தேங்காய் சாதம்

 

தேங்காய் சாதத்திற்கு தேர்ந்தெடுக்கும் தேங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும்.கொஞ்சம் இனிப்பான,சதைப்பற்றுள்ளத் தேங்காயானால் சுவை அதிகமாக இருக்கும்.

முந்திரி,வேர்க்கடலை இவற்றைப் போட வேண்டுமென்பதில்லை. விருப்பமானால்,வீட்டில் இருந்தால் போடலாம்.

சாதத்தை அடுப்பிலிருந்து இறக்கும்போது அப்பளத்தைப் பொரித்து,நொருக்கிப் போட்டும் இறக்கலாம்.

தேவையானவை:

அரிசி_ஒரு கப்
தேங்காய்ப்பூ_ஒரு கப்
இஞ்சி_சிறுதுண்டு
பச்சைமிளகாய்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
வேர்க்கடலை
முந்திரிபருப்பு
பெருங்காயம்
காய்ந்தமிளகாய்
கறிவேப்பிலை

செய்முறை:

அரிசியுடன் சிறிது உப்பு சேர்த்து  வேக வைத்து உதிர் உதிராக வரும் பக்குவத்தில் வடித்து,பிறகு ஆறவைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு, இஞ்சி, பச்சைமிளகாய்  சேர்த்து வதக்கவும்.

அடுத்து தேங்காய்ப்பூ சேர்த்து நன்றாக வதக்கவும்.இது வதங்கும்போதே சிறிது உப்பை ஸ்ப்ரே பன்னவும்.ஏற்கனவே சாதத்தில் உப்பு சேர்த்து வடித்திருக்கிறோம்.

தேங்காய்ப்பூ நன்றாக வதங்கி சிவந்து வரும்போது ஆறிய சாதத்தைக்கொட்டிக் கிளறவும்.சாதம் சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

மிக எளிதாக செய்யக்கூடிய தேங்காய் சாதம் தயார்.

இதற்கு அப்பளம்,வத்தல்,பருப்புத் துவையல்,வறுவல்,பொரியல் எல்லாமே நன்றாக இருக்கும்.

நிறைய சாத வகைகள் செய்யும்போது இதையும் செய்தால் கலர்கலரான சாதங்களுக்கு மத்தியில் பளீர் வெண்மையுடன் கலக்கலாக இருக்கும்.இதனை மீதமான சாதத்திலும் செய்யலாம்.

 

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , . 6 Comments »

தயிர்சாதம்-2

 

தயிர் சாதம் செய்யும்போது தயிர் மட்டும் சேர்த்தோ அல்லது பால்&தயிர் சேர்த்தோ செய்வோம்.போதுமான தயிர் இல்லாத சமயத்தில் இந்த செய்முறை கைகொடுக்கும்.இதில் என்ன விசேஷமென்றால் தயிர் குறைவாக சேர்த்தாலும் மிக அதிகமாக சேர்த்ததுபோலவே இருக்கும்.சுவையும் சூப்பராக இருக்கும்.ஒரு தடவை இந்த முறையில் செய்தால் அடுத்தடுத்து இப்படியேதான் செய்வீங்க.

செய்முறைக்கான லிஸ்ட்தான் நீளமாக இருக்கிறதே தவிர செய்வது மிக எளிது. அலங்கரிக்க பகுதியை உங்கள் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம்.

தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
தயிர்_ 3 டேபிள் ஸ்பூன்
சாதம் வடித்த கஞ்சித்தண்ணீர்_சாதத்தில் 1/4 பங்கு
உப்பு_தேவைக்கு

அலங்கரிக்க:

இஞ்சி
பச்சை மிளகாய்
கொத்துமல்லி இலை
கேரட்
திராட்சை
மாதுளை முத்துக்கள்
வெள்ளரிப் பிஞ்சு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

அரிசியை சாதாரணமாக வேக வைத்து வடிக்கவும்.குழைய வேண்டுமென்பதில்லை.நீர் வடிந்ததும் சூடான சாதத்தில் அதன் அளவில் 1/4 பங்கிற்கு இப்போது வடித்த சூடான கஞ்சித்தண்ணியை ஊற்றி ஒரு ஸ்பூனால் நன்றாகக் கலக்கவும்.சாதம் உடைந்து,நொறுங்கி தண்ணீருடன் சேர்ந்துவிடும்.

பிறகு தாளிக்க வேண்டியதைத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.சாதம் நன்றாக ஆறிய பிறகு தயிர்,உப்பு சேர்த்துக் கிண்ட வேண்டும்.தயிர் கொஞ்சமே சேர்த்தாலும் நிறைய சேர்த்ததுபோல் இருக்கும்.

அதன் பிறகு இஞ்சி,பச்சை மிளகாய்,கொத்துமல்லி இலை,கேரட், திராட்சை,மாதுளை முத்துக்கள்,வெள்ளரிப் பிஞ்சு இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி சேர்த்துவிடலாம்.

இப்போது சுவையான வெயிலுக்கேற்ற தயிர் சாதம் ரெடி.இதிலேயே காரம்,காய்,பழமென எல்லாம் இருப்பதால் தொட்டு சாப்பிட எதுவுமே தேவையில்லை.அப்படியே சாப்பிடலாம்.

கிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 15 Comments »

பிஸிபேளாபாத்

தேவையானவை:

அரிசி_ஒரு கப்
துவரம் பருப்பு_1/2 கப்
விருப்பமான காய்கறிகள்_2 கப் (நறுக்கியது)
(ப.பட்டாணி,பீன்ஸ்,கேரட்,உருளைக்கிழங்கு,முருங்கைக்காய்,கத்தரிக்காய்)
சின்ன வெங்காயம் _10
தக்காளி_1
புளி_கோலி அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

பிஸிபேலாபாத் பொடி தயாரிக்க:

கொத்துமல்லி விதை_2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
கடலைப் பருப்பு_ஒரு டீஸ்பூன்
வெந்தயம்_சிறிது
கஸகஸா_ஒரு டீஸ்பூன்
கிராம்பு_1
பட்டை_1
லவங்கம்_1
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை

காரம்,மசாலா வாசனை அதிகம் வேண்டுமானால் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

வெறும் வாணலியில் துவரம் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.துவரம் பருப்பை வறுத்து செய்யும்போது நல்ல வாசனையாக இருக்கும்.

அரிசியில் புழுங்கலரிசியை எடுத்துக்கொள்வது நல்லது.நின்று வேகும்.

ஒரு குக்கரில் அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் கழுவிவிட்டு எப்போதும் சாதத்திற்கு  வைக்கும் தண்ணீரை விட கொஞ்சம் கூடுதலாக விட்டு,சிறிது மஞ்சள்தூள்,சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். பருப்பிற்கும் சேர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே பொடியைத் தயார் செய்துகொள்ளலாம்.

வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்க வேண்டியவற்றைத் தனித்தனியாக வறுத்து,ஆறியதும் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.

காய்கறிகளை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு, வெங்காயம்,தக்காளி,காய்கறிகள் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீர்,சிறிது உப்பு சேர்த்து,காய்கள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி காய் வெந்து வரும்வரை மூடி கொதிக்கவைக்கவும்.ஏற்கனவே சாதத்தில் உப்பு சேர்த்திருப்பதால்  கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளவும்.

காய் வெந்ததும் பொடித்து வைத்துள்ளப் பொடியைப்போட்டுக் கலந்துவிட்டு ஒரு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

இப்போது காய்கறி கலவையை எடுத்து வெந்த பருப்புசாதத்தில் கொட்டிக் கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

இதற்கு உருளைக்கிழங்கு,மசால் வடை,அப்பளம்,வத்தல் என எல்லாமே நன்றாக இருக்கும்.

குறிப்பு:

பொடி செய்ய முடியவில்லையெனில் சாம்பாருக்குப்போடும் மிளகாய்த்தூளையேப் பயன்படுத்திக் கொள்ளலாம் . தாளிக்கும்போது மட்டும் கிராம்பு,பட்டை,லவங்கம் சேர்த்து  தாளித்துக்கொள்ளலாம்.

உருளைக் கிழங்கு சாதம்

தேவையானப் பொருள்கள்:

அரிசி_1 கப்
உருளைக் கிழங்கு_1 (சிறியதாக இருந்தால் 2)
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_1 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ ஒரு கொத்து

வறுத்து அரைக்க:

கசகசா_1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
கொத்துமல்லி விதை_1 டீஸ்பூன்
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
சின்ன வெங்காயம்_1

தாளிக்க:

சீரகம்_1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை_5 இலைகள்
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை நன்றாக வேக வைத்து ஆற வைக்கவும்.உருளையை வேக வைத்து தோலுரித்து சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வெறும்  வாணலியில்  கசகசா,பெருஞ்சீரகம்,காய்ந்த மிளகாய்,கொத்துமல்லி விதை இவற்றை தனித்தனியாகப் போட்டு வறுத்துக்கொள்ளவும்.கடைசியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு,வெங்காயம் இவற்றை வதக்கவும். இவை அனைத்தும் ஆறியதும் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயம் போட்டு உருளைக்கிழங்கு,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,சிறிது உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைக்கவும்.

மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம்,கறிவேப்பிலைத் தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி நன்றாக வதக்கவும்.தேங்காய்ப் பாலையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமானத் தீயில் வதக்கவும்.நன்றாக வதங்கியதும் வறுத்து வைத்துள்ள உருளைக் கிழங்கை சேர்த்து ஒரு கிளறு கிளறி சாதத்தையும் சேர்த்துக் கிளறி,எலுமிச்சை சாறு கலந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

தக்காளி சாதம்

தேவையானப் பொருள்கள்:

பாசுமதி அரிசி (அ) பச்சரிசி _ 2 கப்புகள்

தக்காளி_2

சின்ன வெங்காயம்_2

இஞ்சி_ஒரு சிறு துண்டு

பச்சை மிள்காய்_1

மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்

மஞ்சள் தூள்_ஒரு சிட்டிகை

தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்

கொத்துமல்லி இலை_1 கொத்து

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டேபிள்ஸ்பூன்

கடுகு

உளுந்து

கடலைப் பருப்பு

சீரகம்_1/4 டீஸ்பூன்

பெருஞ்சீரகம்_1/4  டீஸ்பூன்

முந்திரி_5

பெருங்காயம்_சிறிது

கறிவேப்பிலை_1 கொத்து

செய்முறை:

முதலில் அரிசியை முக்கால் பதமாக வேக வைத்து உதிர் உதிராக ஆற வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும். சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து வெங்காயம்,இஞ்சி சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அடுத்து அதனுடன் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.பிறகு தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி  காரம்,உப்பு சரிபார்த்து ஆறிய சாதத்தைக் கொட்டிக் கிளறி,எலுமிச்சை சாறு சேர்த்து மிதமானத் தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும்.பிறகு அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லி இலைத் தூவி லேசாகக் கிளறி விடவும்.

நீண்ட நேரம் அடுப்பில் இருந்தாலோ அல்லது அடிக்கடி வேகமாகக் கிளறினாலோ சாதம் குழைந்து விடும்.

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

தயிர் சாதம்

 

தேவை:
அரிசி_ 2 கப்
பால்_ 3 கப்
தயிர்_ 1 கப்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:
கடுகு_1/4 டீஸ்பூன்
உளுந்து_1/2 டீஸ்பூன்
சீரகம்_கொஞ்சம்
முந்திரி_10
உலர் திராட்சை_10
காய்ந்த மிளகாய்_2
இஞ்சி_1 துண்டு
பச்சை மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்
நல்லெண்ணெய்_ 1 டீஸ்பூன்

அலங்கரிக்க:
கேரட்_1 துண்டு
வெள்ளரி_ 1 துண்டு
திராட்சை_10
கொத்துமல்லி இலை_1 கொத்து

செய்முறை:

சாதத்தை கொஞ்சம் குழைவாக வேகவைக்கவும்.ஆற வைக்க வேண்டாம்.பாலை நன்றாகக் காய்ச்சி சூடான சாதத்தில் ஊற்றிக் கிளறவும்.இப்போது சாதம் உடைந்து நன்றாகக் குழைந்திருக்கும்.சாதம் இளஞ் சூடாக இருக்கும்போதே தயிர்,உப்பு சேர்த்துக் கிளறவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறி மூடி வைக்கவும்.கேரட்,வெள்ளரிக்காய் இவற்றை வேண்டிய வடிவத்தில் நறுக்கி,அதனுடன் திராட்சையையும் பரிமாறும்போது சேர்த்துக் கொள்ளலாம்

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , . Leave a Comment »

எலுமிச்சை சாதம்

 

தேவை:
அரிசி_ 2 கப்
எலுமிச்சை பழம்_2
கொத்துமல்லி இலை_ 1 கொத்து
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:

கடுகு_1/2 டீஸ்பூன்
உளுந்து_1/2 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
வேர்க் கடலை_1 கைப்பிடி
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்_1
கொத்துமல்லி தூள்_1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை_5 இலைகள்
நல்லெண்ணெய்_ 2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை சிறிது உப்பு போட்டு உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். எலுமிச்சையை இளஞ்சூடான நீரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் சாறு பிழிய எளிதாக இருக்கும்.சாறு பிழிந்து தனியாக வைக்கவும்.சாறில் தண்ணீர் ஊற்றக் கூடாது.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம்,வேர்க்கடலை,கடலை பருப்பு,காய்ந்த மிளகாய், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து மஞ்சள் தூள், கொத்துமல்லி தூள் சேர்த்து (தீ மிதமாக இருக்க வேண்டும்.இல்லை என்றால் பொருள்கள் தீய்ந்து போகும்) உடனே சாறு,உப்பு சேர்த்து தீயை நிறுத்தி விட்டு சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.பிறகு சிறிது நேரம் அடுப்பிலேயே மூடி வைக்கவும்.பிறகு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

புதினா,கொத்துமல்லி சாதம்

 

தேவையான பொருள்கள்:
பச்சரிசி_ 2 கப்
புதினா_1 கட்டு
கொத்துமல்லி_1 கட்டு
பச்சை மிளகாய்_2
புளி_ஒரு சிறிய உருண்டை
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
கடுகு_1/2 டீஸ்பூன்
உளுந்து_1/2டீஸ்பூன்
கடலைப் பருப்பு_ 1 டீஸ்பூன்
வேர்க் கடலை_ 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
நல்லெண்ணெய்_ 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை_ 5  இலைகள்

செய்முறை:

அரிசியை சிறிது உப்பு போட்டு வேக வைத்து வடித்து ஆறவிடவும்.சாதம் நன்கு உதிர் உதிராக இருக்கட்டும்.

புதினா,கொத்துமல்லியை நன்றாக அலசி நீரை வடிய வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கடுகு,உளுந்து,காய்ந்த மிளகாய் தாளித்து தனியே வைக்கவும்.அதே வாணலியில் பச்சை மிளகாய் போட்டு வதக்கி கூடவே புளியையும் வதக்கி அடுப்பை நிறுத்திவிட்டு புதினா,கொத்துமல்லியை அதில் சேர்த்து கிளறவும்.வாணலியில் உள்ள சூட்டிலேயே கீரை வதங்கிவிடும்.
இதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் தாளித்து வைத்துள்ள பொருள்களையும் போட்டு அரைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி  சீரகம், பெருங்காயம், வேர்க்கடலை,கடலைப் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதைக் கொட்டி ஒரு கொதி வரும்போது சாதம்,சிறிது உப்பு சேர்த்து கிளறி விடவும்.மிதமான தீயில் மூடி போடாமல் சிறிது நேரம் வைத்து இறக்கவும். மூடி போட்டல் பச்சை நிறம் மாறிவிடும். ஏதாவது வறுவல்,வத்தலுடன் நன்றாக இருக்கும்.

 

கீரை, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »