பாஸ்தா (மற்றொரு முறை)


தேவையானப் பொருள்கள்:

விருப்பமான பாஸ்தா_2 கப்
விருப்பமான பாஸ்தா சாஸ்_3 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப‌ (தக்காளி,பூண்டு,பேஸில் உள்ளது)
டோஃபு_1/4 பாகம்
விருப்பமான குடை மிளகாய்_பாதி
பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி
சின்னவெங்காயம்_2
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

ஆலிவ் ஆயில்_2 டீஸ்பூன்
சீரகம்

செய்முறை:

கீழேயுள்ள செய்முறையை பாஸ்தா வெந்துகொண்டிருக்கும்போதே செய்துகொள்ளவும்.

டோஃபுவில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கி ஒரு நான்ஸ்டிக் பேனில் சிறிது ஆலிவ் ஆயில் விட்டு சூடேறியதும் டோஃபுவைப் போட்டு சிறிது மிளகாய்த்தூள்,உப்பு தூவி ஃப்ரை செய்து வைக்கவும்.

வெங்காயம் நறுக்கி வைக்கவும்.மிளகாயையும் ஏதாவதொரு வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் ஏற்றி,எண்ணெய் விட்டு சீரகம் தாளித்துவிட்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அது வதங்கியதும் மிளகாய்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் பாஸ்தா சாஸ் சேர்த்துக் கிளறிவிடவும்.இதில் உள்ள காய்கள் வேக,வெந்துகொண்டிருக்கும் பாஸ்தாவிலிருந்து இரண்டு அல்லது மூன்று கரண்டி தண்ணீரை எடுத்து ஊற்றவும்.

காய் வெந்து,ஓரளவு தண்ணீர் வற்றியதும் டோஃபுவை சேர்த்துக் கிளறி,அடுப்பை நிறுத்திவிட்டு,வெந்த பாஸ்தாவைக் கொட்டிக்கிளறி, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

கீழே உள்ளதில் கேரட்,பீன்ஸ்,பட்டாணி,பச்சை குடைமிளகாய் சேர்த்துள்ளேன்.

வெஜிடபிள் பிரியானி/ Vegetable briyani

தேவையானப் பொருள்கள்:

பாசுமதி அரிசி_2 கப்
விருப்பமான காய்கள்_2 கப் (நறுக்கியது)
(இதில் நான் சேர்த்திருப்பது கேரட்,பீன்ஸ்,பச்சைப் பட்டாணி,டோஃபு_1/3 பாகம் (விருப்பமானால்),வெங்காயத் தாள் முதலியவை.)
பெரிய சிவப்பு வெங்காயம்_பாதி
இஞ்சி_ஒரு துண்டு
பூண்டு_3 பற்கள்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தேங்காய்_1/4 மூடி
தயிர்_2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_2 கொத்து
புதினா_2 கொத்து

அரைக்க:

சின்ன வெங்காயம்_5 லிருந்து 7
தக்காளி_1
பச்சை மிளகாய்_1(காரம் விரும்பினால்)

தாளிக்க:

நெய்(அ)விருப்பமான எண்ணெய்_2 டீஸ்பூன்
கிராம்பு_3
பிரிஞ்சி இலை_2
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
முந்திரி_10
ஏலக்காய்_1

செய்முறை:

பிரியானி தயார் செய்வதற்கு 1/2 மணி நேரம் முன்னதாக அரிசியைத் தண்ணீரில் ஒரு 10 நிமிடத்திற்கு ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து விடவும்.ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி சூடேறியதும் அரிசியைப் போட்டு வதக்க வேண்டும்.அது நிறம் மாறும் சமயம் அடுப்பை நிறுத்தி விடவும்.(இந்த வேலையை பிரியானி செய்யும் போதுதான் செய்ய வேண்டுமென்பதில்லை.முதல் நாளே கூட நேரம் கிடைக்கும் போது தயார் செய்துகொள்ளலாம்.) அரிசி சூடு ஆறியதும் சமைக்கப் போகும் எலக்ட்ரிக் குக்கரில் கொட்டி வைக்கவும்.

பச்சைப் பட்டானியை முதல் நாளே ஊற வைத்துக்கொள்ளவும்.தேங்காயைத் துருவி மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். காய்களை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.மைய அரைக்க வேண்டுமென்பதில்லை.

Tofu வை  fry செய்யும் விதம்:

Tofu வில் 1/3 பங்கை தண்ணீர் வடிய வைத்துவிட்டு சிறுசிறு சதுரங்களாக நறுக்கி வைக்கவும்.ஒரு நான்ஸ்டிக் பேனில் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி சூடேறியதும் டோஃபுவைப் போட்டு சொடசொடப்பு அடங்கியதும் மிள்காய்த்தூள்,உப்பு தூவி சிறிது நேரம் மூடி வைக்கவும்.இவை நன்றாகக் கலந்து மிளகாய்த் தூள் வாசனை போனதும் அடுப்பை நிறுத்தி விடவும்.

ஒரு கடாயில் நெய் எடுத்துக் கொண்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்த பிறகு வெங்காயம், இஞ்சிபூண்டு,காய்கள் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காயம்,தக்காளி கலவையை சேர்த்து வதக்கவும்.அடுத்து மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கி ஒன்றுக்கு இரண்டு என தண்ணீர் (தேங்காய்ப் பாலையும் சேர்த்து) ஊற்றி மூடி கொதிக்க விடவும்.கொதி வந்ததும் கடாயில் உள்ளவற்றை அப்படியே எடுத்து குக்கரில் கொட்டி,தயிர் சேர்த்துக் கிளறி புதினா,கொத்துமல்லி ,(விருப்பமானால்  tofu  வையும்) தூவி மூடி  switch on  செய்யவும்.

ஒரு பத்து நிமிடடம் கழித்து    switch off   செய்துவிட்டு எலுமிச்சை சாறு சேர்த்து ஒருமுறை கீழிருந்து மேலாக‌ லேசாகக் கிளறிவிட்டு மூடி மீண்டும்  switch on செய்யவும்.அப்போதுதான் அடியில் ஒரு லேயர் மாதிரி படியாமல் இருக்கும்.அதன் பிறகு ஒரு 5 லிருந்து 10 நிமிடத்தில் குக்கர்   warm mode   க்கு சென்றுவிடும்.பிறகென்ன!சுவையான வெஜிடபிள் பிரியானியை எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.

இதனை வெங்காயம் தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.