முறுக்கு

முறுக்கு செய்வதில் இது ஒரு முறை.மெஷினில் கொடுத்து அரைக்கும்போது சூட்டினால் முறுக்கின் நிறம் மாறும்.இந்த முறையில் செய்யும்போது நல்ல நிறத்தில் இருக்கும்.

செய்முறையைப் பார்க்கும்போது ஏதோ பெரிய வேலை போல் தோன்றும். பருப்பை நன்றாக‌ வேக வைத்து எடுத்தால் வேலை முடிந்தது.சரியாக வேகாமலிருந்தால் முறுக்கு கடக்முடக் என கடிக்க வேண்டியிருக்கும்.

தேவையானவை:

1) வெள்ளை உளுந்து _ ஒரு பங்கு

(அல்லது)

உடைத்த பச்சைப்பயறு_ஒரு பங்கு

(அல்லது)

இரண்டும் கலந்து ஒரு பங்கு (எந்த விகிதத்தில் வேண்டுமானாலும்)

2)   அரிசிமாவு_5 பங்கு

3)   அடுத்து வழக்கம்போல் முறுக்கிற்கு தேவையான ஓமம், எள், பெருங்காயம், உப்பு என சேர்த்துக்கொள்ளலாம்.

கீழே உள்ள செய்முறையில் நான் சேர்த்தது:

உளுந்து _ 1/2 கப்
பச்சைப்பயறு_ 1/2 கப்
அரிசிமாவு_5 கப்
ஓமம்_சிறிது
எள்_கொஞ்சம்
பெருங்காயம்_சிறிது
உப்பு _தேவைக்கு

செய்முறை:

உளுந்து,பச்சைப்பயறு இரண்டையும் தனித்தனியாக திட்டமாக தண்ணீர் ஊற்றி குழைய வேக வைக்கவும்.

இரண்டின் வேகும் நேரத்தில் வித்தியாசம் இருப்பதால் தனித்தனியாக வேக வைக்க வேண்டும்.ஒரு பருப்பு மட்டும் போட்டல் இந்தப் பிரச்சினை இல்லை.

வெந்ததும் இரண்டையும் கைகளால் நன்றாக மசித்துவிட்டு மாவு கலக்கும் தட்டில் வைக்கவும்.

அதனுடன் அரிசிமாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.

இப்போது தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து முறுக்கு பிழியும் பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

விருப்பமானால் தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தும் பிசையலாம்.நல்ல வாசனையுடன் சுவையாக இருக்கும்.

அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து முறுக்குக்குழலில் விருப்பமான அச்சைப்போட்டு நேராக எண்ணெயிலோ அல்லது உங்கள் விருப்பம் போல் பிழிந்தோ வேக வைத்து எடுக்கவும்.

இப்போது சுவையான, கரகரப்பான,மொறுமொறுப்பான முறுக்குகள் தயார்.

கேழ்வரகு இனிப்பு அடை/Kezhvaragu inippu adai

இந்த அடைக்கு கொழுக்கட்டை,கேழ்வரகு புட்டு செய்யும்போது மீதமாகும் பூரணத்தைப்  பயன்படுத்தலாம்.அல்லது கீழ்க்காணும் முறைப்படி வேர்க்கடலைக் கலவையைத் தயார் செய்தும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வேர்க்கடலை_2 டீஸ்பூன்
எள்_1/2 டீஸ்பூன்
வெல்லம்_2 டீஸ்பூன்(பொடித்தது)
ஏலக்காய்_1 (விருப்பமானால்)
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் வறுத்து தோல்நீக்கிய வேர்க்கடலை,வறுத்த எள், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் போட்டு  pulse ல் இரண்டு சுற்று சுற்றி இறுதியில் பொடித்த வெல்லத்தைப் போட்டு கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு துளிக்கும் குறைவாக உப்பு (சுவைக்காக),பொடித்து வைத்துள்ள வேர்க்கடலைக் கலவையை சேர்த்துக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்குப்  பிசைந்துகொள்ளவும்.

ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.அது சூடேறுவதற்குள் பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை கல்லில் போட்டு சுற்றிலும், அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிதமானத் தீயில் மூடி போட்டு வேகவிடவும்.மாவில் வெல்லம் சேர்த்திருப்பதால் தீ அதிகமாக இருந்தால் அடை தீய்ந்துவிடும்.

அடையின் ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.இதற்கு தொட்டு சாப்பிட எதுவும் தேவையில்லை.அப்படியே சாப்பிட வேண்டியதுதான்.

பிடி கொழுக்கட்டை

தேவை:

பச்சரிசி_2 கப்
வெல்லம்_2 கப்
பச்சைப் பயறு_1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பல்_1 டீஸ்பூன்(விருப்பமானால்)
எள்_1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1

செய்முறை:

பச்சைப் பயறை நன்றாக‌ சிவக்க வறுத்து ஊற வைக்கவும்.பச்சரிசியை ஊற வைத்து ஈர மாவாக இடித்துக் கொள்ளவும்.பின்பு மாவை  இட்லிப் பானையில் வைத்து அவித்தெடுக்கவும்.ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் உதிர்த்து ஆற வைக்கவும்.எள்ளை வெறும் சட்டியில் போட்டு வறுத்து மாவில் கலக்கவும்.பச்சைப் பயறையும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மாவில் சேர்க்கவும்.தேங்காயை சிறிது நெய்யில் வறுத்து மாவில் போடவும். ஏலக்காயைத் தட்டிப் போடவும்.இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

அடுத்து வெல்லத்தை ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் எடுத்து மாவில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.பாகுப் பதமெல்லாம் வேண்டாம்.எல்லாம் நன்றாகக் கலந்த பிறகு ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால் அழுத்தி மூடவும். படத்தில் உள்ளது போல் செய்துகொள்ளவும்.மேலும் உருண்டைகளாகவும் பிடித்துக்கொள்ளலாம்.இவ்வாறே எல்லாவற்றையும் செய்துகொண்டு இட்லிப் பானையில் வைத்து இட்லி அவிப்பது போல் அவிக்கவும். இனிப்பாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பூரணம் வைத்த‌ கொழுக்கட்டை

தேவை:

ப‌ச்சரிசி_2 கப்
உப்பு_சிறிது

பூரணம்:

வேர்க்கடலை‍‍‍‍‍‍‍‍‍ ‍‍_1 கப்
வெல்லம்_3/4 கப்
எள்_1 டீஸ்பூன்
ஏலக்காய்_1

செய்முறை:

அரிசியை நன்றாக ஊறவைத்து நீரை வடிய வைத்து மிக்ஸியில் போட்டு ஈர மாவாக இடித்துக்கொள்ளவும்.மாவை இட்லிப் பானையில் வைத்து அவித்துக் கொள்ளவும் (நன்றாக அவிந்த‌தா என்பதை அறிய மாவை கைகளால் தொட்டால் அது நன்றாக வெந்திருந்தால் பிசுபிசுவென கைகளில் ஒட்டாது.மாவு நன்றாக வேகவில்லை என்றால் கொழுக்கட்டை முழுதாக வராமல் உடைந்து போகும்) இப்போது மாவை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

பூரணம் தயாரித்தல்:

வேர்க்கடலையை வறுத்து தோலியை அகற்றிவிட்டு அதனுடன் பொடித்த வெல்லம்,வறுத்த எள்,பொடித்த ஏலக்காய் சேர்த்து கரகரப்பாக இடித்துக்கொளளவும்.இப்போது பூரணம் தயார்.‌

ஆற வைத்த மாவில் சிறிது உப்பைப் போட்டு இளஞ்சூடான தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

அடுத்து பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு எலுமிச்சை அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக்கி பின்னர் ஒரு கிண்ணம் போல் செய்து அதில் கொஞ்சம் பூரணத்தை வைத்து படத்தில் உள்ளது போல் மடித்து ஓரத்தை அழுத்தி விடவும்.உருண்டை மாதிரியும் செய்யலாம்

வேகவைக்குமுன்

இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொண்டு இட்லிப்பானயில் ஒரு தட்டை வைத்து அதில் ஒன்றன் மேல் ஒன்று ஒட்டாமல் அடுக்கி வேகவைக்கவும்.

வெந்த பிறகு எடுக்கவும்.மூடியைத் திறந்து தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருந்தால் வெந்துவிட்டது எனலாம்.

பூரணத்தை அவரவர் விருப்பம் போல் செய்துகொள்ளலாம்.மாவை புதிதாக இடித்து செய்தால்தான் நன்றாக,சாஃப்டாக,சுவையாக இருக்கும்.

தேன்குழல் முறுக்கு

 

தேவை:

அரிசி மாவு_ 2 கப்
உளுந்து மாவு_ 1/2 கப்
(உளுந்தை சுமார் 2  கப் அளவிற்கு எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து முந்தைய பதிவில் கூறியபடியே நைசாக அரைத்துக் கொள்ளவும்.இந்த மாவை தேன் குழல் முறுக்கிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.)
எள்_ 1 டீஸ்புன்
ஓமம்_1/2 டீஸ்புன்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு,உளுந்து மாவு இவை இரண்டையும் 2 : 1/2    என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் எள்,ஒமம்,பெருங்காயம்,உப்பு சேர்த்துக் கிளறி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.முறுக்கு குழலில் தேன்குழல் அச்சைப் போட்டு பேப்பர் டவலில் முறுக்குகளை பிழிந்து கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போட்டு இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

இதற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள உளுந்து மாவை காற்று புகாமல் எடுத்து வைத்துக்கொண்டால் வேண்டும்போது மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்

மகிழம்பூ முறுக்கு

 

தேவை:

அரிசி மாவு_ 2 கப்
முறுக்கு மாவு_1/2 கப்
எள்_1/2 டீஸ்பூன்
ஓமம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_ 5 இலைகள்
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு எல்லா இந்தியக்  கடைகளிலும் கிடைக்கும்.அதையே பயன்படுத்தலாம். அரிசி மாவு,சென்ற பதிவில் கூறியபடி தயாரித்த முறுக்கு மாவு இவை இரண்டையும்  2 : 1/2  என்ற விகிதத்தில் கலக்கவும்.

எள்,ஓமம்,கறிவேப்பிலை(கிள்ளிப்போட்டு),பெருங்காயம்,உப்பு போட்டு கையினால் கலக்கவும்.பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

மாவில் இருந்து ஒரு சிறு பகுதியைப் பிரித்தெடுத்தால் எளிதாக வர வேண்டும். இழுவையாக இருக்கக் கூடாது,அதுதான் சரியான பதம்.

இப்போது வானலியில் எண்ணெய் காய வைத்து முறுக்கு குழலில் அச்சு(மகிழம்பூ) போட்டு பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு(எண்ணெய் கொண்ட மட்டும்) இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.ஆறியதும் ஒரு கண்ணாடி டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு:

இதற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள முறுக்கு மாவை காற்று புகாமல் எடுத்து வைத்துக்கொண்டால் வேண்டும்போது மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்