பானகம் / Paanagam

paanagam

எங்கள் வீட்டு கொல்லியில் அப்போது சிறியதும்,பெரியதுமாக இரண்டு எலுமிச்சை மரங்கள் இருந்தன.நிறைய காய்கள் காய்க்கும்.பழங்களை பறித்து வந்து ஊறுகாய் போடுவாங்க,அக்கம்பக்கம்,எதிர்த்தவீடு என எல்லோருக்கும் கொடுப்பாங்க. கிராமத்தில் பெரும்பாலும் எல்லாப் பொருள்களையும் இப்படித்தான் பறிமாறிக் கொள்வார்கள்.

யாரும் யாரிடமும் காசு கொடுத்து வாங்குவது கிடையாது.யார் வீட்டில் என்ன அறுவடை என்றாலும் உறவுகள், தெரிந்தவர்கள் (ஊர் முழுவதுமே தெரிந்த‌வர்கள்தான்) என எல்லோருக்கும் கொடுத்தனுப்புவார்கள்.இப்போது  இதெல்லாம் இருக்கிற மாதிரி தெரியவில்லை.

எங்கள் ஊரில் பங்குனி உத்திரம் சிறப்பாக,வெகு விமரிசையாக‌ நடைபெறும். நல்ல வெயில் நேரத்தில் காவடி எடுத்து வருவார்கள்.அந்த சமயம் எங்கள் வீட்டில் நிறைய எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து பானகம் செய்து இரண்டுமூன்று பெரியபெரிய‌ அண்டாக்களில் ஊற்றி வைத்து காவடி எடுத்து வருகிற எல்லோருக்கும் கொடுப்பாங்க.அதென்னமோ அன்றுமட்டும் எனக்கு அந்த பானகம் சூப்பர் சுவையாக இருப்பதுபோல் தெரியும்.

நான் எப்போது பானகம் செய்தாலும் இந்த நினைவு வராமல் போகாது. இவை ஆரம்பப் பள்ளி நாட்கள்தான் என்றாலும் இன்னும் பசுமை மாறாமல் இருப்பதுதான் அதன் சிறப்பு.

இன்று இவர் லன்சுக்கு  வெளியில் (பிடிக்காமல்தான், வேறு வழியில்லை) சாப்பிடப் போயிருக்கிறார்.நானும் பொண்ணும் மட்டுமே வீட்டில். சாப்பாட்டு வேளையெல்லாம் தலைகீழாகிவிட்டது. இந்த மதிய நேரத்தில் பானகம் போட்டு குடிச்சாச்சு. ம்ம்ம்..சாப்பாடு?…இரண்டு மணிக்குமேல் ஆப்பம் & தேங்கய்ப்பால். மாலைதான் ஃபுல் மீல்ஸ். அதுவரை எஞ்ஜாய் சித்ரா!

நினைவுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு பானகம் செய்வதைப் பார்ப்போமே! படத்திலுள்ள பழத்தில் அந்தளவிற்கு புளிப்பு இருக்காது.எனவே ஒரு பழத்தில் இரண்டு க்ளாஸ் பானகம் செய்தேன்.நம்ம ஊர் பழம் என்றால் புளிப்பு அதிகமாக இருக்கும்.அதனால் புளிப்புக்குத் தகுந்தாற்போல் வெல்லம் & தண்ணீரின் அளவைக் கூட்டிக்கொள்ளவும்.

நான் சேர்த்திருப்பது வெள்ளை வெல்லம் என்பதால் பானகத்தின் நிறம் ப்ரௌன் நிறத்தில் இல்லாமல் கம்மியாக உள்ளது.சாதாரண வெல்லம் அல்லது பனை வெல்லம் சேர்த்தால் சூப்பர் நிறத்தில் இருக்கும்.

தேவையானவை:

எலுமிச்சம் பழம்_ 1
வெல்லம் / பனை வெல்லம் _ ஒரு துண்டு
தண்ணீர்_ இரண்டு டம்ளர் அளவிற்கு
சுக்குத்தூள்_ ஒரு துளிக்கும் குறைவாக
ஏலக்காய் தூள்_ துளிக்கும் குறைவாக‌
உப்பு _ துளிக்கும் குறைவாக (சும்மா பெயருக்குத்தான், சுவைக்கூட்ட)

செய்முறை:

எலுமிச்சம் பழத்தை விதைகள்,திப்பி இல்லாதவாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

வெல்லத்தைப் பொடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்து கல், மண் இல்லாமல் வடிகட்டிக்கொள்ளவும்.

இந்த வெல்லத் தண்ணீரில் சுக்குத்தூள்,ஏலத்தூள்,உப்பு,எலுமிச்சை சாறு விட்டு காஃபி ஆத்துவதுபோல் ஆத்தி இரண்டு டம்ளர்களில் ஊற்றி சுவைத்து குடிக்க வேண்டியதுதான்.

வெயிலுக்கு சுகமாக இருக்கும்.

இனிப்பு வகைகள், பானகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 20 Comments »

எலுமிச்சை ஊறுகாய்

தேவையானப் பொருள்கள்:

எலுமிச்சம் பழம்_2
தனி மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
வெந்தயத்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு_சிறிது
பெருங்காயம்_சிறிது

செய்முறை:

எலுமிச்சம்பழங்களைக் கழுவித் துடைத்துவிட்டு மிகச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

இத்துண்டுகளை ஒரு அடி கனமான கடாயில் போட்டு அது வேகும் அளவிற்கு சிறிது தண்ணீர்,உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

நன்றாக வெந்தபிறகு ஆற வைக்கவும்.

ஆறியதும் அதில் மிளகாய்த்தூள்,வெந்தயதுதூள் சேர்த்துக் கிளறி (கைபடாமல்) உப்பு,காரம் சரிபார்த்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடேறியதும் கடுகு,பெருங்காயம் தாளித்து கலவையைக் கொட்டி (மிதமானத்தீயில்) கிளறி, சூடேறியதும் இறக்கவும்.

இது ஒரு வாரத்திற்கு வரும்.

இது எல்லா வகையான சாத்த்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

காரம் விருப்பமானால் மிளகாய்த்தூளை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

ஊறுகாய் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

எலுமிச்சை சாதம்

 

தேவை:
அரிசி_ 2 கப்
எலுமிச்சை பழம்_2
கொத்துமல்லி இலை_ 1 கொத்து
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:

கடுகு_1/2 டீஸ்பூன்
உளுந்து_1/2 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
வேர்க் கடலை_1 கைப்பிடி
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்_1
கொத்துமல்லி தூள்_1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை_5 இலைகள்
நல்லெண்ணெய்_ 2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை சிறிது உப்பு போட்டு உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். எலுமிச்சையை இளஞ்சூடான நீரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் சாறு பிழிய எளிதாக இருக்கும்.சாறு பிழிந்து தனியாக வைக்கவும்.சாறில் தண்ணீர் ஊற்றக் கூடாது.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம்,வேர்க்கடலை,கடலை பருப்பு,காய்ந்த மிளகாய், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து மஞ்சள் தூள், கொத்துமல்லி தூள் சேர்த்து (தீ மிதமாக இருக்க வேண்டும்.இல்லை என்றால் பொருள்கள் தீய்ந்து போகும்) உடனே சாறு,உப்பு சேர்த்து தீயை நிறுத்தி விட்டு சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.பிறகு சிறிது நேரம் அடுப்பிலேயே மூடி வைக்கவும்.பிறகு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »