காளான் பொரியல் / Mushroom poriyal

kaalaan

இங்கு நிறைய வகைகளில், வடிவங்களில் காளான்கள் கிடைக்கின்றன. எப்போதும் வெள்ளை நிற காளான்கள்தான் வாங்குவேன்.இந்தமுறை படத்திலுள்ள இந்தக் காளானை ( Crimini mushrooms) வாங்கினேன்.

இதுவும் நல்ல சுவையில் இருந்தது.அதனால் அடுத்த முறை துணிந்து வேறொரு காளான் வாங்கும் ஐடியா உள்ளது,பார்க்கலாம்!!

kaalaankaalaan

தேவையானவை:

சிறிய காளான் _ சுமார் 15 எண்ணிக்கையில்
சின்ன வெங்காயம் _ 5
தக்காளி _ 1
இஞ்சி _ சிறு துண்டு
பூண்டிதழ் _ 1
மிளகாய்த்தூள் _ ஒன்றரை டீஸ்பூன் அல்லது காரத்திற்கேற்ப‌
மஞ்சள்தூள் _ சிறிது
உப்பு _ தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம் (விருப்பமானால்)
கறிவேப்பிலை

செய்முறை:

காளானை கழுவிவிட்டு நன்றாகத் துடைத்துவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.இஞ்சி பூண்டு தட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி என்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், இஞ்சிபூண்டு, தக்காளி,காளான் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு மிளகாய்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கிண்டி மூடி வேக வைக்கவும்.

மசாலா எல்லாம் நன்றாகக் கலந்து,காளான் வெந்து வரும்வரை இடையிடையே விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான காளான் பொரியல் தயார்.இது எல்லா வகையான சாதத்துக்கும்,சப்பாத்திக்கும்கூட‌ சூப்பராக இருக்கும்.

Advertisements
வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 10 Comments »

காளான் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

பட்டன் காளான் _சுமார் 10 லிருந்து 15 எண்ணிக்கை
சின்ன வெங்காயம்_4
தக்காளி_1/4 பாகம்
பூண்டு_4 பற்கள்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்

செய்முறை:

காளானை நீரில் கழுவித் துடைத்துவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் காய்ந்தததும் சீரகம் தாளித்து வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் காளான் சேர்த்து வதக்கவும்.

காளான் வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வேக வைக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

காளான் சீக்கிரமே வெந்துவிடும்.இடையில் ஓரிரண்டு முறை கிளறிவிட்டு இறக்கவும்.

இது சாதம்,சப்பாத்தி இவற்றிற்கு நன்றாக இருக்கும்.

காளான் புலாவ் (Mushroom pulav)

 

தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி(அ)பாசுமதி அரிசி_ஒரு கப்
காளான்_15 (எண்ணிக்கை)
பச்சைப் பட்டாணி_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_5
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_2 பற்கள்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்_ஒரு டீஸ்பூன்
பட்டை_ஒரு துண்டு
கிராம்பு_2
ஏலக்காய்_1
சீரகம்_1/4 டீஸ்பூன்
முந்திரி_5

செய்முறை:

அரிசியைத் தண்ணீரில் ஒரு 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்துவிடவும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு சூடேறியதும் அரிசியைப் போட்டு வதக்க வேண்டும்.ஈரப்பசை நீங்கி அரிசி நிறம் மாறும் சமயம் அடுப்பை நிறுத்திவிடவும்.

பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

காளானை விருப்பமான‌ வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.வெங்காயம் நறுக்கி வைக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

தாளிப்பு முடிந்ததும் வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கவும்.

அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து காளான்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.

எல்லாம் நன்றாக வதங்கியபிறகு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து கலக்கி மூடி வைக்கவும்.(பாசுமதி அரிசியானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீரும்,பச்சை அரிசியானால் ஒன்றுக்கு இரண்டரை பங்கு தண்ணீரும் தேவை)

தண்ணீர் நன்றாக சூடேறி ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறிவிட்டு மீண்டும் மூடி வைக்கவும்.

மீண்டும் கொதி வரும்போது மூடியைத் திறந்து எலுமிச்சை சாறு விட்டு லேசாகக் கிளறிவிட்டு மிதமானத் தீயில் ஒரு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

இப்பொழுது அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு தோசைத் திருப்பி(அ)முள் கரண்டியால் சாதத்தைக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.

இப்பொழுது சுவையான காளான் புலாவ் தயார்.

இதற்கு தயிர்,வெங்காயப் பச்சடி நன்றாகப் பொருந்தும்.