கொத்துமல்லிச் செடி

 

கொத்துமல்லி விதைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன.

 

இப்படியாக முளைத்த கொத்துமல்லி விதைகள்

 

இப்படியாக வளர்ந்து

 

இப்பொழுது சமையலுக்குத்  தயாராகிவிட்டது.

 

இரண்டு மூன்று தொட்டிகள் வைத்துக்கொண்டால் சில நாட்கள் இடைவெளியில் வளர்த்துக்கொள்ளலாம்.

 

 

 

Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 2 Comments »

புதினா & கொத்துமல்லி துவையல்

புதினா & கொத்துமல்லியில் துவையல் செய்வது மட்டுமல்லாமல் சாதம் செய்யவும் பயன்படுத்தலாம்.துவையலுக்கு புளியின் அளவைக் கொஞ்சம் குறைத்தும்,சாதம் செய்யும் போது கொஞ்சம் அதிகமாகவும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புதினா,கொத்துமல்லி சாதத்திற்கானக் குறிப்பினைக் காண   இங்கே செல்லவும்.

தேவையானப் பொருள்கள்:

புதினா_ஒரு கட்டு
கொத்துமல்லி இலை_ஒரு கட்டு
புளி_ஒரு கோலி அளவு
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்

செய்முறை:

புதினா,கொத்துமல்லியை ஆய்ந்து, தண்ணீரில் அலசி, நீரை வடிய வைக்கவும்.

மிக்ஸியில் புதினா,கொத்துமல்லி இலை,புளி,பச்சை மிளகாய்,உப்பு இவற்றைப் போட்டு நன்றாக‌ அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து துவையலில் கொட்டி ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.இப்போது  புதினா,கொத்துமல்லி துவையல் தயார்.

புதினா வாசனை பிடிக்காதவர்கள் வாணலியில் சிறிது எண்னெய் விட்டுக் காய்ந்ததும் துவையலைப் போட்டு பிரட்டி ஆறவைத்து பயன்படுத்தலாம்.

இதை எல்லா வகையான சாததிற்கும் தொட்டு சாப்பிடலாம்.இட்லி,தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.

தேங்காய்,பொட்டுக்கடலை,கொத்துமல்லி சட்னி

தேவையானப் பொருள்கள்:

தேங்காய்_1/4 மூடி

பொட்டுக் கடலை_1/4 கப்

கொத்துமல்லி இலை_ஒரு கைப்பிடி  (உருவியது)

பச்சை மிளகாய்_2

முந்திரி_2

இஞ்சி_ஒரு சிறிய துண்டு

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்

கடுகு

உளுந்து

காய்ந்த மிள்காய்_1

பெருங்காயம்

கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

தேவையானப் பொருள்களை எடுத்து வைக்கவும்.தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பல்ஸில் வைத்து ஒரு சுற்று சுற்றி ,பிறகு அதனுடன் தேவையானப் பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து , தேவையான அளவு தண்ணீரையும்  சேர்த்து மைய‌ அரைத்தெடுக்கவும்.அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மூடி வைக்கவும்.இது இட்லி,தோசை,வடை,அடை போன்றவற்றிற்குப் பக்க உணவாகப் பயன்படுத்தலாம்.கெட்டியாக அரைத்தால் துவையலாகவும் உபயோகிக்கலாம்.

இஞ்சி,கொத்துமல்லி துவையல்

தேவை:

இஞ்சி_1 இன்ச் துண்டு
பூண்டு_1/2 பூண்டு
கொத்துமல்லி விதை_1/4 கப்
புளி_ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
வடகம்_1 டீஸ்பூன்
மிளகு_5
சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_2
உப்பு_தேவையான அளவு
நல்லெண்ணெய்_2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக்கவும்.பூண்டையும் தோலெடுத்துவிட்டு சிறு துண்டுகளாக்கவும்.வெறும் வாணலியை அடுப்பில் வைத்து கொத்துமல்லி விதையை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.அதே வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முதலில் வடகம் பிறகு மிளகு,சீரகம்,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து(கருகிப் போகாமல்)எடுத்துக்கொள்ளவும்.அடுத்து இஞ்சியை நன்றாக வதக்கவும்.வதங்கியதும் பூண்டை சேர்த்து வதக்கவும்.அடுத்து புளியை சேர்த்து வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.

ஆறியதும் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு உப்பு,தண்ணீர்  சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். அதே வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அரைத்த துவையலை அதில் போட்டு வதக்கவும். நன்கு கெட்டியாக ஆனதும் இறக்கி ஆறவைத்து எடுத்து வைக்கவும்.இந்த துவையலை இட்லி,தோசை,எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.சுவையாக இருக்கும்.

இஞ்சி,பூண்டு,மிளகு,சீரகம்,பெருங்காயம் இவை இருப்பதால் செரிமானத்திற்கும் நல்லது.

புதினா,கொத்துமல்லி சாதம்

 

தேவையான பொருள்கள்:
பச்சரிசி_ 2 கப்
புதினா_1 கட்டு
கொத்துமல்லி_1 கட்டு
பச்சை மிளகாய்_2
புளி_ஒரு சிறிய உருண்டை
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
கடுகு_1/2 டீஸ்பூன்
உளுந்து_1/2டீஸ்பூன்
கடலைப் பருப்பு_ 1 டீஸ்பூன்
வேர்க் கடலை_ 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
நல்லெண்ணெய்_ 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை_ 5  இலைகள்

செய்முறை:

அரிசியை சிறிது உப்பு போட்டு வேக வைத்து வடித்து ஆறவிடவும்.சாதம் நன்கு உதிர் உதிராக இருக்கட்டும்.

புதினா,கொத்துமல்லியை நன்றாக அலசி நீரை வடிய வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கடுகு,உளுந்து,காய்ந்த மிளகாய் தாளித்து தனியே வைக்கவும்.அதே வாணலியில் பச்சை மிளகாய் போட்டு வதக்கி கூடவே புளியையும் வதக்கி அடுப்பை நிறுத்திவிட்டு புதினா,கொத்துமல்லியை அதில் சேர்த்து கிளறவும்.வாணலியில் உள்ள சூட்டிலேயே கீரை வதங்கிவிடும்.
இதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் தாளித்து வைத்துள்ள பொருள்களையும் போட்டு அரைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி  சீரகம், பெருங்காயம், வேர்க்கடலை,கடலைப் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதைக் கொட்டி ஒரு கொதி வரும்போது சாதம்,சிறிது உப்பு சேர்த்து கிளறி விடவும்.மிதமான தீயில் மூடி போடாமல் சிறிது நேரம் வைத்து இறக்கவும். மூடி போட்டல் பச்சை நிறம் மாறிவிடும். ஏதாவது வறுவல்,வத்தலுடன் நன்றாக இருக்கும்.

 

கீரை, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »