உருளைக் கிழங்கு & காலிஃப்ளவர் பொரியல்

 

தேவையானவை:

உருளைக்கிழங்கு_1
காலிஃப்ளவர்_1(சிறியது)
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

காலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிரித்து ஒரு 2 நிமிடங்களுக்கு உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும்.

பூண்டிதழ்களை நறுக்கிக்கொள்ளவும்.அல்லது ஒரு தட்டுதட்டி சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு கடாயை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுச் சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,முதலில் பூண்டு சேர்த்து வதக்கி,அடுத்து உருளைத் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சிறிது உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து  (அ) சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு (அ) சிறிது கூடுதலாக எண்ணெய் சேர்த்துக்  கிளறி மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.

உருளை வெந்ததும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுத்து அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காலிஃப்ளவரைப் போட்டு வதக்கி சிறிது மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,சிறிது உப்பு இவற்றைத் தூவினாற்போல் போட்டு மூடி வேகவிடவும்.

இது சீக்கிரமே வெந்துவிடும்.வெந்ததும் இதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறிவிட்டு ஒரு 5 நிமி மிதமானத் தீயில் மூடி வைக்கவும்.

இரண்டும் ஒன்றாக கலந்து வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

புரோக்கலி & உருளைக் கிழங்கு பொரியல்

புரோக்கலியில் சாம்பார்,குருமா,கூட்டு,பொரியல் என எது செய்தாலும் நன்றாக இருக்கும். அதனை தனியாகவோ,மற்ற காய்களுடனோ சேர்த்து சமைக்கலாம்.

தேவையானப் பொருள்கள்:

உருளைக் கிழங்கு_1
புரோக்கலி_1
பூண்டு_2 பற்கள்
மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

உருளைக் கிழங்கை விருப்பமான வடிவத்தில் ந‌றுக்கி நீரில் போட்டு வைக்கவும்.

பூண்டை உரித்து நறுக்கி/தட்டி வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கி அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.பாதி வெந்த நிலையில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு மீண்டும் மூடி வேக வைக்கவும்.

உருளைக்கிழங்கு  நன்றாக ‌வெந்ததும் புரோக்கலியை சேர்த்துக் கிளறிவிடவும்.புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.அதற்கென தனியாக தண்ணீர்,மசாலா எதுவும் சேர்க்க வேண்டாம்.

உருளைக்கிழங்கும்,புரோக்கலியும் நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.

இது எல்லா வகையான சாத‌த்திற்கும்,சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

உருளைக் கிழங்கு வறுவல்

தேவையானப் பொருள்கள்:

உருளைக் கிழங்கு_4
பூண்டு_3 பற்கள்
மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

        

இந்த சிறுசிறு உருளைக் கிழங்குகளை (yukon gold)  farmers market லிருந்து வாங்கும்போது புதிதாக,ஈர‌ மண்ணுடன் இருந்தது.மற்ற உருளையை விட இதற்கு கொஞ்சம் அதிகமானத் தண்ணீரும்,வேக கொஞ்சம் கூடுதலான நேரமும் ஆனது.ஆனால் நல்ல சுவையாக இருந்தது.

உருளைக் கிழங்கை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் போடவும்.பூண்டை உரித்து நறுக்கியோ அல்லது தட்டியோ வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கி கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.

பாதி வெந்த நிலையில் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு மீண்டும் மூடி வேக வைக்கவும்.நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

குறிப்பு:

இதனுடன் வெங்காயம்,தக்காளி சேர்த்தும் செய்யலாம்.தாளித்தவுடன் வெங்காயம்,பூண்டு வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அடுத்து உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி அடுத்ததெல்லாம் மேலே கூறியுள்ளபடி செய்தால் போதும்.காரம் கொஞ்சம் கூடுதலாகத் தேவைப்படுமாதலால் மிளகாய்த் தூள் மட்டும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பூரி & கிழங்கு

IMG-20150315-WA0005

பூரி செய்யத் தேவையானப் பொருள்கள்:

கோதுமை மாவு_3 கப்
ரவை_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பூரி சுடத் தேவையான அளவு

செய்முறை:

முதலில் ரவை நன்றாக ஊறும்  அளவிற்கு தண்ணீர் விட்டு ஒரு 2 நிமி ஊற வைத்து பிசைந்துகொள்.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,உப்பு எடுத்துக்கொண்டு கைகளால் நன்றாகக் கலந்துகொண்டு,அதில் பிசைந்த ரவையைப் போட்டு,சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.மாவு பிசைந்த உடனேயே பூரியை சுட்டு விட வேண்டும்.அதிக நேரம் வைத்திருந்தால் பூரி சிவந்துவிடும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவில் இருந்து சிறு எலுமிச்சை அளவிற்கு எடுத்து கைகளால் உருட்டி கோதுமை மாவில் புரட்டி பூரி கட்டையில் வைத்து சிறு வட்டமாகத் தேய்த்து (சப்பாத்தியை விட சிறிது கனமாக) எண்ணெயில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி வீட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.சிவக்க விட வேண்டாம்.இதுபோல் ஒவ்வொரு பூரியாக சுட்டு எடு.

மசாலா கிழங்கு செய்யத் தேவையானப் பொருள்கள்:

உருளைக் கிழங்கு_ 2 (அ) 3
பச்சைப் பட்டாணி_ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம்_10 (அ) பெரிய வெங்காயம்_1
தக்காளி_பாதி
பச்சை மிளகாய்_1
இஞ்சி_மிகச்சிறிய துண்டு
பூண்டு_ஒரு பல்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_ ஒரு டீஸ்பூன்
பிரிஞ்சி இலை_1
சீரகம்
உளுந்து
கடலைப் பருப்பு
முந்திரி_2
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_ஒரு கொத்து

செய்முறை:

பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வை.இப்போது பட்டாணியை வேக வை.உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ஆறியதும் ஒன்றும் பாதியுமாக கைகளால் பிசைந்து வை..வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி பொடியாக நறுக்கி வை.இஞ்சி,பூண்டு தட்டி வை.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கு.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கு.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கு.அது வதங்கியதும் மஞ்சள்தூள்,உருளைக் கிழங்கு,பட்டாணி சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீர்,உப்பு சேர்த்து மிதமானத் தீயில் கொதி வரும் வரை மூடி வை. நீண்ட நேரம் கொதிக்க வேண்டாம். கொதி வந்ததும் 1/2 டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவை எடுத்து சிறிது நீர் விட்டுக் கரைத்து மசாலாவில் ஊற்றினால் கிழங்கு தனித்தனியாக இல்லாமல் எல்லாம் ஒன்றாகக் கலந்திருக்கும்.நன்றாகக் கிளறி விட்டு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கு.

குறிப்பு:

வெறும் கோதுமை மாவில் பூரி செய்தால் சிறிது நேரத்தில் பூரி அமுங்கிவிடும்.அதனுடன் ரவையைச் சேர்த்தால் எவ்வளவு நேரமானாலும் அமுங்காமல் அப்படியே இருக்கும்.

உருளைக் கிழங்கு,வெந்தயக்கீரைப் பொரியல்

குழந்தைகள் உருளைக் கிழங்கு பொரியல் என்றால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.அதுவே கீரை என்றால் சாப்பிடக் கொஞ்சம் (நிறையவே) அடம் பிடிக்கத்தான் செய்வார்கள்.அப்பொழுது இதுபோல் அவர்களுக்குப் பிடித்தமான காய்களில் கீரையைச் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம்.எந்தக் கீரையை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

தேவையானவை:

உருளைக் கிழங்கு_1 (பெரியது)
வெந்தயக் கீரை_ஒரு கைப்பிடி(உருவியது)
சின்ன வெங்காயம்_1
பூண்டு_3 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.உருளைக் கிழங்கை விருப்பமான வடிவத்தில் சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் போடவும்.இல்லை என்றால் உருளையின் நிறம் மாறிவிடும்.அடுத்து வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து முதலில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு உருளையைச் சேர்த்து வதக்கவும்.அடுத்து மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு போட்டுக் கிளறித் தேவையானத் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து மிதமானத் தீயில் வேகவிடவும்.

கிழங்கு வெந்த பிறகு கீரையைச் சேர்த்துக் கிளறி விடவும்.மூடி போட வேண்டாம்.கீரை விரைவிலேயே வெந்துவிடும்.கீரை,கிழங்குடன் சேர்ந்து சுருள வதங்கியதும் இறக்கவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

 

உருளைக் கிழங்கு சாதம்

தேவையானப் பொருள்கள்:

அரிசி_1 கப்
உருளைக் கிழங்கு_1 (சிறியதாக இருந்தால் 2)
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_1 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ ஒரு கொத்து

வறுத்து அரைக்க:

கசகசா_1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
கொத்துமல்லி விதை_1 டீஸ்பூன்
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
சின்ன வெங்காயம்_1

தாளிக்க:

சீரகம்_1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை_5 இலைகள்
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை நன்றாக வேக வைத்து ஆற வைக்கவும்.உருளையை வேக வைத்து தோலுரித்து சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வெறும்  வாணலியில்  கசகசா,பெருஞ்சீரகம்,காய்ந்த மிளகாய்,கொத்துமல்லி விதை இவற்றை தனித்தனியாகப் போட்டு வறுத்துக்கொள்ளவும்.கடைசியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு,வெங்காயம் இவற்றை வதக்கவும். இவை அனைத்தும் ஆறியதும் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயம் போட்டு உருளைக்கிழங்கு,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,சிறிது உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைக்கவும்.

மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம்,கறிவேப்பிலைத் தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி நன்றாக வதக்கவும்.தேங்காய்ப் பாலையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமானத் தீயில் வதக்கவும்.நன்றாக வதங்கியதும் வறுத்து வைத்துள்ள உருளைக் கிழங்கை சேர்த்து ஒரு கிளறு கிளறி சாதத்தையும் சேர்த்துக் கிளறி,எலுமிச்சை சாறு கலந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

பாவ் பாஜி

 

தேவையான பொருள்கள்:

பாவ் ப்ரெட்_ 1 பாக்கெட் (சுமார் 9)
உருளைக் கிழங்கு_1
பச்சை பட்டாணி_ 1/2 கப்
கேரட்_பாதி
பெரிய வெங்காயம்_1
தக்காளி_ 1
பச்சை மிளகாய்_1
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_ 3 பற்கள்
பெருங்காயம்_ ஒரு துளி
கொத்துமல்லி இலை_ 1/4 கட்டு
சீரகம்_ 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_ 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள்_ 2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
பட்டர்_ஒரு சிறிய துண்டு
எலுமிச்சை_பாதி

பாவ் ப்ரெட் எல்லா இந்தியன் கடைகளிலும் கிடைக்கும்.அல்லது Hamburger (or) hotdog bun  பயன்படுத்தலாம்

மசாலா செய்முறை:

உருளை,பச்சை பட்டாணி,கேரட் அல்லது விருப்பமான காய்களை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.இஞ்சி,பூண்டை தட்டி வைக்கவும்.

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சீரகம்,பெருஞ்சீரகம் லேசாக வறுத்து பொடித்து வைக்கவும்.அதே வாணலியில் சிறிது பட்டர் போட்டு வெங்காயம் வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு பேஸ்ட்,பச்சை மிளகாய் வதக்கவும்.பிறகு தக்காளி வதக்கி அத்துடன் மிளகாய் தூள்,பெருங்காயம்,உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றவும்.(மசாலா தீய்ந்து பொகாமல் இருப்பதற்கு).ஒரு கொதி வந்ததும் காய்கறிகளை நன்றாக பிசைந்து சேர்த்து கிளறவும். காய்கள் குழைந்து வெந்து இருக்க வேண்டும்.பிறகு சீரகம் & பெருஞ்சீரகப் பொடியைப் போட்டு கிளறி கொத்துமல்லி இலை தூவி எலுமிச்சை சாறு விட்டு இறக்கவும்.

 

ஒரு தோசைக் கல்லில் சிறிது பட்டர் விட்டு பாவ் பாஜி பன்னை இரண்டாகப் பிளந்து டோஸ்ட் செய்து  எடுத்து விட்டு,அதே கல்லில் மசாலாவைப் போட்டு சூடாக்கி வெங்காயம் கலந்து பன்னின் ஒரு பாகத்தில் வைத்து மறு பாகத்தை மேல் வைத்து சாப்பிடலாம்.