அடையைக் கேழ்வரகு மாவில் மட்டுமே செய்தால்கூட கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.இந்த அடையில் கேழ்வரகு மாவுடன் ஓட்ஸ்&பார்லி மாவு சேர்ப்பதால் நல்ல மிருதுவாக இருக்கும்.சத்தானதும்கூட.
கேழ்வரகு&முருங்கைக்கீரை அடைக்கான செய்முறை இங்கேயும்,கேழ்வரகு இனிப்பு அடைக்கான செய்முறை இங்கேயும் உள்ளன.
முருங்கைக்கீரை கிடைப்பதே அரிது.கிடைத்தாலுமே ஐஸில் வைத்து இலைகளெல்லாம் கரும்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.சம்மரில் ஒருசில வாரங்களில் மட்டும்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் திறக்கும்போதே (காலை 9:00 மணி)போனால் மட்டுமே புது முருங்கைக்கீரை கிடைக்கும். அதுவும் இரண்டுமூன்று bunches மட்டுமே இருக்கும்.மேலே படத்திலுள்ளது அவ்வாறு வாங்கியதுதான்.அந்த வார சமையல் முழுவதுமே முருங்கைக்கீரை மயமாகத்தான் இருக்கும்.
அடைக்குத் தேவையானவை:
ஓட்ஸ் மாவு_ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)
பார்லி மாவு_ஒரு கையளவு
கேழ்வரகு மாவு_ஒரு கையளவு
முருங்கைக்கீரை_மூன்று கைப்பிடி
சின்ன வெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_தேவைக்கேற்ப
மேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை:
கீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
ஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.
பிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும்.மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு,அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு,அடையாகத் தட்டவும்.அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.
கல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும்,அடையின் மேலும் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.
எண்ணெயைத் தாராளமாக விட்டால்தான் அடை நன்றாக வெந்தும்& வெண்மையாக இல்லாமலும் வரும்.
தீ மிதமாக இருக்கட்டும்.தீ அதிகமானால் தீய்ந்துவிடும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
சூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும்,நல்ல மணமாகவும் இருக்கும்.