அவரைக்காய் சாம்பாரும் மற்ற சாம்பார் வகைகளைப் போன்றுதான் செய்ய வேண்டும்.இதனை தனி சாம்பாராகவோ அல்லது இதனுடன் ஒரு சிறு கத்தரிக்காய் அல்லது சிறு கேரட்டையோ சேர்த்தும் சமைக்கலாம்.இதன் சுவையே தனிதான்.
தேவையானப் பொருள்கள்:
துவரம் பருப்பு_1/2 கப்
அவரைக்காய்_1/4 கிலோ
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
புளி_கோலி அளவு
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்_சுமார் 5 லிருந்து 10 எண்ணிக்கை
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
அவரைக்காயைக் கழுவிவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.
புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி, அவரைக்காய் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.காய் மூழ்கும் அளவு மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளாவும்.
உப்பு,காரம் சரிப்பார்த்து காய் வேகும் வரை மூடி கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதித்து காய் வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி மேலும் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.
கடைசியில் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.தேங்காய்ப் பூ இல்லாவிடில் பரவாயில்லை.
இப்போது அவரைக்காய் சாம்பார் தயார்.
இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.