ஓட்ஸ் கிச்சடி/Oats kichadi

kichadi

தேவையானவை:

வறுத்துப் பொடித்த ஓட்ஸ் பொடி_2 கப்
பச்சைப்பட்டாணி_1/2 கைப்பிடி
கேரட்_சிறியது ஒன்று
காலிஃப்ளவர்_ஒரு சிறு பகுதி
சின்ன வெங்காயம்_ஐந்தாறு
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_சிறிது

தாளிக்க:

எண்ணெய்,கிராம்பு_3,பிரிஞ்சிஇலை_1,சீரகம்,கடலைப்பருப்பு,முந்திரி,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.

வெங்காயம்,தக்காளி,கேரட்,காலிஃப்ளவர் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ள‌வும்.

இஞ்சி,பூண்டு தட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வெங்காயம்,தக்காளி,காய்கள்,பட்டாணி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கிவிட்டு,ஒரு பங்கு ஓட்ஸ் பொடிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என ஊற்றிவிட்டு,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலக்கிவிட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

கொதி வந்ததும்,ஓட்ஸ் பொடியை லேஸாகத் தூவியவாறு கொட்டிக்கொண்ட்டே விடாமல் கிண்டிவிடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் நன்றாக வரும்.

முழுவதையும் கொட்டிக்கிண்டிய பிறகு தீயைக்குறைத்துவிட்டு இரண்டொருதரம் கிளறிக்கொடுத்து,எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கவும்.
kichadi

இப்போது சுவையான ஓட்ஸ் கிச்சடி தயார்.தேங்காய் சட்னி,சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

உங்கள் விருப்பம்போல் காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.அதேபோல் இறுதியாக முந்திரியை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.

இப்பதிவை  ஃபாயிஷாவின்   Passion on plate giveaway event ற்கு அனுப்புகிறேன்.

உப்புமா வகைகள், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 11 Comments »

ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா/Rice sticks upma

 

படத்திலுள்ளதுபோல் நிறைய வெரைட்டியில்  Rice sticks கிடைக்கும்.ஒரு பாக்கெட்டில் 3 அல்லது 4 bundles இருக்கும்.இதை வைத்து சாதாரண உப்புமா,கிச்சடி,கலவை சாதங்கள் செய்வது போலவும் வெரைட்டி சேவை  செய்யலாம்.

இவற்றை நூடுல்ஸ் போல நீளமாகவோ அல்லது உடைத்துவிட்டு நம்ம ஊர் சேமியா போலவோ பயன்படுத்தலாம். உடைத்து விடும்போது ஒரு ப்ளாஸ்டிக் கவரில் வைத்து செய்ய வேண்டும்.இல்லையென்றால் சுற்றிலும் சிதறும்.

தேவையானவை:

Rice sticks_ஒரு bundle ல் பாதி
சின்ன வெங்காயம்_5
விருப்பமான காய்கள்_பீன்ஸ்_10,கேரட்_1 சிறியது (நான் சேர்த்தது)
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறு துண்டு
உப்பு_தேவைக்கு
எலுமிச்சை சாறு_சிறிது
கொத்துமல்லி இலை

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
முந்திரி (போட மறந்தாச்சு)
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

Rice sticks ஐ அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு சேர்த்து ஒரு 20 நிமி வைக்கவும்.அப்போதுதான் ஊறி சாஃப்டாக இருக்கும்.பிறகு நீரை வடித்துவிட்டு ஒரு இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும்.சீக்கிரமே வெந்துவிடும். வெந்ததும் எடுத்து உதிர்த்துவிடவும்.அல்லது ஊறிய Rice sticks ஐ அப்படியேகூட‌ சேர்க்கலாம்.

இதற்கிடையில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி இவற்றை நறுக்கி வைக்கவும்.கேரட்,பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். அடுத்து கேரட்,பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து ,(ஏற்கனவே  Rice sticks ல் உப்பு சேர்த்துள்ளோம்) காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.

காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள Rice sticks ஐப் போட்டு forks ஐப் பயன்படுத்திக் கிளறிவிடவும்.எல்லாம் கலந்து  ரைஸ் ஸ்டிக்ஸ் நன்றாக சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

தேங்காய் சட்னி,வெஜ்&நான்வெஜ் குருமா தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

ஓட்ஸ் கிச்சடி (Rolled Oats)

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்_ 2 கப்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
பீன்ஸ்_5
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10 வரை
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_2
பிரிஞ்சி இலை_2
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி,கேரட்,பீன்ஸ் இவற்றை  சிறுசிறு நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

வெறும் வாணலியில் ஓட்ஸைக் கொட்டி சூடு வர வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் ஒன்றும் பாதியுமாக உடைந்துவிடும்.அல்லது அப்படியேகூட பயன்படுத்தலாம்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு  வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சிபூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

அடுத்து கேரட்,பீன்ஸ்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டு பங்கு  என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு  கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

கொதி  வந்ததும் ஓட்ஸைப் போட்டுக் கட்டி தட்டாமல் கிளறவும். ஓட்ஸ் வெந்து வரும்வரை மிதமானத் தீயில் மூடி வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி  இறக்கவும்.

இதற்கு  தேங்காய் சட்னி,குருமா  பொருத்தமாக இருக்கும்.

அவல் கிச்சடி

தேவையானப் பொருள்கள்:

அவல்_ 2 கப்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
காலிஃப்ளவர்_கொஞ்சம்
சின்ன வெங்காயம்_10
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_2
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவிவிட்டு  தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து  ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.

அவல் நன்றாக ஊறி இருக்க வேண்டும்.ஆனால் குழைந்து இருக்கக்கூடாது.

கேரட்டை சிப்ஸ் கட்டையில் வைத்து சீவி அதன்பிறகு சிறுசிறு நீளத்துண்டுகளாக்கவும்.

காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும், மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில்  இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு அடுத்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை அடுத்தடுத்து  சேர்த்து வதக்கவும்.

அடுத்து கேரட்,பட்டாணி,காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் சிறிது உப்பு,மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

காய் வெந்ததும் அவலைக்கொட்டிக் கிளறவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

உப்பு தேவையானால் சேர்த்துக்கொள்ளவும்.

மிதமானத்தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும்.

பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி  இறக்கவும்.

இதற்கு  தேங்காய் சட்னி,ஊறுகாய் வகைகள் நன்றாக இருக்கும்.

ஓட்ஸ் கிச்சடி (steel cut oats )

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்_ 2 கப்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10 வரை
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

கேரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாகவும்,வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும், மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

வெறும் வாணலியில் ஓட்ஸைக் கொட்டி சூடு வர வறுத்து தனியாக வைக்கவும்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.

அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து கேரட்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டேகால் பங்கு  என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு  கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

கொதி  வந்ததும் ஓட்ஸைப் போட்டுக் கட்டி தட்டாமல் கிளறவும்.ஓட்ஸ் வெந்து வரும்வரை மிதமானத் தீயில் மூடி வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி  இறக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னி,குருமா பொருத்தமாக இருக்கும்.

ரவை,சேமியா,காய்கறி கிச்சடி

தேவையானப் பொருள்கள்:

ரவை_ஒரு கப்
சேமியா_2 கப்
சின்ன வெங்காயம்_7 லிருந்து 10 க்குள்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1 (சிறியது)
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

கேரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாகவும்,வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும்,மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு ரவையைக் கொட்டி சூடு வர வறுத்து தனியாக வைக்கவும்.எண்ணெய் விடுவது ரவையைத் தண்ணீரில்  கொட்டிக் கிளறும்போது கட்டி தட்டாமல் இருக்கத்தான்.

அடுத்து அதே வாணலியில் சேமியாவைப்போட்டு சிறிது சூடு வர வறுத்துக்கொண்டு,இதையும் தனியாக வைக்கவும்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.அடுத்து கேரட்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டேகால் பங்கு  என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைகவும்.

கொதி வந்ததும் சேமியாவைப் போட்டுக் கிளறவும்.அது பாதி வெந்து வரும்போது ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி whisk ஆல் விடாமல் கிண்ட வேண்டும்.அப்போதுதான்  கட்டித் தட்டாமல் வரும்.எல்லா ரவையையும் கொட்டிக் கிளறிய பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி  இறக்கவும்.

சேமியா பாதி வெந்த பிறகுதான் ரவையைச் சேர்க்க வேண்டும்.இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் ரவை வெந்து சேமியா வேகாமல் போகும்.

உப்புமா வகைகளுக்கேயுரிய‌ தேங்காய் சட்னிதான் இதற்கும் பொருத்தமாக இருக்கும்.

சாதாரண ரவை கிச்சடி

தேவையானப் பொருள்கள்:

ரவை_2 கப்
சின்ன வெங்காயம்_7
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
,
தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும் மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைகவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு ரவையைக் கொட்டி சூடு வர வறுத்துக்கொள்ளவும்.எண்ணெய் விடுவது ரவையைத் தண்ணீரில்  கொட்டிக் கிளறும்போது கட்டி தட்டாமல் இருக்கத்தான்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.

அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டு என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு  கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

தண்ணீர் கொதி வந்ததும் ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி ஒரு தோசைத் திருப்பியால் விடாமல் கிளறி விடவும். கரண்டிக்குப்  பதிலாக   whisk  ஐப் பயன்படுத்தினால் கட்டித் தட்டாமல் வரும்.எல்லா ரவையையும் கொட்டிக் கிளறிய பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி  இறக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னிதான் பொருத்தமாக இருக்கும்.