கேரட் & பீன்ஸ் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

பச்சைப் பயறு_ 1/2 கைப்பிடி
கேரட் _ 1 (சிறியது)
பீன்ஸ்_ ஏறக்குறைய 20 (எண்ணிக்கையில்)
சின்ன வெங்காயம்_2
பச்சைமிளகாய்_ 1 (விருப்பமானால்)
மிளகாய்த்தூள்_ 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பாசிப்பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு, ஒரு வாணலியில் போட்டு அது வேகும் அளவை விட சிறிது கூடுதலாக தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்.சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து மூடி வேக வைக்கவும்.

வெங்காயம்,பச்சைமிளகாய்,கேரட்,பீன்ஸ் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.

பருப்பு பாதி வெந்தபிறகு நறுக்கி வைத்துள்ள காய்களை அதனுடன் சேர்த்து,தேவையான உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.

மூடி போட வேண்டாம்.போட்டால் பீன்ஸின் பச்சை நிறம் மாறிவிடும்.

காய்கள் வெந்துகொண்டிருக்கும்போதே மிளகாய்த்தூளை சேர்த்துக் கிளறி விடவும்.

காய்கள் வெந்து,நீர் வற்றியதும் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கவும்.

இப்போது ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துப் பொரியலில் கொட்டிக்கிளறவும்.

இப்போது அருமையான கேரட்,பீன்ஸ் பொரியல் தயார்.

குறிப்பு:

இந்தக் காய்களில்தான் செய்ய வேன்டுமென்பதில்லை.இதனை விருப்பமான எல்லாக் காய்களிலும் செய்யலாம்.

கேரட் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

கேரட்_2
சின்ன வெங்காயம்_2
பச்சை மிளகாய்_1
மஞ்சள் தூள்_சிறிது
வேக வைத்த பச்சைப் பருப்பு (அ துவரம்பருப்பு_1/2 கைப்பிடி
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலை பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கேரட்டைக் கழுவித் துடைத்து வைக்கவும்.

வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.வேக வைத்த பருப்பைப் பிழிந்து வைக்கவும். கேரட்டை கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். (அடுப்பில் கடாயை வைத்த பிறகே துருவிக் கொள்ளலாம். முதலிலேயே துருவி வைத்தால் கேரட்டின் நிறம் மாறிவிடும்.)

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத்   தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், கேரட்,உப்பு சேர்த்து வதக்கி மிதமானத் தீயில் மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம்.காயில் உள்ள தண்ணீரே போதுமானது.வெந்து, பச்சை வாசனை போனதும் பருப்பு,தேங்காய்ப் பூ,கொத்துமல்லி தூவிக் கிளறி இறக்கவும்.

இது எளிமையான,விரைவில் செய்யக் கூடிய ,சுவையான,சத்தான பொரியலாகும்.இது எல்லா சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

இதில் பருப்பு சேர்ப்பதற்கு பதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி முட்டை வெந்ததும் இறக்கலாம்.இதுவும் சுவையாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »