சர்க்கரைப் பொங்கல்

சூடாக இருக்கும்போது கொஞ்சம் தளர்வாக இருக்கும்.    அதுவே     ஆறியதும்      இறுகிவிடும்.

சர்க்கரைப் பொங்கல் & சாதாரண வெண் பொங்கல்

பொங்கலன்று சாதாரண வெண்பொங்கல்,சர்க்கரைப் பொங்கல் செய்வது வழக்கம்.

இவற்றின் புகைப்படம் தற்சமயம் இல்லையாதலால் செய்முறை மட்டுமே போட்டுள்ளேன்.பொங்கலன்று படத்தை இணைத்துவிடுகிறேன்.

சர்க்கரைப் பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பச்சைப் பருப்பு_1/3 கப்
வெல்லம்_ஒரு கப்
பால்_1/2 கப்
ஏலக்காய்_2
குங்குமப்பூ_ஒரு 15 இதழ்கள்
முந்திரி_15
திராட்சை_15
நெய்_1/4 கப்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.ஆறிய பிறகு   கழுவிவிட்டு அதில்  4 கப்புகள் அளவிற்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

பருப்பு பாதி வெந்த நிலையில் அரிசியைக் கழுவி அதில் சேர்த்து விடவும். அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்தால் அரிசி வெந்து விடும்.பருப்பு வேகாமல் இருக்கும்.எனவே முதலில் பருப்பையும் அடுத்து அரிசியையும் சேர்க்க வேண்டும்.

இரண்டும் ஒன்றாகக் கலந்து நன்றாகக் குழைய வேக வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து இளம் பாகு பதம் வந்ததும் அதை குழைய வெந்துள்ள பொங்கலில் கொட்டிக் கிளறி விடவும். அடுத்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.

அடுத்து நெய்யில் முந்திரி,திராட்சையை வறுத்து நெய்யுடன் சேர்த்துக் கொட்டிக் கிளறி இறக்கவும்.

சாதாரண வெண்பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பால்_1/4 கப்

செய்முறை:

ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் அளவிற்கு பாலும் தண்ணீருமாகச் சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதித்து பொங்கி வரும்போது அரிசியைப் போட்டு அடிப்பிடிக்காமல் அடிக்கடிக் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.நன்கு குழைய வெந்த பிறகு இறக்கவும்.

இதற்கு பொங்கல் குழம்பு அல்லது கருனைக் கிழங்கு புளிக் குழம்பு நன்றாக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல் (கோதுமை அரிசி)

தேவையானப் பொருள்கள்:

கோதுமை அரிசி_ 1  கப்
பச்சைப் பருப்பு_1/4 கப்
வெல்லம்_1 கப்
முந்திரி_10
திராட்சை_10
பால் (அ) தேங்காய்ப் பால்_1/4 கப்
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து சுமார் 4 கப்புகள் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.நன்றாக வெந்ததும் கோதுமை அரிசியை சேர்த்துக் கிளறி வேக வைக்கவும்.நன்றாகக் குழைய வேக வேண்டும்.

இது வெந்துகொண்டிருக்கும்போதே வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மிதமானத் தீயில் கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்து வரும்.லேசான பாகு பதம் வரும் போது இறக்கிப்  பொங்களில் ஊற்றிக் கிளறவும்.பிறகு பால் விட்டுக் கிளறி,ஏலக்காயைப் பொடித்துப் போட்டு  சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.

அடுத்து ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கி முந்திரி,திராட்சை வறுத்து பொங்களில் கொட்டிக் கிளறவும். சுவையான,இனிப்பான‌ கோதுமைச் சர்க்கரைப் பொங்கல் தயார்.

குறிப்பு:

கோதுமை அரிசியை வறுக்க வேண்டாம்.வறுத்தால் குழைய வேகாமல் உதிருதிராக உப்புமா போல் வரும். உப்புமா செய்வதாக இருந்தால் மட்டுமே வறுக்க வேண்டும்.

கோதுமை அரிசி வாங்கும் போது ரவை மாதிரி இல்லாமல் ஒன்றிரண்டாக உடைத்த அரிசியாக வாங்கினால் சாதம்,பொங்கல்,உப்புமா என வெரைட்டியாக செய்வதற்கு நன்றாக இருக்கும்.