டும் மூடி வேக வைக்கவும்.

உருளைக்கிழங்கு  நீர் வற்றி,நன்றாக ‌வெந்ததும் வதக்கி வைத்துள்ள குடைமிளகாயைச் சேர்த்துக் கிளறிவிடவும்.

உருளைக்கிழங்கும்,குடைமிளகாயும் நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.

இது எல்லா வகையான சாத‌த்திற்கும் நன்றாக இருக்கும்.

கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு பொரியல்

தேவையானப் பொருள்கள்:

கேரட்_பாதி
பீன்ஸ்_10
உருளைக்கிழங்கு_1
சின்ன வெங்காயம்_2
மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
வேக வைத்து பிழிந்த துவரம் பருப்பு_கொஞ்சம் (இல்லையென்றால் பரவாயில்லை)
கொத்துமல்லி இலை_ஒருகொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

காய்களைக் கழுவிவிட்டு அவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

தாளித்து முடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி காய்களைச் சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு காய் வேகும் அளவு தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

சில உருளைக்கிழங்குகள் சீக்கிரமே வெந்துவிடும்.அவற்றை கேரட்&பீன்ஸ் பாதி வெந்த நிலையில் சேர்த்துக் கிளறிவிடவும்.

எல்லாம் நன்றாக வெந்தபிறகு வெந்த பருப்பு சேர்த்துக் கிளறிவிட்டுக் கலந்ததும் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

சமோசா

 

தேவை:

Medium Wonton Wraps_1
உருளைக்கிழங்கு_1
பச்சைப்பட்டாணி_1/2 கப்
பெரிய வெங்காயம்_1
பச்சை மிளகாய்_1
இஞ்சி_1 சிறிய துண்டு
பூண்டு_2
மிளகாய் தூள்_1/2 டீஸ்பூன்
சீரக தூள்_1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து
எண்ணெய்_ சமோசா பொரிக்கத் தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_1 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
முந்திரி_5

செய்முறை:

சமோசா மேல் மாவிற்கு மாவைப் பிசைந்து,உருட்டி செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும்.சிலர் கடைகளில் கிடைக்கும்  Samosa sheet  ஐப் பயன்படுத்துவார்கள்.அதற்கு பதிலாக சைனீஸ் கடைகளில் கிடைக்கும்  Medium  Wonton Wraps   ஐப் பயன்படுத்தலாம்.இதை பயன்படுத்துவதும் எளிது. ஒரு பாக்கெட்டில் சுமார் 75 sheets   இருக்கும்.நாம் செய்யப்போகும் மசாலா அளவு சுமார் 25 சமோசாக்களுக்கு போதுமானதாக இருக்கும். மீதமுள்ள sheets  ஐ  fridge  ல்  வைத்துக்கொண்டால் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்த sheet  ல்  1  ஸ்பூன் அளவுதான் மசாலா வைக்க முடியும். 2 bite size  ஆக இருக்கும்.ஒரு முறை முயற்சி செய்தால் மறுமுறையும் இதையேதான் பயன்படுத்துவீர்கள்.

பச்சைப் பட்டானியை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்.உருளைக் கிழங்கை வேகவைத்து,தோல் உரித்து,சிறு துண்டுகளாக நறுக்கவும்.வெங்காயத்தை நீளவாகிலும்,பச்சை மிளகாயைப் பொடியாகவும் நறுக்கவும்.இஞ்சி,பூண்டை தட்டி வைக்கவும்.

ஒரு பாதிரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெருஞ்சீரகம்,முந்திரி தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கியதும் பட்டாணி, உருளை சேர்த்து கிளறி மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும்.எல்லாம் கலந்து வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு,சிறிது சீரகத்தூள் (விருப்பமானால்), கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

மசாலா ஆறியதும் sheet ல் ஒன்றை எடுத்து அதில் மசாலா வைத்து ஓரத்தில் தண்ணீர் தடவி அழுத்தி மூட வேண்டும்.இதை வேண்டிய வடிவங்களில் செய்துகொள்ளலாம்.இதுபோல் தேவையானதை செய்து fridge ல் வைத்துக்கொள்ளவும். வெளியில் காற்றுப்பட வைத்தால் காய்ந்து ஈரப்பதம் இல்லாமல் போய்விடும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் செய்து வைத்துள்ள சமோசாவை ஒவ்வொன்றாகவோ (அ)எண்ணெய் கொண்ட மட்டும் போட்டு ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.இதை தேங்காய் சட்னி, ketchup, மற்றும் புளிப்பு,இனிப்பு சட்னியுடன்  உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.