தேவையானவை:
ஃப்ளோர் டார்டியாஸ் / Flour tortillas_ஒரு நபருக்கு ஒன்று வீதம்.
சாதம்_வெள்ளை (அ)சிவப்பு (அ) கருப்பு
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்_இதற்கு பதிலாக இனிப்பு மிளகாய்கள் சேர்த்துள்ளேன்.
அவகாடோ
ஸ்வீட் கார்ன்/Sweet corn_இல்லை என்பதால் சேர்க்கவில்லை
சல்ஸா
சோர் க்ரீம்/Sour cream
ப்ளாக் பீன்ஸ்/Black beans_இல்லை என்பதால் பெரும்பயறு சேர்த்துள்ளேன்.
துருவிய சீஸ்
லெட்யூஸ் இலைகள்
கொத்துமல்லி தழை
தேவையானப் பொருள்களையும்,அதிகமான படங்களையும் பார்த்து மலைக்க வேண்டாம்.செய்வதற்கு ரொம்பவே சுலபம்.
தேவையானப் பொருள்களில் ஒன்றிரண்டு கூடினாலும் குறைந்தாலும் பிரச்சினையில்லை.ஆனால் டார்டியாவை மட்டும் செக் பண்ணிடுங்க.
அதேபோல் அளவெல்லாம் தேவையில்லை.விருப்பமானதை கூட்டியும்,குறைத்தும் சேர்க்கலாம்.
செய்முறை:
பயறை ஊற வைத்து,வேக விட்டு ஸ்பூன் அல்லது விரலால் ஒன்றும் பாதியுமாக மசித்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,மிளகாய்,லெட்யூஸ்,கொத்துமல்லி இவற்றை எல்லாம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
மற்ற பொருள்களையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
டார்டியாவை சூடான தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் திருப்பிவிட்டு, சூடாகியதும் எடுத்து ஒரு அகலமான தட்டில் வைக்கவும்.
அதன் உள்ளே வைத்து நிரப்பப்போகும் பொருள்களை எல்லாம் நீளவாக்கில்தான் வைக்கப் போகிறோம்.அப்போதுதான் மடித்து,சுருட்டுவதற்கு வசதியாக இருக்கும்.
முதலில் ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சாதத்தை நீளவாக்கில் தூவினாற்போல் பரப்பி விடவும்.
அடுத்து லெட்யூஸ் இலைகள்,கொத்துமல்லி இவற்றை சேர்க்கவும்.
அதன்மேல் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்க்கவும்.
அடுத்து வெந்த பயறை சேர்க்கவும்.
அதன்மேல் சல்ஸா,சோர் க்ரீம்,துருவிய சீஸ் இவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக சேர்க்கவும்.
இறுதியாக படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டு பக்கமும் மடித்துப் பிடித்துக்கொண்டு, கீழ் பகுதியை (1 ஐ) மேல் பக்கமாக (2 ஐ நோக்கி) மடித்துவிட்டு இறுக்கி சுருட்டவும்.
இரண்டு பக்கமும் மடித்ததை ஃபோட்டோ எடுப்பதற்காக டூத்பிக் சொருகியுள்ளேன்.படம் எடுத்ததும் குச்சிகளை எடுத்துவிடுவேன்.
இப்போது சுவையான வெஜ் புரிடோ சாப்பிடத் தயார்.
ஏற்கனவே சொன்னதுபோலவேதான்,அப்படியே சாப்பிட்டால் கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும் என்பதால் ஒரு பேப்பர் டவலில் சுற்றிக் கொடுத்தால் கவலைப் படாமல் சாப்பிடலாம்.
வெளியில் எடுத்துச் செல்வதாக இருந்தால் அலுமினம் ஃபாயிலில் சுருட்டி எடுத்துச்செல்லலாம்.