கோதுமை மாவு இடியாப்பம்

 

கோதுமை மாவில் இடியாப்பமா !! நட்பூ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது முதலில் நானும் இப்படித்தான் ஆச்சரியமாகிப்போனேன்.  பிறகு அவர் சொன்னதை வைத்து முயற்சித்துப் பார்த்தேன். நன்றாக வந்தது. பதிந்து வைத்தால் யாருக்காவது உதவுமே என இங்கே எழுதுகிறேன்.

தேவையானவை :

கோதுமை மாவு _ 2 கப்

உப்பு _ ருசிக்கு ஏற்ப

செய்முறை :

இட்லி பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். கோதுமைமாவை ஒரு துணியில் முடிந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும்  இட்லி  தட்டில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும்.  நான் சுமார் 25 நிமிடங்களுக்கு அவித்து எடுத்தேன்.

(மாவு கொழகொழனு இருக்குமோ எந பயந்துகொண்டே எடுத்தேன். ஆனால் சூடான கெட்டியான கல்லு மாதிரி இருந்தது.)

அதை ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு உள்ளங்கைகளால் புட்டு மாவு பிசைவது மாதிரி செய்தால் பொலபொலவென மாவு உதிர்ந்த்கொள்ளும். தேவையான உப்பை சேர்க்கவும்.

இப்போது கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக மாவில் தெளித்து கெட்டியாக இடியாப்பம் பிழியும் பதத்திற்கு பிசையவும். ஒரேயடியாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டாம்.

(இடியாப்ப அச்சிலிருந்து மாவு வெளியே வருமா என சந்தேகத்துடனே பிழிந்தேன். கடகடவென அரிசிமாவு இடியாப்பம் மாதிரியே வந்தது.)

மீண்டும் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். இடியாப்ப அச்சில் மாவை நிரப்பிக்கொள்ளவும்.  தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு அதில் இடியாப்பத்தை பிழிந்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுக்கவும்.

சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு சர்க்கரை, தேங்காய் பூ, ஏலப்பொடி சேர்த்து சாப்பிடலாம்.

அல்லது விருப்பமான குருமாவுடன் சாப்பிடலாம்.

கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

ஸ்டஃப்டு சப்பாத்தி/Stuffed chapathi

தேவையானவை:

கோதுமைமாவு_2 கப்
பட்டர்(அ)எண்ணெய்_சிறிது
தயிர்_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

ஸ்டஃபிங்கிற்கு:

உருளைக்கிழங்கு_2
சின்ன வெங்காயம்_நான்கைந்து
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறிது
பூண்டிதழ்_1
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
எலுமிச்சை சாறு_சிறிது
கொத்துமல்லி இலை_கொஞ்சம்
வறுத்துப் பொடித்த சீரகத்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

செய்முறை:

ஒரு வாணலை அடுப்பிலேற்றி பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை நிறுத்திவிட்டு கோதுமை மாவை போட்டு நன்றாக்கிளறிவிட்டு தயிர் சேர்த்து,உப்பு சேர்த்து ப்ரெட் க்ரம்ஸ் மாதிரி பிசறி விட‌வும்.பிறகு சிறிதுசிறிதாக வெந்நீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி நான்கைந்து மணி நேரம் வைக்கவும்.அல்லது கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்துகொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்துவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.

பச்சைமிளகாய்,சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இஞ்சி,பூண்டு தட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு வதக்குவதக்கி மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து,கொத்துமல்லி தூவி, எலுமிச்சை சாறு விட்டு சீரகத்தூள் சேர்த்து அடுப்பை நிறுத்திவிடவும்.

மசாலாவை நன்றாகப் பிசைந்துவிட்டு சிறு எலுமிச்சை அளவு உருண்டகளாக்கிக்கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றவும்.பிறகு பிசைந்துவைத்துள்ள மாவில் ஒரு எலுமிச்சை அளவு மாவு எடுத்து சிறு வட்டமாகத் தட்டிக்கொண்டு அதில் ஒரு உருண்டை மசாலாவை வைத்து மூடி,மூடிய பகுதியை கீழ்ப்புறம் வைத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொண்டு போளிக்குத் தட்டுவதுபோல் கொஞ்சம் மெல்லியதாகத் தட்டவும்.

அல்லது பூரிக்கட்டையால் மெதுவாக,மசாலா வெளியே வந்துவிடாதவாறு உருட்டவும்.

மசாலா சப்பாத்தி முழுவதும் பரவியிருக்க வேண்டும்.அப்போதுதான் சாப்பிடும்போது நன்றாக இருக்கும்.

தோசைக்கல் சூடேறியதும் தட்டி வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும்,மேலாகவும் சிறிது எண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.

முதல்முறை செய்வதாக இருந்தால் சப்பாத்தி முழுவதையும் போட்டு வைத்துக்கொண்டு சுட்டெடுக்கவும்.அல்லது ஒன்றிரண்டு செய்யும்போதே வேகம் வந்துவிடும்.

உருளைக்கிழங்கிற்கு பதில் வெந்தயக்கீரை அல்லது முள்ளங்கி வைத்தும் செய்யலாம்.

தொட்டு சாப்பிட குருமா இல்லையென்றாலும் கெட்சப்புடன்,அதுவும்கூட வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.நன்றாக இருக்கும்.

கோதுமை மாவு சப்பாத்தி

தேவையானப் பொருள்கள்:

கோதுமை மாவு_3 கப்புகள்
தயிர்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்து.கை பொறுக்கும் சூடு ஆனவுடன், அடுப்பை அனைத்துவிட்டு அதே சூட்டில் மாவைக் கொட்டி நன்றாகக் கிளறு.பின்பு கைகளால் எண்ணெய் மாவு முழுவதும் படுமாறு நன்றாகப் பிசைய வேண்டும்.அடுத்து தயிர்,உப்பு சேர்த்து முன்பு போலவே நன்றாகப் பிசைய வேண்டும்.அடுத்து  ஒரு கப் சூடானத் தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து நன்றாகப் பிசைய வேண்டும்.பூரி மாவை விட சற்றுத் தளர்வாக இருக்க வேண்டும்.ஒரு  பேப்பர் டவலை (அ) ஒரு துணியை  நனைத்துப் பிழிந்துவிட்டு மாவைச் சுற்றி வைத்து ஒரு மூடியைப் போட்டு மூடி வை.சப்பாத்தி சுடுவதற்கு முன் கண்டிப்பாக குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்பே மாவைப் பிசைந்து வைத்து விட வேன்டும்.அப்போதுதான் நல்ல மிருதுவான சப்பாத்தியைப் போடலாம்.

ஒரு அடி கனமானத் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கு.மாவில் இருந்து ஒரு சிறு எலுமிச்சை அளவு எடுத்து லேசாக உருட்டி இரண்டு பக்கமும் ஒரு சொட்டு  எண்ணெய் விட்டு  பூரிகட்டையின் உதவியால்  வட்டாமாக உருட்டு.பூரியை விட சற்று மெல்லியதாக இருக்க வேண்டும்.கல் நல்ல சூடானதும் அதில் போடு.கண்டிப்பாக கல் நல்ல சூடாக இருக்க வேண்டும்.

 

 

சிறுசிறு பபுள்ஸ் மாதிரி வரும்.அடுத்த பக்கம் திருப்பி விட்டு,ஒரு ஸ்பூனின் அடிப்பகுதியில் எண்ணெய் தொட்டு சப்பாத்தி முழுவதும் தேய்த்து விட்டு திருப்பிப் போட்டு மறுபக்கமும் அதே போல் எண்ணெய் தடவு.இப்போது சப்பாத்தி பூரியைப் போல் உப்பிக்கொண்டு வரும்.

இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து விடு.இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொள்.நல்ல சாஃப்டான சப்பாத்தி ரெடி.

இதற்கு விருப்பம் போல் சைவ,அசைவ குருமா தொட்டு சாப்பிடலாம்.

சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

பூரி & கிழங்கு

IMG-20150315-WA0005

பூரி செய்யத் தேவையானப் பொருள்கள்:

கோதுமை மாவு_3 கப்
ரவை_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பூரி சுடத் தேவையான அளவு

செய்முறை:

முதலில் ரவை நன்றாக ஊறும்  அளவிற்கு தண்ணீர் விட்டு ஒரு 2 நிமி ஊற வைத்து பிசைந்துகொள்.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,உப்பு எடுத்துக்கொண்டு கைகளால் நன்றாகக் கலந்துகொண்டு,அதில் பிசைந்த ரவையைப் போட்டு,சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.மாவு பிசைந்த உடனேயே பூரியை சுட்டு விட வேண்டும்.அதிக நேரம் வைத்திருந்தால் பூரி சிவந்துவிடும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவில் இருந்து சிறு எலுமிச்சை அளவிற்கு எடுத்து கைகளால் உருட்டி கோதுமை மாவில் புரட்டி பூரி கட்டையில் வைத்து சிறு வட்டமாகத் தேய்த்து (சப்பாத்தியை விட சிறிது கனமாக) எண்ணெயில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி வீட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.சிவக்க விட வேண்டாம்.இதுபோல் ஒவ்வொரு பூரியாக சுட்டு எடு.

மசாலா கிழங்கு செய்யத் தேவையானப் பொருள்கள்:

உருளைக் கிழங்கு_ 2 (அ) 3
பச்சைப் பட்டாணி_ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம்_10 (அ) பெரிய வெங்காயம்_1
தக்காளி_பாதி
பச்சை மிளகாய்_1
இஞ்சி_மிகச்சிறிய துண்டு
பூண்டு_ஒரு பல்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_ ஒரு டீஸ்பூன்
பிரிஞ்சி இலை_1
சீரகம்
உளுந்து
கடலைப் பருப்பு
முந்திரி_2
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_ஒரு கொத்து

செய்முறை:

பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வை.இப்போது பட்டாணியை வேக வை.உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ஆறியதும் ஒன்றும் பாதியுமாக கைகளால் பிசைந்து வை..வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி பொடியாக நறுக்கி வை.இஞ்சி,பூண்டு தட்டி வை.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கு.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கு.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கு.அது வதங்கியதும் மஞ்சள்தூள்,உருளைக் கிழங்கு,பட்டாணி சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீர்,உப்பு சேர்த்து மிதமானத் தீயில் கொதி வரும் வரை மூடி வை. நீண்ட நேரம் கொதிக்க வேண்டாம். கொதி வந்ததும் 1/2 டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவை எடுத்து சிறிது நீர் விட்டுக் கரைத்து மசாலாவில் ஊற்றினால் கிழங்கு தனித்தனியாக இல்லாமல் எல்லாம் ஒன்றாகக் கலந்திருக்கும்.நன்றாகக் கிளறி விட்டு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கு.

குறிப்பு:

வெறும் கோதுமை மாவில் பூரி செய்தால் சிறிது நேரத்தில் பூரி அமுங்கிவிடும்.அதனுடன் ரவையைச் சேர்த்தால் எவ்வளவு நேரமானாலும் அமுங்காமல் அப்படியே இருக்கும்.

முள்ளங்கி பரோட்டா


தேவை:

கோதுமை மாவு_3 கப்

முள்ளங்கி_1/2 துண்டு

சின்ன வெங்காயம்_2

பச்சை மிளகாய்_1

தயிர்_1 டீஸ்பூன்

கொத்துமல்லி இலை_1 கொத்து

மிளகாய் தூள்_1 டீஸ்பூன்

மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

ஓமம்

சீரகம்

பெருங்காயம்_சிறிது

எண்ணெய்_1 டீஸ்பூன்

செய்முறை:

முள்ளங்கியை கழுவித் துடைத்து கேரட் துருவியால் துருவவும். வெங்காயத்தையும் அவ்வாறே துருவவும்.பச்சை மிளகாயை பொடியாக ந‌றுக்கவும். ஒரு வாண‌லியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஓமம்,சீரகம்,பெருங்காயம் தாளித்து முள்ளங்கி,சி.வெங்காயம்,பச்சை மிளகாய்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்,தண்ணீர் ஊற்ற‌ வேண்டாம்.வதங்கிய பிறகு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

கலவை சிறிது இளஞ்சூடாக இருக்கும்போதே கொதுமை மாவு,தயிர்,உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ள வேண்டும்.தண்ணீர் போதவில்லை என்றால் மட்டுமே தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.ஒரு ஈரத்துணியை(அ)பேப்பர் டவலை நனைத்து பிழிந்து மாவின் மீது போட்டு மூடி வைக்கவும்.சுமார் ஒன்று(அ)2 மணி நேரமாவது ஊறட்டும்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடேற்றவும்.அது சூடேறியதும் ஒரு எலுமிச்சை அளவு மாவு எடுத்து சப்பாத்தியாக தேய்த்து சப்பாத்தி சுடுவது போலவே சுட்டெடுக்கவும்.விருப்பமான குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இன்னும் சிவப்பு முள்ளங்கியாக இருந்தால் சப்பாத்தி சிறிது ரோஸ் நிறத்தில் அழகாக இருக்கும்.