கரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal

poriyal

எனக்கு இந்தக் கிழங்கின் பெயர் (Yam) தெரியாது. நல்ல நாளாப் பார்த்து நானே இந்தப் பெயரை (கரணைக் கிழங்கு) சூட்டிட்டேன் . சட்டி கரணைனு பெரியபெரிய‌ கரணைக் கிழங்கு நம்மூரில் கிடைக்கும். அதில் என்னெல்லாம் செய்வோமோ, அதாவது சாம்பார், பொரியல், புளிக்குழம்பு என எல்லாமும் இதை வைத்து செய்வேன். நல்லாவே இருக்கும்.

yam

சில சமயங்களில் மெல்லிய கிழங்குகளும், சில சமயங்களில் பெரியதாகவும் கிடைக்கும். சிறிய கிழங்கானால் முழுதாக ஒன்றும் பெரியதாக இருந்தால் தேவைக்கேற்ப நறுக்கியும் செய்வேன். மீதமுள்ள‌ நறுக்கிய கிழங்கின் வெட்டுப்பட்ட பகுதியை பேப்பர் டவலால் மூடி ஒரு ஸிப்லாக்கில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்வேன்.

இந்தக் கிழங்கு நமிக்குமா எனத் தெரியவில்லை.எதற்கும் கிழங்கை தேவையான அளவில் நறுக்கி (நான் பெரியபெரிய வட்டமாக நறுக்குவேன்) அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறு துண்டு புளி & மஞ்சள்தூள் சிறிது சேர்த்து வேக வைத்து ஆறவிட்டு மேல்தோலை உரித்துவிட்டு தேவையான வடிவத்தில் நறுக்கி பயன்படுத்துவேன்.

தேவையானவை:

வட்டமாக‌ நறுக்கிய‌ துண்டுகள் _ 2
மிளகாய்த்தூள் _ இரண்டு டீஸ்பூன்
மஞ்சள்தூள் _ சிறிது
உப்பு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு வாணலில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு கிழங்கைப்போட்டு ஒரு கிண்டுகிண்டி,அதுனுடன் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.

கிழங்கு ஏற்கனவே வெந்துவிட்டபடியால் ரொம்ப நேரம் வேகத் தேவையில்லை.மிளகாய்த்தூள் கிழங்குடன் நன்றாகக் கலந்து பச்சை வாசனை போய் நன்றாக‌ சிவந்து வந்ததும்  இறக்கிவிடவும்.இடையிடையே கிளறிவிட்டால் போதுமானது.

poriyal

இது எல்லா சாதத்துடனும் நன்றாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 12 Comments »