கேழ்வரகு மாவு உருண்டை/லட்டு

தேவையானவை:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வெல்லம்_1/2 கப்
முந்திரி_5
ஏலக்காய்_1
நெய்_கொஞ்சம்

செய்முறை:

அடுப்பில் வாணலை வைத்து நெய் விட்டுக் காய்ந்ததும் முந்திரியைப் போட்டு பொன் வறுவலாக வறுத்தெடுத்துக்கொண்டு,மீண்டும் அதே வாணலில் கேழ்வரகு மாவைப்போட்டு தோசைத் திருப்பியால் கிளறவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.விடாமல் கிளறிவிட்டுக்கொண்டேயிருக்கவும்.

மாவு நன்றாக சூடேறி வாசனை வந்ததும் இறக்கி வைக்கவும்.ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்.தீ மிதமாகவே இருக்கட்டும். அதிகமானால் வெல்லம் அடியில் பிடித்து தீய்ந்து போகும்.

வெல்லம் முழுவதும் கரைந்து நுரைத்துக்கொண்டு பொங்கிவரும்.அப்போது தீயை நிறுத்திவிட்டு மாவைக் கொட்டிக்கொண்டே விடாமல் கிளறவும்.முந்திரி,ஏலத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.

மாவு கை பொறுக்கும் சூடாக இருக்கும்போது  வேண்டிய அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

இப்போது நல்ல வாசனையுடன் கூடிய,சத்தான,சுவையான கேழ்வரகு மாவு உருண்டைகள்/லட்டுகள் தயார்.