உருளைக் கிழங்கு & காலிஃப்ளவர் பொரியல்

 

தேவையானவை:

உருளைக்கிழங்கு_1
காலிஃப்ளவர்_1(சிறியது)
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

காலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிரித்து ஒரு 2 நிமிடங்களுக்கு உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும்.

பூண்டிதழ்களை நறுக்கிக்கொள்ளவும்.அல்லது ஒரு தட்டுதட்டி சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு கடாயை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுச் சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,முதலில் பூண்டு சேர்த்து வதக்கி,அடுத்து உருளைத் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சிறிது உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து  (அ) சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு (அ) சிறிது கூடுதலாக எண்ணெய் சேர்த்துக்  கிளறி மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.

உருளை வெந்ததும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுத்து அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காலிஃப்ளவரைப் போட்டு வதக்கி சிறிது மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,சிறிது உப்பு இவற்றைத் தூவினாற்போல் போட்டு மூடி வேகவிடவும்.

இது சீக்கிரமே வெந்துவிடும்.வெந்ததும் இதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறிவிட்டு ஒரு 5 நிமி மிதமானத் தீயில் மூடி வைக்கவும்.

இரண்டும் ஒன்றாக கலந்து வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

காலிஃப்ளவர் நகெட்ஸ்

தேவையானப் பொருள்கள்:

சிறிய இளம் காலிஃப்ளவர்_1
மைதா_2 டேபிள்ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
முட்டை_2
ப்ரெட் தூள்_2 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

காலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு நீர் ஊற்றி,சிறிது  உப்பு சேர்த்து அடுப்பிலேற்றி ஒரு கொதி வந்ததும் நீரை வடித்துவிட்டு வைக்கவும்.

மைதா,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சிறிது உப்பு இவற்றைக் கலந்து ஒரு கிண்ணத்திலும்;ப்ரெட் தூளை  மற்றொரு  கிண்ணத்திலும்  எடுத்துக்கொள்ளவும்.

முட்டையைத் தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து வைத்துக்கொள்ளவும்.

வெந்த காலிஃப்ளவரை மைதா கலவையில் கொட்டி,குலுக்கி முழுவதும் புரட்டி வைக்கவும்.

அடுத்து ஒவ்வொரு பூவாக எடுத்து முட்டையில் முழுவதும் தோய்த்து, உடனே ப்ரெட் தூளில் போட்டு புரட்டி ஒரு தட்டில் வைக்கவும்.

இதுபோல் எல்லா பூக்களையும் செய்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒவ்வொன்றாகவோ அல்லது எண்ணெய் கொண்டமட்டுமோ போட்டு  பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான,மொறுமொறுப்பான‌ காலிஃப்ளவர் நகெட்ஸ் ரெடி.

இதனை    ketchup  உடன் சாப்பிட சுவையாக இருக்கும்

காய்கறி குருமா

 

தேவை:

விருப்பமான காய்கறிகள்_2 கப்

(கேரட்,பீன்ஸ்,காலிஃப்ளவர்,உருளை கிழங்கு,சௌசௌ,வெள்ளை பூசணி,வெங்காயத்தாள்,முருங்கைக்காய்,கத்தரிக்காய் போன்றவை.இவற்றில் ஒரு காயோ அல்லது பல காய்கள் சேர்த்தோ செய்யலாம்.இதில் குறிப்பிட்டுள்ளதைத்தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை.உங்கள் விருப்பப்படி சேர்க்கலாம்)

பச்சை பட்டாணி_1/4 கப்

சின்ன வெங்காயம்_10

தக்காளி_2

பச்சை மிளகாய்_1

இஞ்சி_1 துண்டு

பூண்டு_2 பற்கள்

மிளகாய் தூள்_2 டீஸ்பூன்

மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்

கொத்துமல்லி இலை_2 கொத்து

அரைக்க:

தேங்காய்_3 துண்டுகள்

கசகசா_1 டீஸ்பூன்

தாளிக்க:

சீரகம்_1/2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை_1

முந்திரி_5

எண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சை பட்டாணி சேர்ப்பதாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்.கசகசாவை மிதமான சூட்டில் வறுத்து சிறிது வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும்.காய்களை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும்.இஞசி,பூண்டு நசுக்கி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கி அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு காய்கறிகளை வதக்கவும்.பட்டாணி நன்றாக ஊறி இருந்தால் காய்களுடன் அப்படியே சேர்க்கலாம்.இல்லை என்றால் தனியாக வேகவைத்து சேர்க்கலாம்.இப்போது மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து வேகவிடவும்.

காய் வெந்ததும் கசகசா,தேங்காய் அரைத்து ஊற்றவும்.குருமா கெட்டியாக இருக்கட்டும்.இரண்டு கொதி கொதித்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.புதினா வாசம் பிடிக்குமானால் இரண்டு(அ)மூன்று இலைகள் சேர்க்கலாம்.இப்போது கமகமக்கும் காய்கறி குருமா தயார்.இது சப்பாத்தி,நாண்,இடியாப்பம் இவற்றிற்கு நன்றாகப் பொருந்தும்.