ஊரில் இருக்கும்வரை கலவை கீரை அடிக்கடி கிடைக்கும்.எங்கம்மா அதை புளி சேர்த்து கடைஞ்சிருவாங்க.கதம்ப சாம்பார் மாதிரி இந்தக் கலவை கீரையும் சுவையாக இருக்கும்.
கலவைக் கீரை என்பது சிறுகீரை,முளைக்கீரை,தண்டுக்கீரை,அரைக்கீரை கொய்யாக்கீரை,குப்பைக்கீரை, பசலைக் கீரை, பருப்புக் கீரை என எல்லாக் கீரைகளும் சேர்ந்ததாகும்.அப்படித்தான் இந்தப் பருப்புக் கீரையைப் பார்த்திருக்கிறேன்.தனியாக சமைத்ததில்லை.
சென்ற வருடம் முதன்முறையாக ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் இந்த பருப்புக் கீரையைப் பார்த்ததும் வாங்கிவந்து சமைக்காமலேயே தூக்கிப் போட்டுவிட்டேன்.லேஸான ஒரு கொழகொழப்பு தெரிந்தது.இப்போது இரண்டு வாரங்களாக இக்கீரை வந்துகொண்டிருக்கிறது.
‘நல்லதுமா,சமைத்து சாப்பிடு’, என அம்மா சொல்லியதால் இந்த முறை விடுவதாக இல்லை என வாங்கிவந்து இரண்டு நாட்கள் சமைத்தாயிற்று. சூப்பராக இருந்தது.உங்களுக்குக் கிடைத்தால் நீங்களும் சமைத்துப் பாருங்களேன்.
இவ்வளவு பசுமையாக இருப்பதை வாங்காமல் விடலாமா!!
(கீழே படத்திலுள்ள கீரை எங்கள் வீட்டு தொட்டியில் வளர்த்தது)
தேவையானவை:
பருப்புக்கீரை_1/2 கட்டு
பச்சைப் பயறு_1/4 கப்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_1
பூண்டிதழ்_2
அரைக்க:
தேங்காய் பத்தை_3
காய்ந்த மிளகாய்_1(காரத்திற்கேற்ப)
சீரகம்_கொஞ்சம்
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.
பச்சைப் பயறு வேக ஆகும் தண்ணீரின் அளவைவிட ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் கூடுதலாக விட்டு பூண்டிதழ், பெருங்காயம், மஞ்சள்தூள்,இரண்டு துளி விளக்கெண்ணெய் சேர்த்து மலர வேக வைக்கவும்.குழைந்துவிட வேண்டாம்.
பயறு பாதி வேகும்போதே வெங்காயம்,தக்காளி சேர்த்து வேக விடவும்.
தேங்காயுடன்,சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.
வெந்து கொண்டிருக்கும் பயறில் அரைத்த விழுது+கீரை இரண்டையும் சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க விடவும்.
கீரை வெந்து எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்து கீரையில் கொட்டிக் கலக்கவும்.
இதனை சாதத்துடனோ அல்லது சாதத்துக்கு பக்க உணவாகவோ சாப்பிடலாம்.