பனீர் & பச்சைப்பட்டாணி குருமா / Paneer mutter masala

kurumakuruma

அவரவர் விருப்பம்போல் பனீரை தனியாகவோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்தோ குருமா செய்யலாம்.

தேவையானவை:

பனீர்_சுமார் 100 g
பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1 பெரியது
இஞ்சி_சிறு துண்டு
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
எலுமிச்சை சாறு
கொத்துமல்லி தழை_ஒரு கொத்து
புதினா_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

அரைக்க:

தேங்காய் பத்தை_3
கசகசா_ஒரு டீஸ்பூன்
முந்திரி_2 (அல்லது) சிறிது பொட்டுக்கடலை

தாளிக்க:

எண்ணெய்
கிராம்பு_3
பட்டை_சிறு துண்டு
சீரகம்
பெருஞ்சீரகம்
வெந்தயம்_4 (வாசனைக்கு)

செய்முறை:

பச்சைப்பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிட‌வும்.

வெங்காயம்,தக்காளி இவற்றை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்..இஞ்சி & பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.

அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,முதலில் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

பிறகு வெங்காயம் & தக்காளி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம்போக நன்றாக வதக்கவும்.

அடுத்து பட்டாணியை சேர்த்து வதக்கிவிட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

குருமா கொதி வருவதற்குள் ஒரு கடாய் அல்லது தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விடவும்.

பனீரை சிறுசிறு துண்டுகளாக்கி,எண்ணெய் சூடானதும் கடாயில் போட்டு,பனீரின் எல்லா பக்கங்களும் லேஸாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.அல்லது நறுக்கிய துண்டுகளை அப்படியேகூட‌ சேர்த்துக்கொள்ள‌லாம்.

குருமா கொதிக்க ஆரம்பித்ததும் பனீர் துண்டுகளை சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க‌விடவும்.

குருமா நன்றாகக் கொதித்த பிறகு தேங்காய்,கஸகஸா,முந்திரி இவற்றை மைய அரைத்து குருமாவுடன் சேர்த்து கலக்கிவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்ததும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி,புதினா சேர்த்து இறக்கவும்.

kuruma

இது சாதம்,சப்பாத்தி,பரோட்டா இவற்றிற்கு சூப்பராக இருக்கும்(இருந்தது).

கொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma

தேவையானப் பொருள்கள்:

கொண்டைக்கடலை_ஒரு கப்
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
இஞ்சி_சிறிது
பூண்டு_3 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்

அரைக்க:

தேங்காய்_3 துண்டுகள்
கசகசா_1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை_1/4 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்_கொஞ்சம்
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
முந்திரி_5

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.

குருமா செய்யுமுன் கடலையைக் கழுவிவிட்டு,அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு சேர்த்து,வேக வைத்து,நீரை வடித்து வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொண்டு,இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் தேங்காய்,பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

தாளிப்பு முடிந்ததும் முதலில் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கிவிட்டு,அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு,கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

எல்லாம் நன்றாகக் கலந்து,சிறிது நேரம் கொதித்து,வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு,கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.

இப்போது அருமையான,வீடே மணக்கும் கொண்டைக்கடலை குருமா தயார்.

இது பூரி,சப்பாத்தி,நாண்,சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

பட்டாணி & மொச்சை குருமா

தேவையானப் பொருள்கள்:

மஞ்சள் பட்டாணி_ஒரு கைப்பிடி
மொச்சை_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
இஞ்சி_சிறிது
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்

அரைக்க:

கசகசா_1/2 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பட்டாணி,மொச்சையை முதல் நாளே ஊற வைத்து,குருமா செய்யும்போது சிறிது உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும். கசகசா,தேங்காய் இரண்டையும் மைய அரைத்து வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், பெருஞ்சீரகம் தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அது வதங்கியதும் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து வேக வைத்த பட்டாணி,மொச்சையை சேர்த்து வதக்கவும்.பிறகு மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கி கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மூடி கொதிக்க விடவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து கொதித்து வெந்ததும் கசகசா,தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதனை சாதம்,சப்பாத்தி,நாண் போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாம்.

குருமா வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

முழு பச்சைப் பருப்பு குருமா

 

தேவையானப் பொருள்கள்:

முழு பச்சைப் பருப்பு _  ஒரு  கப்
சின்ன வெங்காயம் _5 லிருந்து 10
தக்காளி _பாதி
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_2 பற்கள்
தேங்காய் கீற்று_2
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பிரிஞ்சி இலை_1

செய்முறை:

முழு பச்சைப் பயறை சுண்டலுக்கு அவிப்பது போல் வேக வை.குழைய வேக வைக்க வேண்டாம்.ஊறிய(அ)முளை கட்டிய பயறு என்றால் வேக வைக்க வேண்டாம்.

வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கி வை.இஞ்சி,பூண்டு தட்டி வை.தேங்காய் அரைத்துக்கொள்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கு.அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கு.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கி,பயறைக் கொட்டிக் கிளறி,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வை.பயறு,மசாலா எல்லாம் ஒன்றாகக் கலந்து வெந்த பிறகு தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கு.

இது சப்பாத்தி,பரோட்டா,நாண்,இட்லி,தோசை இவற்றிற்கு நன்றாக இருக்கும்.

காய்கறி குருமா

 

தேவை:

விருப்பமான காய்கறிகள்_2 கப்

(கேரட்,பீன்ஸ்,காலிஃப்ளவர்,உருளை கிழங்கு,சௌசௌ,வெள்ளை பூசணி,வெங்காயத்தாள்,முருங்கைக்காய்,கத்தரிக்காய் போன்றவை.இவற்றில் ஒரு காயோ அல்லது பல காய்கள் சேர்த்தோ செய்யலாம்.இதில் குறிப்பிட்டுள்ளதைத்தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை.உங்கள் விருப்பப்படி சேர்க்கலாம்)

பச்சை பட்டாணி_1/4 கப்

சின்ன வெங்காயம்_10

தக்காளி_2

பச்சை மிளகாய்_1

இஞ்சி_1 துண்டு

பூண்டு_2 பற்கள்

மிளகாய் தூள்_2 டீஸ்பூன்

மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்

கொத்துமல்லி இலை_2 கொத்து

அரைக்க:

தேங்காய்_3 துண்டுகள்

கசகசா_1 டீஸ்பூன்

தாளிக்க:

சீரகம்_1/2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை_1

முந்திரி_5

எண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சை பட்டாணி சேர்ப்பதாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்.கசகசாவை மிதமான சூட்டில் வறுத்து சிறிது வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும்.காய்களை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும்.இஞசி,பூண்டு நசுக்கி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கி அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு காய்கறிகளை வதக்கவும்.பட்டாணி நன்றாக ஊறி இருந்தால் காய்களுடன் அப்படியே சேர்க்கலாம்.இல்லை என்றால் தனியாக வேகவைத்து சேர்க்கலாம்.இப்போது மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து வேகவிடவும்.

காய் வெந்ததும் கசகசா,தேங்காய் அரைத்து ஊற்றவும்.குருமா கெட்டியாக இருக்கட்டும்.இரண்டு கொதி கொதித்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.புதினா வாசம் பிடிக்குமானால் இரண்டு(அ)மூன்று இலைகள் சேர்க்கலாம்.இப்போது கமகமக்கும் காய்கறி குருமா தயார்.இது சப்பாத்தி,நாண்,இடியாப்பம் இவற்றிற்கு நன்றாகப் பொருந்தும்.