கொண்டைக் கடலை குழம்பு

 

தேவையான பொருள்கள்:
கொண்டைக் கடலை_ 1 கப்
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_10 பற்கள்
புளி_எலுமிச்சை அளவு
மிளகாய் தூள்_ 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
வடகம்_சிறிது
சீரகம்_ 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_ 1 டீஸ்பூன்
வெந்தயம்_1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_சிறிது
உப்பு_தேவையான அளவு
நல்லெண்ணெய்_ 3 டீஸ்பூன்

செய்முறை:

முதல் நாள் ஊற வைத்த கொண்டைக் கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.புளியை 1 கப் தண்ணீரில்  ஊறவைத்து மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வடகம், சீரகம்,கடலைப் பருப்பு,காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து பிறகு வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து கரையும் வை வதக்கி அதனுடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு  சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

ஒரு கொதி வந்ததும் கடலையைப் போட்டு மூடி நன்றாகக் கொதிக்க விடவும்.எண்ணெய் மேலாக பிரிந்து வந்த பிறகு இறக்கவும்.இக் குழம்பை சாதத்துடன் அப்பளம்(அ) வடாம் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:

சிறிது சுக்கை வறுத்து பொடித்து இறக்குவதற்கு முன் போட்டு இறக்கினால் இன்னும் சுவையாக இருக்கும்.

சன்னா மசாலா

 

தேவையான பொருள்கள்:

1. கொண்டைக் கடலை-  1 கப் (கறுப்பு அல்லது வெள்ளை)
2.சின்ன வெங்காயம்-10
3.நன்கு பழுத்த தக்காளி-2
4.இஞ்சி- சிறு துண்டு
5.பூண்டு- 3 பற்கள்
6.மிளகாய் தூள்-2 ஸ்பூன்
7.மஞ்சள் தூள்- 1/2 சிட்டிகை
8.சீரகம்-  1/2 ஸ்பூன்
9.பெருஞ்சீரகம்-  1/4 ஸ்பூன்
10.கொத்துமல்லி தழை- 1 கொத்து
11.உப்பு-தேவையான அளவு
12.எண்ணெய்- 3 ஸ்பூன்

தாளிக்க:

1.கிராம்பு- 1
2.பிரிஞ்சி இலை-1

செய்முறை:

கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்.மறுநாள் கழுவி நீரை வடித்துவிட்டு  தேவையான அளவு நீர்,உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு இவற்றை பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில்  2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம்,பெருஞ்சீரகம் தாளித்து முதலில் வெங்காயம்,பிறகு இஞ்சி,பூண்டு போட்டு வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து கிளறிவிட்டு அதனுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து ந்ன்றாக வதக்கவும்.பிறகு  இறக்கி வைத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் விட்டு கிராம்பு,பிரிஞ்சி  இலை தாளித்து அரைத்து வைத்துள்ள பொருள்களை ஊற்றி கொதிக்கவிடவும்.ஒரு கொதி வந்ததும் வேகவைத்த கொண்டைக் கடலையை சேர்க்கவும்.கடலை , மசாலாவுடன் நன்றாகக் கலந்து கொதித்ததும் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும். இதை சப்பாத்தி,நாண்,பரோட்டாவுக்கு பக்க உண்வாகப் பயன்படுத்தலாம்.

குறிப்பு:

மசாலா வாசனைப் பிடித்தவர்கள் தாளிக்கும்போது சிறிது அதிகமாகவே மசாலா பொருள்களைப் பயன்படுத்தலாம்.

குருமா வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 2 Comments »