நான் எப்போதாவது flour tortillas/ ஃப்ளோர் டார்டியாஸ் வாங்குவேன்.இது சாஃப்ட் சப்பாத்தி மாதிரி இருக்கும்.லத்தீன் அமெரிக்கன் ப்ரெட்.அவர்கள் இதை வைத்து பலவிதமான உணவுகளைத் தயார் செய்வர்.அதில் ஒன்றுதான் இந்த சிப்ஸ். இங்கு L ஐ சைலண்டாக உச்சரிக்க வெண்டும் என்பதால் tohr/tee/yahs என்றே சொல்ல வேண்டும்.ஒருமையில் Tortilla, பன்மையில் Tortillas.
இதை வீட்டில் யாருக்கும் பிடிக்காது.போட்டி போட்டு சாப்பிட ஆள் இருந்தால் நாமும் அவர்களுடன் சேர்ந்து காலி செய்யலாம்.அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதால் குறைந்த எண்ணிக்கை உள்ள பாக்கெட்டாக வாங்கி (நான் மட்டும்) சாப்பிட்டது போக மீதியை Bake/பேக் செய்து சிப்ஸாக்கிடுவேன்.மகளும் நானும் விரும்பி சாப்பிடுவோம்.தொட்டு சாப்பிட சல்ஸா இருந்தால் நன்றாக இருக்கும்.
நீண்ட நாட்களாக சிப்ஸ் பக்கமே போவதில்லை என்பதால் சல்ஸாவும் கைவசமில்லை.அதனால் எளிதாக செய்யக்கூடிய குவாக்கமோலி/அவகாடோ டிப் செய்தேன்.இந்தப் பதிவில் டார்டியா சிப்ஸ் செய்வதைப் பற்றி மட்டும் பார்த்துவிட்டு அடுத்த பதிவில் டிப் செய்வதைப்பற்றி பார்க்கலாம்.
தேவையானப் பொருள்கள்:
ஃப்ளோர் டார்டியாஸ்_3 அல்லது உங்கள் விருப்பம்போல்
பட்டர்/Butter_சிறிது
மிளகுத்தூள்_சிறிது
உப்புத்தூள்_சிறிது
செய்முறை:
ஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
தேவையான டார்டியாஸை எடுத்து அதன் மேல் முழுவதும் படுமாறு பட்டரை தேய்த்து விடவும்.பின் அவற்றை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி,
மேலே படத்திலுள்ளதுபோல் ஒரு கத்தியால் முதலில் அரை வட்டம்,அடுத்து கால் வட்டம் இப்படியாக சிறுசிறு முக்கோணங்களாக வருவதுபோல் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு cookie sheet /குக்கி ஷீட்டை எடுத்து அதில் அலுமினம் ஃபாயில் போட்டு அதன்மீது நறுக்கி வைத்துள்ள டார்டியாஸ் துண்டுகளை அடுக்கிவைத்து அவற்றின் மேல் மிளகுத்தூள் & உப்புத்தூளை லேஸாகத் தூவி விடவும்.
வெட்டிய துண்டுகள் மீதமிருக்குமானால் அதன் மேலேயே இன்னொரு அடுக்காகவும் வைத்து அதன்மீதும் மிளகுத்தூள் & உப்புத்தூளை மீண்டும் தூவவும்.
அந்த ட்ரேயை முற்சூடு செய்யப்பட்டுள்ள அவனில் சுமார் 15 லிருந்து 20 நிமிடங்களுக்கு அல்லது லேஸாக ப்ரௌன் நிறம் வரும்வரை bake/பேக் செய்து எடுத்து ஆறவிடவும்.
இப்போது கரகரப்பான,மொறுமொறுப்பான டார்டியா சிப்ஸ் தயார்.இதனை ‘சல்ஸா’வுடனோ அல்லது ‘அவகாடோ டிப்’புடனோ சாப்பிட சூப்பராக இருக்கும்.
அடுத்த பதிவில் அவகாடோ டிப் செய்முறையைப் பார்க்கலாம்.