தயிர்சாதம்-2

 

தயிர் சாதம் செய்யும்போது தயிர் மட்டும் சேர்த்தோ அல்லது பால்&தயிர் சேர்த்தோ செய்வோம்.போதுமான தயிர் இல்லாத சமயத்தில் இந்த செய்முறை கைகொடுக்கும்.இதில் என்ன விசேஷமென்றால் தயிர் குறைவாக சேர்த்தாலும் மிக அதிகமாக சேர்த்ததுபோலவே இருக்கும்.சுவையும் சூப்பராக இருக்கும்.ஒரு தடவை இந்த முறையில் செய்தால் அடுத்தடுத்து இப்படியேதான் செய்வீங்க.

செய்முறைக்கான லிஸ்ட்தான் நீளமாக இருக்கிறதே தவிர செய்வது மிக எளிது. அலங்கரிக்க பகுதியை உங்கள் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம்.

தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
தயிர்_ 3 டேபிள் ஸ்பூன்
சாதம் வடித்த கஞ்சித்தண்ணீர்_சாதத்தில் 1/4 பங்கு
உப்பு_தேவைக்கு

அலங்கரிக்க:

இஞ்சி
பச்சை மிளகாய்
கொத்துமல்லி இலை
கேரட்
திராட்சை
மாதுளை முத்துக்கள்
வெள்ளரிப் பிஞ்சு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

அரிசியை சாதாரணமாக வேக வைத்து வடிக்கவும்.குழைய வேண்டுமென்பதில்லை.நீர் வடிந்ததும் சூடான சாதத்தில் அதன் அளவில் 1/4 பங்கிற்கு இப்போது வடித்த சூடான கஞ்சித்தண்ணியை ஊற்றி ஒரு ஸ்பூனால் நன்றாகக் கலக்கவும்.சாதம் உடைந்து,நொறுங்கி தண்ணீருடன் சேர்ந்துவிடும்.

பிறகு தாளிக்க வேண்டியதைத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.சாதம் நன்றாக ஆறிய பிறகு தயிர்,உப்பு சேர்த்துக் கிண்ட வேண்டும்.தயிர் கொஞ்சமே சேர்த்தாலும் நிறைய சேர்த்ததுபோல் இருக்கும்.

அதன் பிறகு இஞ்சி,பச்சை மிளகாய்,கொத்துமல்லி இலை,கேரட், திராட்சை,மாதுளை முத்துக்கள்,வெள்ளரிப் பிஞ்சு இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி சேர்த்துவிடலாம்.

இப்போது சுவையான வெயிலுக்கேற்ற தயிர் சாதம் ரெடி.இதிலேயே காரம்,காய்,பழமென எல்லாம் இருப்பதால் தொட்டு சாப்பிட எதுவுமே தேவையில்லை.அப்படியே சாப்பிடலாம்.

கிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 15 Comments »