புஸு புஸு உளுந்து வடை

 

எங்க ஊர் பக்க்ம் உளுந்து வடை என்றாலே உளுந்து அளவுக்கு புழுங்கல் அரிசியும் சேர்ப்பார்கள். அப்போதுதான் வடை வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும், கூடவே சுவையாகவும் இருக்கும் என்பதால்.

முன்பெல்லாம் உளுந்து வடை செய்வதென்றாலே மனதளவில் நான்கைந்து நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும். உளுந்துகூட அரைச்சிடலாம், ஆனால் அந்த புழுங்கல் அரிசியை கெட்டியாக அரைப்பதுதான் சிரமம்.

ஒருமுறை என் சகோதரி கொடுத்த ஐடியாபடி பச்சரிசியை இடிப்பதுபோல் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, வடிகட்டி மிக்ஸியில் இடித்து மாவாக்கி சேர்த்தேன், சுலபமாக இருந்தது.

அதன்பிறகு கொஞ்சம் நாள் கழித்து இன்னொரு ஐடியா கொடுத்தார். இதுதான் இப்போது நான் செய்வது. எளிதாகவும் உள்ளது. அது அது அது …… வாங்க பார்க்கலாம் :)))

அரைக்கத் தேவையானவை :

உளுந்து _ இரண்டு கப்

பெருஞ்சீரகம்  _ சிறிது

அரைத்த உளுந்து மாவில் கலக்கத் தேவையானவை:

இட்லி மாவு _ இரண்டு கை . ஒரு கப் உளுந்துக்கு ஒரு கை என (புதிதாக அரைத்தது அல்லது பழைய மாவு என்றாலும் பரவாயில்லை)

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் _ தேவைக்கு

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் _ இரண்டுமூன்று

பொடியாக நறுக்கிய இஞ்சி _ கொஞ்சம்

பெருங்காயம்

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை :

ஊற வைப்பது தோலுடன் கூடிய உளுந்து என்றால் தோல் எளிதாக பிரியும்வரை ஊறவைத்து (எனக்கு இங்கே மூன்றிலிருந்து நான்கு மணி நேரமாவது பிடிக்கும்) கழுவி கொஞ்சம் தண்ணீருடன் (அரைக்கும்போது பயன்படுத்த) ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

வெள்ளை முழு உளுந்து என்றால் ஊற வைக்கும்போதே கழுவிவிட்டு ஊற வைக்கவும். (இங்கே எனக்கு இரண்டிலிருந்து இரண்டரை  மணி நேரம்வரை பிடிக்கும்). ஊறியதும் கொஞ்சம் தண்ணீருடன் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு வெளியில் எடுத்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு  கூடவே பெருஞ்சீரகத்தையும் போட்டு நன்றாக அரைக்கவும். தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து மைய அரைக்கவும். தண்ணீர் அதிகமானால் மாவு நீர்த்துவிடும். நீண்ட நேரம்  அரைத்தாலும் மாவு அமுங்கிவிடும்.

கிரைண்டர் என்றால் தள்ளிவிட்டுவிட்டு அரைக்கணும். மிக்ஸி என்றால் நிறுத்தி நிறுத்தி ஓட விட்டு தள்ளிவிட்டு அரைக்கணும். எதுவாக இருந்தாலும் பதமாக அரைக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து போட்டுக்கொண்டு, அதனுடன் இட்லி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்கி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து கொடப்பினாற்போல் கலக்கவும்.  உப்பு, காரம்  சரி பார்த்துக்கொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வலது கையைத் தண்ணீரில் நனைத்துக்கொண்டு, மாவில் கொஞ்சம் எடுத்து, உருட்டி கட்டை விரலால் நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போடவும்.

இதேபோல் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும். இப்படியே எல்லா மாவையும்  வடைகளாக சுடவும்.

இப்படியே செய்தால் துளி எண்ணெயும் குடிக்காமல் வரும். விருப்பமான பாயசத்துடன் சுவைக்கவும்.

கடைசி மாவை கொஞ்சம் போண்டா மாதிரியும் போட்டுக் கொள்ளலாம்.

வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 6 Comments »

முறுக்கு

முறுக்கு செய்வதில் இது ஒரு முறை.மெஷினில் கொடுத்து அரைக்கும்போது சூட்டினால் முறுக்கின் நிறம் மாறும்.இந்த முறையில் செய்யும்போது நல்ல நிறத்தில் இருக்கும்.

செய்முறையைப் பார்க்கும்போது ஏதோ பெரிய வேலை போல் தோன்றும். பருப்பை நன்றாக‌ வேக வைத்து எடுத்தால் வேலை முடிந்தது.சரியாக வேகாமலிருந்தால் முறுக்கு கடக்முடக் என கடிக்க வேண்டியிருக்கும்.

தேவையானவை:

1) வெள்ளை உளுந்து _ ஒரு பங்கு

(அல்லது)

உடைத்த பச்சைப்பயறு_ஒரு பங்கு

(அல்லது)

இரண்டும் கலந்து ஒரு பங்கு (எந்த விகிதத்தில் வேண்டுமானாலும்)

2)   அரிசிமாவு_5 பங்கு

3)   அடுத்து வழக்கம்போல் முறுக்கிற்கு தேவையான ஓமம், எள், பெருங்காயம், உப்பு என சேர்த்துக்கொள்ளலாம்.

கீழே உள்ள செய்முறையில் நான் சேர்த்தது:

உளுந்து _ 1/2 கப்
பச்சைப்பயறு_ 1/2 கப்
அரிசிமாவு_5 கப்
ஓமம்_சிறிது
எள்_கொஞ்சம்
பெருங்காயம்_சிறிது
உப்பு _தேவைக்கு

செய்முறை:

உளுந்து,பச்சைப்பயறு இரண்டையும் தனித்தனியாக திட்டமாக தண்ணீர் ஊற்றி குழைய வேக வைக்கவும்.

இரண்டின் வேகும் நேரத்தில் வித்தியாசம் இருப்பதால் தனித்தனியாக வேக வைக்க வேண்டும்.ஒரு பருப்பு மட்டும் போட்டல் இந்தப் பிரச்சினை இல்லை.

வெந்ததும் இரண்டையும் கைகளால் நன்றாக மசித்துவிட்டு மாவு கலக்கும் தட்டில் வைக்கவும்.

அதனுடன் அரிசிமாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.

இப்போது தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து முறுக்கு பிழியும் பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

விருப்பமானால் தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தும் பிசையலாம்.நல்ல வாசனையுடன் சுவையாக இருக்கும்.

அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து முறுக்குக்குழலில் விருப்பமான அச்சைப்போட்டு நேராக எண்ணெயிலோ அல்லது உங்கள் விருப்பம் போல் பிழிந்தோ வேக வைத்து எடுக்கவும்.

இப்போது சுவையான, கரகரப்பான,மொறுமொறுப்பான முறுக்குகள் தயார்.

உளுந்து வடை (மற்றொரு வகை)

தேவையானப் பொருள்கள்:

உளுந்து_ 2 கப்

சின்ன வெங்காயம்_ 10

பச்சை மிளகாய்_2

இஞ்சி_ஒரு சிறிய துண்டு

பெருஞ்சீரகம்_சிறிது

பெருங்காயம்_ஒரு துளி

கறிவேப்பிலை_கொஞ்சம்

கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

உப்பு_தேவையான அளவு

கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.

உளுந்து நன்றாக ஊறியதும் கழுவிவிட்டு,நீரை வடித்துவிட்டு குறைந்தது 1/2 மணி நேரமாவது ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

உளுந்து அரைக்க ஃப்ரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் மாவு நிறைய காணும்.

பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டு லேசாகத் தண்ணீர் தெளித்து  அரைக்கவும்.

அரைக்கும்போதே பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.

இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும்.குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.

மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.அதேசமயம் பஞ்சுபோல் இருக்க வேண்டும்.

நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.

இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி, பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக அடித்து + கொடப்பி  பிசையவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி  சூடேற்றவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.

எண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.

மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.

இவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

வடைக்கு தோல் உளுந்து அல்லது வெள்ளை உளுந்து இரண்டையுமே பயன்படுத்தலாம்.

எனினும் தோல் உளுந்து வெள்ளை உளுந்தைவிட நன்றாக இருக்கும்.

மிக்ஸியைவிட கிரைண்டரில் அரைத்தால்தான் வடை நன்றாக இருக்கும்.

பச்சைப் பருப்புப் பாயசம்

பாயசம் ப‌ல வகைகளில் செய்வதுண்டு.அதில் ஒன்றுதான் பச்சைப் பருப்புப் பாயசம். உளுந்து வடை செய்தால் அதன் பக்க உணவான பாயசம்,சாம்பார் அல்லது தேங்காய் சட்னி இவை இருந்தால்தான் வடை சாப்பிட்ட திருப்தியே வரும்.இன்று பச்சைப் பருப்புப் பாயசம் செய்வதைப் பற்றிப் பார்க்கலாம்.

தேவையானப் பொருள்கள்:

பச்சைப் பருப்பு_1/2 கப்
வெல்லம்_1/2 கப் (அ) சுவைக்கேற்ப‌
பால்_1/2 கப்
ஏலக்காய்_1
முந்திரி_10
திராட்சை_10
நெய்_முந்திரி,திராட்சை வறுக்கும் அளவு
குங்குமப்பூ_10 இதழ்கள்

செய்முறை:

முதலில் பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும்.பிறகு பாயசம் வைக்கும் பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு இரண்டு தரம் தண்ணீரில் கழுவிவிட்டு அதில் இரண்டு கப்புகள் தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் ஒரு கரண்டியால் மசித்துவிட்டு வெல்லத்தைப் பொடித்து அதில் சேர்த்துக் கிளறி விடவும்.வெல்லம் கரைந்த பிறகு பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலத்தூள்,குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாகியதும் முந்திரி,திராட்சை வறுத்து பாயசத்தில் கொட்டவும்.சுவையான பச்சைப் பருப்பு பாயசம் தயார்.

பாயசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஸ்பூனால் சாப்பிடலாம். அல்லது வடையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இன்னும் அப்பளத்துடன் சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.

உளுந்து வடையின் செய்முறையைக் காண‌ இங்கே செல்லவும்.

உளுந்து சட்னி

தேவையானப் பொருள்கள்:

தோல் உளுந்து_ஒரு கைப்பிடி
தேங்காய் கீற்று_3
காய்ந்த மிளகாய்_2
புளி_சிறு கோலி அளவு
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வெறும் வாணலியில் உளுந்து,மிளகாய் இரண்டையும் கருகாமல் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

பிறகு தேங்காய்,மிளகாய் இரண்டையும் முதலில் அரைத்துவிட்டு பிறகு உளுந்து,புளி,உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

அடுத்து தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து சட்னியில் கொட்டிக் கலக்கி விடவும்.இப்போது வாசனையுள்ள,சுவையான சட்னி தயார்.

இது இட்லி,தோசை,சாதம்  இவற்றிற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

சிவப்பரிசி இட்லி (Rose matta rice idli)

சிவப்பரிசியில் புழுங்கல் அரிசியாகப் பார்த்து வாங்க வேண்டும்.இதற்கும் புழுங்கல் அரிசி மாதிரியேதான் அளவு,மாவு அரைப்பது,கரைத்து வைப்பது எல்லாம்.ஆனால் அரிசி நன்றாக ஊறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.எனவே முதல் நாளிரவே ஊற வைத்துவிட வேண்டும்.

தேவையானப் பொருள்கள்:

சிவப்பரிசி_4 கப்
உளுந்து_1/4 கப்
வெந்தயம்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும்,வெந்தயத்தையும் தனித்தனியாக‌ முதல் நாளிரவே,தூங்கச் செல்வதற்கு முன் ஊற வைத்து விட வேண்டும்.அடுத்த நாள் காலையில் உளுந்தை ஊற வைக்கவும்.குறைந்தது 4 மணி நேரமாவது ஊற வேண்டும். பிறகு தோலியைக் கழுவிவிட்டு ஃபிரிட்ஜில் சுமார் ஒரு 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும்.மாவு அரைப்பதற்கும் ஃபிரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் உளுந்து நிறைய மாவு காணும்.

மாவு அரைக்கும்போது முதலில் உளுந்தையும்,வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.குறைந்தது 1/2 மணி நேரமாவது அரைக்க வேண்டும்.இடையிடையே தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு,மாவைக் கையில் எடுத்துப் பார்த்தால் நுரைத்துக் கொண்டு இருக்கும்,அப்போது  ஒரு பாத்திரத்தில் வழித்து கைகளால் நன்றாகக் கொடப்பி வைக்கவும். அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.

அடுத்து அரிசியைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.மாவு கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் இருக்க வேண்டும்.புழுங்கல் அரிசிக்கு தேவைப்படும் தண்ணீரை விட இதற்கு கொஞ்சம் அதிகமாகத் தேவைப்படும்.நன்றாக அரைத்த பிறகு (இதற்கும் சுமார் 1/2 மணி நேரம் பிடிக்கும்.) வழித்து உளுந்து மாவுடன் சேர்த்து உப்பு போட்டு நன்றாகக் கொடப்பி கரைத்து வைக்கவும்.

அடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும்.வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். சிறிது இளஞ் சிவப்பாக, பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவைத் தனியாக எடுத்து, சிறிது நீர் விட்டுக் கரைத்து தோசையாக வார்க்கலாம்.

நமக்கு விருப்பமான சாம்பார்,சட்னி,புளிக் குழம்பு,அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.

மைசூர் போண்டா

தேவையானப் பொருள்கள்:

உளுந்து_ ஒரு கப்
கடலைப் பருப்பு_1/2(அ) 1 கப்
மிளகு_1 டீஸ்பூன்
தேங்காய்_ஒரு துண்டு (சிறுசிறு பல்லாக நறுக்கிக்கொள்ளவும்)
இஞ்சி_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

உளுந்து,கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊறி இருக்க வேண்டும். நன்றாக ஊறிய பிறகு தோலி இல்லாமல் கழுவி நீரை வடித்து விட்டு உளுந்தை மட்டும் ஃபிரிட்ஜில் ஒரு அரை மணி நேரத்திற்கு வைத்திருந்து, பிறகு வெளியே எடுத்து கிரைண்டரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் சுமார் அரை மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.நல்ல பஞ்சு போல் பந்தாக வரும்.அப்போது  ஒரு பாத்திரத்தில் வழித்து நன்றாக அடித்துக் கொடப்பி வைக்கவும்.அதே கிரண்டரில் கடலைப் பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றாமல் மைய அரைக்கவும்.இந்த மாவை உளுந்து மாவுடன் சேர்த்து, மேலும் மிளகு,தேஙகாய்,இஞ்சி,பெருங்காயம்,உப்பு இவற்றையும் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து மாவில் இருந்து சிறுசிறு உருண்டை அளவிற்கு எடுத்து லேசாக உருட்டி எண்ணெயில் போடவும். வேகும்போதே கரண்டியால் திருப்பி விட்டு வெந்து சிவந்ததும் எடுத்து விடவும்.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு எடுத்து சூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

உளுந்து போண்டா

தேவையானப் பொருள்கள்:

உளுந்து_ ஒரு கப்
மிளகு_ஒரு டீஸ்பூன்
தேங்காய்_ஒரு துண்டு (சிறுசிறு பல்லாக நறுக்கிக்கொள்ளவும்)
பெருங்காயம்_துளி
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.உடைத்த கறுப்பு உளுந்துதான் நன்றாக மாவு காணும்.வெள்ளை உளுந்து என்றால் போண்டா அந்த அளவுக்கு சாஃப்டாக இருக்காது.

உளுந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊறியிருக்க வேண்டும்.நன்றாக ஊறிய பிறகு தோலி இல்லாமல் கழுவிவிட்டு சிறிது நீர் விட்டு ஒரு அரை மணி நேரத்திற்குக் குறையாமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.பிறகு உளுந்திலுள்ள  நீரை வடித்துவிட்டு வெறும் உளுந்தை மட்டும் கிரைண்டரில் போட்டு மைய அரைக்கவும்.அவ்வப்போது தண்ணீரைத் தொட்டுக்கொண்டு மாவைத் தள்ளிவிட வேண்டும்.தண்ணீர் சேர்த்தால் மாவு நீர்த்து விடும்.போண்டாவிற்குப் பதிலாக எண்ணெய் குடித்து விட்டு சப்பை வடைகளாகத்தான் வரும்.

குறைந்தது அரை மணி நேரத்திற்கும் மேலாகத்தான் அரைக்க வேண்டும். மாவைக் கையில் எடுத்தால் பஞ்சு போல் லேசாக இருக்க வேண்டும். இப்பொழுது மாவை வழித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாக அடித்து கொடப்ப வேண்டும்.அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.இதனுடன் மிளகு,தேங்காய்,பெருங்காயம்,உப்பு இவற்றை சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.அது சூடேறியதும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு மாவில் இருந்து ஒரு பெரிய கோலி அளவிற்கு உருட்டி எண்ணெயில் போடவும்.இது போல் எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.ஒரு பக்கம் வெந்ததும் கரண்டியால் திருப்பி விட்டு மறுபக்கமும் வெந்து சிவந்ததும் எடுத்து விடவும்.இதே போல் எல்லாவற்றையும் செய்து எடுத்து வைக்கவும்.இது மேலே நல்ல மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.இதற்கு தொட்டுக்கொள்ளத் தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

வெண் பொங்கல்&சாம்பார் செய்வதாக இருந்தால் கூடவே போண்டா&தேங்காய் சட்னியும் செய்தால் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

சிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

உளுந்து வடை

தேவையானப் பொருள்கள்:

உடைத்த கறுப்பு உளுந்து_1 கப்

புழுங்கல் அரிசி_1 கப்

சின்ன வெங்காயம்_5 லிருந்து 10

பச்சை மிளகாய்_2

இஞ்சி_ஒரு சிறிய துண்டு

பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்

பெருங்காயம்_ஒரு துளி

கறிவேப்பிலை_5

கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

உப்பு_தேவையான அளவு

கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

உளுந்து,அரிசி இரண்டையும் தனித்தனியாக நீரில் ஊற வைக்கவும்.உளுந்து நன்றாக ஊறியதும்(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீரை வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும். குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும்.அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.

அடுத்து  அரிசியைக் கழுவிக் களைந்து  அதே கிரைண்டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டியாக மைய அரைக்கவும்.அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்துப் பிசையவும்.

இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி,பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.

எண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.

இவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பக்க உணவாகப் பரிமாரலாம்.

குறிப்பு:

வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி,பச்சை மிளகாயை அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.எனவே அரிசியுடன் சேர்த்து அரைத்து விடலாம்.

முறுக்கு மாவு தயாரித்தல்

 

 

தேவை:

உளுந்து_ 1 கப்
பச்சைப் பயறு_1/2 கப்
கடலை பருப்பு_1/4 கப்
புழுங்கல் அரிசி_ 1/4 கப்
பொட்டுக் கடலை_ 1/4 கப்

செய்முறை:

மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித் தனியாக சிவக்க வறுத்து ஆற வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு மழமழவென்று அரைக்க வேண்டும்.(இரண்டு விரல்களுக்கிடையில் மாவை எடுத்து தேய்த்துப் பார்த்தால் மழமழவென்று இருக்க வேண்டும்).இதற்கு நம் ஊர் மிக்ஸி தான் எற்றது.இங்குள்ள மிக்ஸி(USA)சரியாக வராது என்றே நினைக்கிறேன்.மாவை ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து மூடி வைத்துக் கொள்ளவும். மேலே கூறிய விகிதத்தில் எவ்வளவு வேன்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்.அடுத்த பதிவில் முறுக்கு செய்வதைப் பற்றி பார்க்கலாம்.