கீழே உள்ளவை எல்லாம் எங்க ஊர் சந்தையில் சென்றமுறை வாங்கிய கத்தரிக்காய், நல்லாருக்கா பாருங்க !! இன்னும் கொஞ்ச நாளில் இதுபோன்ற விதவிதமான கத்தரிக்காய்கள் சந்தைக்கு வர ஆரம்பித்துவிடும். பிறகு எஞ்ஜாய்தான் !
தேவையானவை :
அரிசி _ ஒன்றரை கப்
கத்தரிக்காய் _ நான்கைந்து
உப்பு _ தேவைக்கு
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
எலுமிச்சை _ சிறு துண்டு
வறுத்து பொடிக்க : காய்ந்த மிளகய், மிளகு, கொத்துமல்லி விதை, எள், கசகசா, தேங்காய்
எல்லாமும் தோராயமாகக் கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பம்போல் கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளவும்.
கொத்துமல்லி தூள் கைவசம் இருந்ததால் தூளாகவே எடுத்துக் கொண்டேன். ஆனாலும் ஃப்ரெஷ் கொத்துமல்லியை வறுத்துப் பொடித்து செய்தால் வாசனை இன்னும் சூப்பரா இருக்கும்.
தாளிக்க :
நல்லெண்ணெய்
முந்திரி
உளுந்து
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
சாதம் குழையாமல், நன்றாக வெந்து, உதிரிஉதிரியாக இருக்குமாறு வடித்து ஆறவிடவும். நான் புழுங்கல் அரிசியில் செய்தேன்.
தற்போதைக்கு சின்ன கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் பெரிய கத்தரிக்காயின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன்.
வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றில் தேங்காய் தவிர மற்றதை வெறும் வாணலில் சூடு வர வறுத்துத் தனியாக வைத்துக் கொண்டு, கடைசியாக தேங்காயைத் துருவி ஈரம்போக வறுத்து, இவை எல்லாம் ஆறியதும் ஒன்றாக சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு, நறுக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
வதங்கும்போதே உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொண்டு, இதில் பொடித்து வைத்துள்ள பொடியைப்போட்டு கிண்டி, எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, கொத்துமல்லியைத் தூவிவிட்டு, இறுதியில் சாதத்தைக் கொட்டி கிண்டி, உப்பு & காரம் சரிபார்த்து, இளந்தீயில் சிறிது நேரம் மூடிவைத்து, சாதம் சூடு ஏறி மசாலாவுடன் நன்றாகக் கலந்ததும் இறக்கி சாப்பிட்டுப் பார்த்து ……
……….. எப்படி வந்தச்சுன்னு வந்து சொல்லுங்களேன் !!