சேமியா பொங்கலுக்கு ரவை சேர்த்துத்தான் செய்யவேண்டுமென்பதில்லை.தனி சேமியாவில் செய்தாலும் சுவையாக இருக்கும்.
உப்பமா என்றாலே சிலருக்கு வெறுப்பாக இருக்கும்.அதிலும் சேமியா,ரவை உப்புமா என்றால் கேட்கவே வேண்டாம். உப்புமாவிற்கு பதிலாக இவற்றை வைத்து பொங்கலாக செய்யும்போது அதிலும் நெய்யில் மிளகு,சீரகத்தை வறுக்கும் வாசனை வந்தவுடன் உடனே சாப்பிடத்தோணும்.
தேவையானப் பொருள்கள்:
சேமியா_2 கப்
ரவை_1/2 கப்
பச்சைப் பருப்பு_1/2 கப்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நெய்_2 டீஸ்பூன்
மிளகு_1 டீஸ்பூன்
சீரகம்_1 டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் சேமியாவையும்,ரவையையும் தனித்தனியாக சூடு வர வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து, ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு கொதி நிலை வரும்வரை மூடி வைக்கவும்.
பச்சைப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றவேண்டாம்.
தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.
மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவை கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்து ,கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.
சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி,கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
ரவை முழுவதையும் சேர்த்த பிறகு,நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி,மூடி வைக்கவும்.இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.
இப்போது சேமியா பொங்கல் சாப்பிடத் தயாராக உள்ளது.
இது நல்ல வாசனையாகவும்,சுவையாகவும்,எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
இதற்கு தேங்காய் சட்னிதான் மிகப் பொருத்தம்.சாம்பாரும் நன்றாக இருக்கும்.