பாஸ்தா

விதவிதமான வடிவங்கள் மட்டுமல்லாது பல்வேறு தானியங்களினாலான‌ பாஸ்தா கிடைக்கிறது. இதற்கென     seasonings, pasta sauce  உள்ளன.இதனை எப்படி வேண்டுமானாலும் தயாரித்துக்கொள்ளலாம்.எப்படி செய்தாலும் சுவைதான்.

பாஸ்தாவை சேர்க்கும்போது அடுப்பை நிறுத்திவிட்டுத்தான் சேர்க்க வேண்டும்.அப்போதுதான் அதற்கேயுரித்தான அதன் வழவழப்புத்தன்மை இருக்கும்.

மிளகாய்த்தூள் சேர்ப்பதானால் காய்கறி வதங்கும்போது சேர்த்துக்கொள்ளலாம். Garnish mix  என்றால் கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையானப் பொருள்கள்:

பாஸ்தா_2 கப்

விருப்பமான காய் கறிகள்_ (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ,பச்சைப்பட்டாணி, காலிஃப்ளவர், புரோக்கலி, வெங்காயத்தாள் ,கலர்கலரான குடைமிளகாய்கள்_இவற்றுள் இருப்பதைக்கொண்டு தயார் செய்யலாம்.)

சின்னவெங்காயம்_2
பச்சைமிளகாய்_1
தக்காளி_பாதி
இஞ்சி_சிறிது
பூண்டு_1
மிளகாய்த்தூள்_1/4 டீஸ்பூன்  அல்லது  நூடுல்ஸிலுள்ள    garnish mix    _ கொஞ்சம்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

ஆலிவ் ஆயில்_2 டிஸ்பூன்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாஸ்தா  மூழ்கும் அளவை விட இரண்டு மடங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பிலேற்றி கொதிநிலை வரும்போது தேவையான உப்பு சேர்த்து,மீண்டும் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் பாஸ்தாவைக்கொட்டி ஒரு கரண்டியால் கிண்டிவிடவும்.ஒன்றுக்கொன்று ஒட்டாமல் வேகுமாறு அடிக்கடி கிண்டிவிடவும்.நன்றாக வேக குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும்.நன்றாக வெந்துவிட்டால் கரண்டியில் எடுத்தால் வராமல் வழுக்கிக்கொண்டு போகும்.இப்போது ஒரு கப் குளிர்ந்த நீரை வெந்துகொண்டிருக்கும் பாஸ்தாவில் ஊற்றி அடுப்பை நிறுத்திவிடவும்.இது வெந்துகொண்டிருக்கும் பாஸ்தா மேலும் வேகாமலிருக்கத்தான்.பிறகு நீரை வடித்துவிடலாம்.

பாஸ்தா வெந்துகொண்டிருக்கும்போதே தாளிப்பை ஆரம்பிக்க வேண்டும்.

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி இவற்றை நறுக்கி வைக்கவும்.தக்காளியை அரைத்துக்கூட சேர்த்துக்கொள்ளலாம்.காய்கறிகளை பாஸ்தாவின் வடிவத்திற்கேற்ப நறுக்கிக்கொள்ளவும்.பச்சைப்பட்டாணி சேர்ப்பதானால் முதல்நாளிரவே ஊற வைத்து விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க உள்ளவற்றைத் தாளித்துவிட்டு இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.பிறகு காய்கறி சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு மிதமானத் தீயில் வேக வைக்கவும்.வேண்டுமானால் காய் வேக சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்.

காய் வெந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு  garnish mix  கலந்துவிட்டு, வடித்துவைத்துள்ள பாஸ்தாவை எடுத்துக்கொட்டி கிளறிவிடவும்.

இப்போது சுவையான பாஸ்தா தயார்.

Advertisements

ரவை,சேமியா,காய்கறி கிச்சடி

தேவையானப் பொருள்கள்:

ரவை_ஒரு கப்
சேமியா_2 கப்
சின்ன வெங்காயம்_7 லிருந்து 10 க்குள்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1 (சிறியது)
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

கேரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாகவும்,வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும்,மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு ரவையைக் கொட்டி சூடு வர வறுத்து தனியாக வைக்கவும்.எண்ணெய் விடுவது ரவையைத் தண்ணீரில்  கொட்டிக் கிளறும்போது கட்டி தட்டாமல் இருக்கத்தான்.

அடுத்து அதே வாணலியில் சேமியாவைப்போட்டு சிறிது சூடு வர வறுத்துக்கொண்டு,இதையும் தனியாக வைக்கவும்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.அடுத்து கேரட்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டேகால் பங்கு  என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைகவும்.

கொதி வந்ததும் சேமியாவைப் போட்டுக் கிளறவும்.அது பாதி வெந்து வரும்போது ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி whisk ஆல் விடாமல் கிண்ட வேண்டும்.அப்போதுதான்  கட்டித் தட்டாமல் வரும்.எல்லா ரவையையும் கொட்டிக் கிளறிய பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி  இறக்கவும்.

சேமியா பாதி வெந்த பிறகுதான் ரவையைச் சேர்க்க வேண்டும்.இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் ரவை வெந்து சேமியா வேகாமல் போகும்.

உப்புமா வகைகளுக்கேயுரிய‌ தேங்காய் சட்னிதான் இதற்கும் பொருத்தமாக இருக்கும்.