ஓட்ஸ் குக்கீஸ் / Oats cookies

oats cookie

இதுநாள் வரை கடையிலிருந்து வாங்கும் ‘ரெடிமேட் மிக்ஸ்’களைப் பயன்படுத்தியே கேக்,குக்கீஸ் செய்வேன்.

இந்த முறை இங்கும் அங்கும் தேடியலைந்து  ஓட்ஸ் குக்கி செய்தேன்,சூப்பராக வந்தது.

ஓட்ஸை அப்படியே போட்டு செய்ததே வாசனையுடன் சுவையாக‌ வரும்போது,வறுத்துப் பொடித்து செய்தால் என்ன எனத் தோன்றுகிற‌து.மேலும் வெண்ணெய்,சர்க்கரையின் அளவுகளைக் கொஞ்சம் குறைத்து செய்து பதிவிடுகிறேன்.

என்னிடம் electric mixer இல்லை என்பதால் whisk & கையைப் பயன்படுத்திக்கொண்டேன்.

சேர்க்க வேண்டிய பொருள்களை தனித்தனியாக கோடு போட்டுள்ளேன். அதன்படி பிரித்து வைத்துக்கொண்டால் சேர்க்க எளிதாக இருக்கும்.

தேவையானவை:

மைதா_3/4 கப்
பேகிங் சோடா_1/2 டீஸ்பூன்
உப்பு_1/2 டீஸ்பூன்
______  _  _  _  _________
வெண்ணெய்/Unsalted butter_1/2 கப்
ப்ரௌன் சுகர்/Brown sugar_3/4  கப் (ப்ரௌன் சுகர் கைவசம் இல்லாததால் raw cane sugar சேர்த்திருக்கிறேன்.)
____________  _  _  _  ___________
முட்டை_1
Pure vanilla extract_ஒரு டீஸ்பூன்
_________________  _  _  _   _____________________
ஓட்ஸ்_3 கப்
விருப்பமான நட்ஸ்/Nuts_ஒரு கை
விருப்பமான ட்ரை ஃப்ரூட்ஸ்/Dry fruits_ஒரு கை
சாக்லெட் சிப்ஸ்/Chocolate chips_ஒரு கை

நான் ஓட்ஸுடன் உலர் திராட்சையும்,’சாக்லெட் சிப்’பும் சேர்த்திருக்கிறேன்.
___________  _  _  _   ____________________

செய்முறை:

மைதா,பேகிங் சோடா,உப்பு மூன்றையும் ஒரு பௌளில் கொட்டி விஸ்க்கால் நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும்.

பயன்படுத்தும் பட்டர் அறை வெப்பநிலையில் இருக்கட்டும்.பட்டர் மென்மையாகும்வரை  நன்றாக விஸ்க்கால் கலக்கவும்.

பிறகு அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் குழையும்வரை கலக்கவும்.

அடுத்து இதனுடன் முட்டை,vanilla extract இரண்டையும் சேர்த்து ஸ்மூத்தாக வரும்வரை நன்றாகக் கலக்கவும்.

இவற்றுடன் மைதா கலவையைக் கொட்டிக் கலக்கவும்.

எல்லாம் நன்றாக,ஒன்றாக சேர்ந்த பிறகு ஓட்ஸ்,நட்ஸ்,ட்ரை ஃப்ரூட்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து விஸ்க்கால் கலக்கிவிட்டு ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

ஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

ஒருமுறை கலவையை கையாலேயே மென்மையாகப் பிசைந்துகொள்ளவும்

ஒரு baking sheet ல் parchment paperஐ  போட்டு 1/4 கப் அல்லது ஒரு குழிவான கரண்டி அல்லது ice cream scoop அல்லது கையாலேயே சிறுசிறு எலுமிச்சை அளவுக்கு எடுத்து படத்தில் உள்ளதுபோல் தனித்தனியாக வைத்து லேஸாகத் தட்டையாக்கி விடவும்.

oats cookie

பிறகு தட்டை ஓவனில் வைத்து சுமார் 10 லிருந்து 12 நிமிடங்கள் பேக் செய்யவும்.குக்கியைச் சுற்றிலும் லேஸான ப்ரௌன் நிறம் வரும்போது எடுத்து ஆறவிடவும்.

மீதியுள்ள கலவையை மீண்டும் இவ்வாறே செய்யவும்.சுமார் 20 குக்கிகள் வரை வரும்.

இப்போது நல்ல கரகர,மொறுமொறு ஓட்ஸ் குக்கிகள் தயார்.கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சுவைக்கலாம்.

ஓட்ஸ் கிச்சடி/Oats kichadi

kichadi

தேவையானவை:

வறுத்துப் பொடித்த ஓட்ஸ் பொடி_2 கப்
பச்சைப்பட்டாணி_1/2 கைப்பிடி
கேரட்_சிறியது ஒன்று
காலிஃப்ளவர்_ஒரு சிறு பகுதி
சின்ன வெங்காயம்_ஐந்தாறு
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_சிறிது

தாளிக்க:

எண்ணெய்,கிராம்பு_3,பிரிஞ்சிஇலை_1,சீரகம்,கடலைப்பருப்பு,முந்திரி,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.

வெங்காயம்,தக்காளி,கேரட்,காலிஃப்ளவர் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ள‌வும்.

இஞ்சி,பூண்டு தட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வெங்காயம்,தக்காளி,காய்கள்,பட்டாணி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கிவிட்டு,ஒரு பங்கு ஓட்ஸ் பொடிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என ஊற்றிவிட்டு,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலக்கிவிட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

கொதி வந்ததும்,ஓட்ஸ் பொடியை லேஸாகத் தூவியவாறு கொட்டிக்கொண்ட்டே விடாமல் கிண்டிவிடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் நன்றாக வரும்.

முழுவதையும் கொட்டிக்கிண்டிய பிறகு தீயைக்குறைத்துவிட்டு இரண்டொருதரம் கிளறிக்கொடுத்து,எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கவும்.
kichadi

இப்போது சுவையான ஓட்ஸ் கிச்சடி தயார்.தேங்காய் சட்னி,சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

உங்கள் விருப்பம்போல் காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.அதேபோல் இறுதியாக முந்திரியை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.

இப்பதிவை  ஃபாயிஷாவின்   Passion on plate giveaway event ற்கு அனுப்புகிறேன்.

உப்புமா வகைகள், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 11 Comments »

ஓட்ஸ் பொங்கல் / Rolled Oats pongal

oats pongal

பொங்கலில் மிளகை ஒன்றும்பாதியுமாக பொடித்துப் போட்டால் சாப்பிட்டு முடித்தபிறகு தட்டில் மிளகு மீதமாகி இருப்பதைத் தவிர்க்கலாம்.இஞ்சியையும் அப்படியே வெளியே எடுத்துப் போடாத அளவிற்கு தட்டிப்போடலாம்.

இந்தப் பொங்கலை நான் எழுதியுள்ள மாதிரியும் செய்யலாம்.இல்லாவிடில் பச்சைப்பருப்பு+ஓட்ஸிற்கும் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதில் பச்சைப்பருப்பை வேகவைத்து,வெந்ததும் ஓட்ஸைப்போட்டுக் கிளறிக்கொடுத்து இறக்கும்போது,தாளிப்பை செய்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கினால் இன்னும் நல்ல வாசனையாக இருக்கும்.

தேவையானவை:

வெறும் வாணலில் வறுத்துப் பொடித்த ஓட்ஸ் பொடி_2 கப்
பச்சைப் பயறு_1/4 கப்பிலிருந்து 1/2 கப்பிற்குள்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_இரண்டுமூன்று டீஸ்பூன்.
மிளகு_சிறிது
சீரகம்_கொஞ்சம்
முந்திரி_10
இஞ்சி_சிறு துண்டு
கறிவேப்பிலை_ஒரு கொத்து

செய்முறை:

பச்சைப்பயறை சிவக்க வறுத்து,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் விட்டு ரொம்பவும் குழையாமல் வேகவைக்கவும்.பச்சைப்பருப்பு வேகத்தான் நேரமெடுக்கும்.அது வெந்துவிட்டால் பொங்கல் நிமிடங்களில் ரெடியாகிவிடும்.

அது வெந்துகொண்டிருக்கும்போதே இஞ்சியைத் தட்டிவைத்துக்கொள்ளவும். மிளகையும் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி,நெய்யை விட்டு சூடாகியதும் தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்துவிட்டு ஒரு பங்கு ஓட்ஸ்பொடிக்கு இரண்டு பங்கு என தண்ணீர் விடவும்.எனவே இரண்டு கப் ஓட்ஸிற்கு 4 கப் தண்ணீர் ஊற்றி,தேவையான உப்பும் போட்டு,கொதிக்கும்வரை மூடி வைக்கவும்.

பொங்கல் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் வேண்டுமானால் சிறிது மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அல்லது அதற்கு முன்பாகவேகூட வெந்த பச்சைப்பருப்பை சேர்த்து விடலாம்.

எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொதித்ததும் ஓட்ஸை தூவியவாறு கொட்டிக்கொண்டே விடாமல் கிண்டிவிடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.

ரவையைப்போல ஓட்ஸும் சீக்கிரமே வெந்துவிடுமாதலால் மிதமானத் தீயில் ஒன்றிரண்டு தரம் கிளறிக்கொடுத்து தீயை நிறுத்தி மூடிவிடவும்.

இப்போது சுவையான,சத்தான,வாசனையுள்ள,கொஞ்சம் கொழகொழப்பில்லாத,எளிதாக செய்யக்கூடிய ஓட்ஸ் பொங்கல் தயார்.

oats pongal

ஆறஆற பொங்கல் கெட்டியாகும்.சூடாகவோ அல்லது மிதமான சூட்டிலோ தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.சாம்பாருடனும் நன்றாக இருக்கும்.

ஓட்ஸ்_வறுத்துப் பொடித்தல்

oats oats

 

சாப்பாட்டில் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு தானியம் எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது என மருத்துவர் சொல்வதால் ஏதாவது ஒருவேளை உணவுக்கு ஓட்ஸைப் பயன்படுத்தலாமே.

இது கொஞ்சம் கொழகொழப்பு தன்மையுடையது.முதன்முதலில் சாப்பிட்டபோது பிடிக்கவே பிடிக்காது.கடகடவென மருந்து விழுங்குவதுபோல் சாப்பிட்டு விடுவேன்.எனக்கே இப்படி என்றால் வீட்டில் உள்ளவர்கள் நிலை,இவர்கள் தொடவேமாட்டார்கள்.

ஒருமுறை லேஸாக வறுத்துப் பொடித்து உப்புமா செய்தேன்.வறுத்ததால் நல்ல வாசனையுடன் சுவை கூடுதலாகவும் இருந்தது.கொஞ்சம் கொழகொழப்பும் குறைவாக இருந்தது.அன்றிலிருந்து ஒரு பெரிய கண்ணாடி பாட்டில் அளவிற்கு வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு கஞ்சி,பொங்கல்,உப்புமா,கிச்சடி என எல்லாமும் செய்வேன்.கொஞ்சம் கூடுதலாக மாவாக்கிக் கொண்டால் இட்லி,தோசை,அடை என எல்லாமும் செய்யலாம்.இப்போது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த தானியமாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

படத்தில் உள்ளதுபோல் உள்ள தட்டையான ஓட்ஸை (Rolled oats) வெறும் வாணலில் போட்டு மிதமானத் தீயில் லேஸாக சிவந்து, சூடேறும்வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்றுகள் சுற்றி பொடித்துக்கொள்ளவும்.மாவாக்க‌ வேண்டுமானால் மேலும் இரண்டு சுற்றுகள் சுற்றினால் மாவாகிவிடும்.

நீங்களும்போய் ஓட்ஸை வறுத்து,பொடிச்சு வையுங்க.அடுத்த பதிவில் இந்த பொடித்த ஓட்ஸை வைத்து வெண்பொங்கல் செய்வதைப் பார்க்கலாம்.

சோம்புக்கீரை வடை/Dill keerai vadai/Fennel leaves vadai

இந்த வடையை முருங்கைக்கீரை வடை மாதிரியேதான் செய்தேன்.நன்றாகவே இருந்தது.கிடைத்தால் செய்து பார்க்கலாமே.

சோம்புக் கீரையில் ஒருவித வாசனை வரும் என்று கேள்விப்பட்டதால் இதுவரை வாங்காமலே இருந்தேன். காமாட்சிமா சமைத்ததாலும்,  ரஞ்ஜனி அவர்கள் ‘எங்க ஊர் கீரை’என்று சொன்னதாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வாங்கிவந்து என்ன செய்வது எனத்தெரியாமல் முதலில் கீரை வடை செய்யலாம்,நன்றாக இருந்தால் அடுத்த தடவை இதைவைத்து வேறு ஏதேனும் செய்யலாம் என முடிவெடுத்து வடை செய்தாச்சு.

வடையைப் பார்ப்பதற்கே அழகாக இருந்தது.சுவையும் அருமையாக இருந்தது.பிடிக்காத எந்த வாசனையும் வரவில்லை.

மகி அறிவது: இனி ஹைக்கிங் போகும்போது மறக்காமல் இந்தக்கீரையைப் பறித்துவந்து தூக்கிப் போடாமல்  எங்க வீட்டில் கொடுத்துவிட்டுப் போகவும்.

தேவையானவை:

கடலைப்பருப்பு_ஒரு கப்
வறுத்துப்பொடித்த ரோல்டு ஓட்ஸ் மாவு_ஒரு கப்
சோம்புக்கீரை_ஒரு செடியிலுள்ளது
சின்ன வெங்காயம்_சுமார் 10
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய்_2
பெருஞ்சீரகம்_சிறிது
பூண்டுப்பல்_2
பெருங்காயம்
கறிவேப்பிலை&கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

தண்டிலிருந்து கீரையைத் தனியாகப் பிரித்தெடுத்து தண்ணீரில் அலசி வைக்கவும்.பார்ப்பதற்கு சவுக்கு இலைகள் போலவே இருக்கிறது.தண்ணீர் வடிந்ததும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கீழேயுள்ள பல்பை வைத்து என்ன சமைக்கலாம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

       

கடலைப் பருப்பை ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு, மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு அதனுடன் மிளகாய், பெருஞ்சீரகம்,பூண்டு,இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக,கெட்டியாக‌ அரைத்தெடுக்கவும்.

இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு,கீரை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம்,கறிவேப்பிலை&கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.

    

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் மாவிலிருந்த்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்துவிடவும்.எண்ணெய் கொண்டமட்டும் தட்டிப்போடலாம்.

இவ்வாறே எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.இப்போது கமகம,மொறுமொறு,சத்தான,சுவையான சோம்புக்கீரை வடைகள் தயார்.தேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

எங்க வீட்டில் வடையைவிட வடைமாவை உதிர்த்துப் போடுவதற்குத்தான் மவுசு அதிகம்.அவ்வாறு போட்டதுதான் கீழேயுள்ள படத்திலிருப்பது.

கலவை தானிய அடை/Multi grain adai

அடையைக் கேழ்வரகு மாவில் மட்டுமே செய்தால்கூட கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.இந்த அடையில் கேழ்வரகு மாவுடன் ஓட்ஸ்&பார்லி மாவு சேர்ப்பதால் நல்ல மிருதுவாக இருக்கும்.சத்தானதும்கூட.

கேழ்வரகு&முருங்கைக்கீரை அடைக்கான செய்முறை இங்கேயும்,கேழ்வரகு இனிப்பு அடைக்கான செய்முறை இங்கேயும் உள்ளன.

முருங்கைக்கீரை கிடைப்பதே அரிது.கிடைத்தாலுமே ஐஸில் வைத்து இலைகளெல்லாம் கரும்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.சம்மரில் ஒருசில வாரங்களில் மட்டும்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் திறக்கும்போதே (காலை 9:00 மணி)போனால் மட்டுமே புது முருங்கைக்கீரை கிடைக்கும். அதுவும் இரண்டுமூன்று bunches மட்டுமே இருக்கும்.மேலே படத்திலுள்ளது அவ்வாறு வாங்கியதுதான்.அந்த வார சமையல் முழுவதுமே முருங்கைக்கீரை மயமாகத்தான் இருக்கும்.

அடைக்குத் தேவையானவை:

ஓட்ஸ் மாவு_ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)
பார்லி மாவு_ஒரு கையளவு
கேழ்வரகு மாவு_ஒரு கையளவு
முருங்கைக்கீரை_மூன்று கைப்பிடி
சின்ன வெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_தேவைக்கேற்ப‌
மேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

கீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.

பிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும்.மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு,அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு,அடையாகத் தட்டவும்.அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.

கல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும்,அடையின் மேலும் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.

எண்ணெயைத் தாராளமாக விட்டால்தான் அடை நன்றாக வெந்தும்& வெண்மையாக இல்லாமலும் வரும்.

தீ மிதமாக இருக்கட்டும்.தீ அதிகமானால் தீய்ந்துவிடும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

சூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும்,நல்ல மணமாகவும் இருக்கும்.

கீரை வடை

 

ரோல்டு ஓட்ஸை நன்கு சூடுவர வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டால் சமயங்களில்  அதை சீரியல், பொங்கல், உப்புமா, கிச்சடி,களி என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். நல்ல வாசனையுடன் இருக்கும்.

இந்த மாவை வைத்துத்தான் கீரைவடை செய்தேன்.இதனை முருங்கைக்கீரை என்றில்லாமல் வேறு எந்தக்கீரையிலும் செய்யலாம்.சூப்பர் மொறுமொறுப்புடன், வாசனையாகவும் இருந்தது.நீங்களும் முயற்சிக்கலாமே.

தேவையானவை:

கடலைப்பருப்பு_ஒரு கப்
ரோல்டு ஓட்ஸ்_ஒரு கப்
முருங்கைக்கீரை_ஆய்ந்தது இரண்டு கப்
சின்னவெங்காயம்_சுமார் 10
பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய்_1 காரம் விரும்பினால் கூட ஒன்று சேர்த்துக்கொள்ளலாம்.
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
பூண்டிதழ்_2
கறிவேப்பிலை&கொத்துமல்லி இலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கடலைப் பருப்பைக் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.கழுவிவிட்டு ஊறவைத்தாலும் சரி,ஊற வைத்துக் கழுவினாலும் சரி.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவேண்டும்.

கடலைப் பருப்பு ஊறிக்கொண்டிருக்கும்போதே ஓட்ஸை முதலில் சொல்லியதுபோல் நைஸாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.

மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலைப்பருப்பைப் போட்டு அதனுடன் மிளகாய்,பெருஞ்சீரகம்,பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு,சுத்தம் செய்த கீரை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை&கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.

முதலிலேயே உப்பு சேர்த்தால் கீரையின் அளவை வைத்து அதிகமாக சேர்க்க வாய்ப்புண்டு.எல்லாவற்றையும் பிசைந்தபிறகு கீரை இருக்குமிடமே தெரியாது. இப்போது சேர்த்தால் திட்டமாகச் சேர்க்கலாம்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் மாவிலிருந்த்து பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது சிறு எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்துவிடவும்.எண்ணெய் கொண்டமட்டும் தட்டிப்போடலாம்.

இவ்வாறே எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.இப்போது கமகம,மொறுமொறு,சத்தான,சுவையான வடைகள் தயார்.

தேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட மேலும் சுவையாக இருக்கும்.

ஓட்ஸ் கிச்சடி (Rolled Oats)

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்_ 2 கப்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
பீன்ஸ்_5
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10 வரை
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_2
பிரிஞ்சி இலை_2
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி,கேரட்,பீன்ஸ் இவற்றை  சிறுசிறு நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

வெறும் வாணலியில் ஓட்ஸைக் கொட்டி சூடு வர வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் ஒன்றும் பாதியுமாக உடைந்துவிடும்.அல்லது அப்படியேகூட பயன்படுத்தலாம்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு  வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சிபூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

அடுத்து கேரட்,பீன்ஸ்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டு பங்கு  என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு  கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

கொதி  வந்ததும் ஓட்ஸைப் போட்டுக் கட்டி தட்டாமல் கிளறவும். ஓட்ஸ் வெந்து வரும்வரை மிதமானத் தீயில் மூடி வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி  இறக்கவும்.

இதற்கு  தேங்காய் சட்னி,குருமா  பொருத்தமாக இருக்கும்.

ஓட்ஸ் கிச்சடி (steel cut oats )

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்_ 2 கப்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10 வரை
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

கேரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாகவும்,வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும், மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

வெறும் வாணலியில் ஓட்ஸைக் கொட்டி சூடு வர வறுத்து தனியாக வைக்கவும்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.

அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து கேரட்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டேகால் பங்கு  என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு  கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

கொதி  வந்ததும் ஓட்ஸைப் போட்டுக் கட்டி தட்டாமல் கிளறவும்.ஓட்ஸ் வெந்து வரும்வரை மிதமானத் தீயில் மூடி வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி  இறக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னி,குருமா பொருத்தமாக இருக்கும்.

ஓட்ஸ் பொங்கல்(steel cut oats )/Oats pongal

சாதாரன பொங்கல் போல் அல்லாமல் ஓட்ஸ் பொங்கல் செய்யும்போது பச்சைப் பருப்பின் அளவைக் கொஞ்சம் கூட்டி செய்தால்தான் நன்றாக இருக்கும்.

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்_2 கப்
பச்சைப் பருப்பு_3/4 கப்
மஞ்சள்தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்
மிளகு_1  டீஸ்பூன்
சீரகம்_1  டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை_கொஞ்சம்

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக்கொள்ளவும்.

பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் ஒரு பங்கு ஓட்ஸுக்கு இரண்டரை பங்கு தண்ணீர்  என 5 கப் தண்ணீர் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டு,தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.

இரண்டும் நன்றாகக் குழைந்து,வேகும் வரை மிதமானத் தீயில் வைக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்தி,அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து),சீரகம்,இஞ்சி,முந்திரி, கறிவேப்பிலை தாளித்துப் பொங்களில் கொட்டிக் கிளறி இறக்கவும்.

அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் கொட்டிக் கிளறி இறக்கலாம்.இந்த முறையில் செய்யும்பொழுது மிகவும் நன்றாக இருக்கும்.

இதற்கு தேங்காய் சட்னி,சாம்பார் இவை மிகப்பொருத்தமாக இருக்கும்.