காசு வத்தல்

IMG_0171

இப்போ வேணுங்கறவங்கல்லாம் ஆர்டர் கொடுக்கலாம். அளந்து அளந்து போட்டு பார்சல் அனுப்பிவைக்கிறேன்.

போன வருடம் எங்க பேட்டியோவுக்கு அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தை வெட்டிட்டு வரிசையா மூன்று நான்கு குட்டிகுட்டி மரங்களாக நட்டுள்ளனர். இதனால் இந்த வருடம் வெயில் படு ஜோராக எங்க பேட்டியோவில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதை விட மனசில்லாமல் இந்த கோடையில் காசுவத்தல் ஊத்தி எடுத்தாச்சு.

தேவையானவை:

பச்சரிசி _ 2 கப்
ஜவ்வரிசி_ 1/2 கப்
காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய்_ 3
சீரகம்_ ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு
பெருங்காயம்_ சிறிது

செய்முறை:

பச்சரிசியை ஊற வைத்து அது நன்றாக ஊறியதும் அதனுடன் மிளகாயை சேர்த்து தாராளமாக தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

ஒரு 5 லிட்டர் குக்கரில் பாதியளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஜவ்வரிசியைப் போட்டு இரண்டுமூன்று சொட்டுகள் நல்லெண்ணெய் விட்டு ஒரு தட்டு போட்டு மூடி அடுப்பில் ஏற்றவும்.

எண்ணெய் விடுவதால் அரைத்த மாவை ஊற்றிக் கிண்டும்போது கட்டி தட்டாமல் இருக்கும். மேலும் பொங்கி வழிவதும் ஓரளவுக்குக் கட்டுப்படும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயம், சீரகம் இரண்டையும் சேர்த்துவிட்டு, அரைத்துவைத்துள்ள பச்சரிசி மாவையும் ஒரு நீளமான மரக்கரண்டி அல்லது whisk ஆல் கிண்டிக்கொண்டே ஊற்றவும்.

மாவு ஊற்றுவதிலிருந்து அடுப்பு வேலை முடியும்வரை கவனம் தேவை. கொதிக்கும் மாவு தெறித்து நம்மேல் விழ‌ வாய்ப்புண்டு.

மாவு முழுவதையும் ஊற்றிவிட்டு தேவையான உப்பு போட்டு, முக்கால் குக்கர் அளவுக்கும் அதிகமாக‌ தண்ணீர் ஊற்றவும்.

கிண்டுவதை நிறுத்தக்கூடாது. விடாமல் கிண்ட வேண்டும். இல்லையென்றால் கட்டி தட்டும். பிறகு மாவு சரியாக வேகாமல் உருண்டை உருண்டையாய் இருந்து கடுப்பேற்றும்.

மேலும் குக்கரை ஒரு அரை மணி நேரத்திற்கு அடுப்பிலேயே மீடியம் ஹீட்டில் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து கிண்டிவிடவும்.

மாவு நன்றாக வெந்தபின் நல்ல வாசனை வரும். இப்போது குக்கரை அதன் மூடியால் மூடி வைத்து விடவும்.

காலையில் வெயில் வரும் சமயம் வத்தல் ஊற்ற உகந்த நேரம்.

ஒரு டேபிளில் ப்ளாஸ்டி கவரை அல்லது சுத்தமான ஒரு துணியை நனைத்து ஈரம் இல்லாமல் பிழிந்து விரித்துப்போட்டு, மாவை நன்றாக ஒரு த‌ரம் கலந்துவிட்டு, உப்பு சரிபார்த்து, தேவையானால் சிறிது சேர்த்துக்கொண்டு கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஊற்றவும்.

vathal

(இவ்ளோ கஷ்டபட்டு வத்தல் போட்டுட்டு ஃபோட்டோ எடுக்காம விட்டா  எப்படீ !!)

ஒரு நாள் முழுவதும் காய்ந்த பிறகு அப்படியே எடுத்து வைத்து அடுத்த நாள் காலை எல்லா வற்றலையும் திருப்பிவிட்டு மீண்டும் வெயிலில் காயவிடவும்.

vathal (முதல் நாள் இந்த அளவுக்குத்தான் காய்ந்தது.)

நன்றாகக் காய்ந்த பிறகு பெரிய கண்ணாடி பாட்டிலில் அல்லது பெரிய ஸிப்லாக்கில் எடுத்து வைத்து தேவையானபோது வாணலில் எண்ணெய் காய வைத்து பொரித்து சாப்பிடலாம்.

IMG_0189

எல்லா சாதத்துக்கும் முக்கியமாக வத்தக்குழம்பு,காரக்குழம்பு, புளிக்குழம்பு இவற்றிற்கெல்லாம் சூப்பராக இருக்கும்.

(முறுக்கு வத்தல் போடல போலிருக்குன்னு நெனச்சிடக் கூடாதில்லையா !!)

வடாம்/வற்றல்/வத்தல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 10 Comments »

இடியாப்பம் 2

தேங்காய்ப்பூ & சர்க்கரை  சேர்த்த இடியாப்பம்

இடியாப்பத்துடன் தேங்காய்ப்பால்,சர்க்கரை&தேங்காய்ப்பூ,வெஜ்&நான்வெஜ் குருமா சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

அதேபோல் புது ஈரமாவில் செய்தால்தான் பளீர் வெண்மை & softness & நல்ல சுவை கிடைக்கும்.என்றைக்கோ ஒரு நாள் செய்கிறோம்,புது மாவில் செய்துவிடுவோமே.

தேவையானவை:

பச்சரிசி_2 கப்
தேங்காய்ப்பூ_சுமார் 10 டீஸ்பூன்கள்
சர்க்கரை_தேவைக்கு
உப்பு_சிறிது

அரிசியைக் குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறவைத்து,நீரை வடிகட்டி,மிக்ஸியில் நைஸாக இடித்து இட்லிப்பானையில் வைத்து அவித்து,பிறகு மாவை உதிர்த்துவிட்டு,சிறிது உப்பு சேர்த்து,அதில் கொஞ்சங்கொஞ்சமாக warm water சேர்த்து முறுக்கு மாவைப்போல் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவேண்டும்.

மாவு அவிக்கும்போது நன்றாக வெந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் மாவு இடியாப்ப அச்சில் வெளியே வராது.மாவு நன்றாக வெந்திருந்தால் அச்சில் சரசரவென வந்துவிடும்.

மாவை அவித்தும் சரியாக வேகாமல் இருந்தால் மாவில் சிறிது தண்ணீர் தெளித்து மைக்ரோ அவனில் முதலில் ஒரு 30 செகண்ட் வைத்து எடுத்து ஒருமுறை பிசைந்துவிட்டு மீண்டும் ஒரு 30 செகண்ட் வைத்து எடுத்தால் சரியாகிவிடும்.

இட்லிப் பானையை அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதி வருவதற்குள் இடியாப்ப அச்சில் மாவைப் போட்டு,இட்லித்தட்டில் ஈரத்துணியைப்போட்டு படத்திலுள்ளதுபோல் பிழிந்துவிடவும்.

இரண்டு இட்லித்தட்டுகள் இருந்தால் வசதியாக இருக்கும்.ஒன்று வெந்துகொண்டிருக்கும்போதே மற்றொன்றில் பிழிந்து ரெடியாக வைத்துக்கொள்ளலாம்.

தண்ணீர் கொதி வந்ததும் இடியாப்பத் தட்டை/ இட்லித்தட்டை இட்லிப் பானையில் வைத்து மூடவும்.ஏற்கனவே மாவு வெந்திருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும்.மூடியைத் திறந்து இடியாப்பத்தைத் தொட்டுப் பார்த்து,கைகளில் ஒட்டாமலிருந்தால் எடுத்துவிடலாம்.

எடுத்து ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே நூல் பிரிப்பதுபோல் பிரித்து உதிர்த்துவிடவும்.துண்டுதுண்டுகளாக உடைத்துவிட வேண்டாம்.அப்படி செய்தால் உருண்டைஉருண்டையாக இருக்கும்.

இப்போது ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தேங்காய்ப் பூ,சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு  ஃபோர்க் ஸ்பூனால் சாப்பிடவேண்டியதுதான்.ஒவ்வொருவராக சாப்பிடுவதானால் இவ்வாறு செய்யலாம்.

அல்லது மொத்தமாக செய்வதானால் எல்லாவற்றையும் செய்து அப்போதைக்கப்போது உதிர்த்துவிட்டு,எல்லாவற்றிற்குமாக சேர்த்து தேங்காய்ப்பூ,சர்க்கரை சேர்த்து கலக்கலாம்.

இது ஈஸியா டைஜஸ்ட் ஆகக்கூடியது.முக்கியமா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.

ஆப்பம் & தேங்காய்ப்பால்

ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால்தான் பெஸ்ட் காம்பினேஷன்.ஊரில் என்றால் ஆப்பத்தை செய்து வைத்துவிட்டுக்கூட  தேங்காய் பறித்து அல்லது வாங்கி பால் பிழிந்துவிடலாம்.ஆனால் இங்கு (USA  ) புதிய காய்தானா என்று  உறுதி செய்துகொண்டு முதல் நாளே சிறிது பால் எடுத்து பார்த்துவிட்டுத்தான்  ஆப்பத்திற்கு அரிசி ஊற வைக்க வேண்டும்.

தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_2 கப்
புழுங்கல் அரிசி_2 கப்
வெந்தயம்_ஒரு டீஸ்பூன்
பழைய சாதம்_ஒரு கைப்பிடி
உப்பு_தேவைக்கு

ஆப்பம் செய்முறை::

வெந்தயத்தை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.

அடுத்த நாள் அரிசியை ஊற வை.நன்றாக ஊறியதும் அரிசி,வெந்தயம், சாதம் மூன்றையும் சேர்த்து நன்றாக நீர் விட்டு மழமழவென அரைக்க வேண்டும்.

பிறகு உப்பு கொஞ்சம் குறைவாக சேர்த்து கரைத்து வைக்கவும்.

இனிப்பான பால் சேர்த்து சாப்பிடும்போது உப்பு கொஞ்சம் குறைவாக இருந்தால்தான் சுவை நன்றாக இருக்கும்.

அடுத்த நாள் பார்த்தால் மாவு புளித்து,நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.

ஆப்பம் ஊற்றும்போது சிறிய அளவில் மாவை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

மீதி மாவை எடுத்து வைத்தால் அடுத்த வேளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்போது ஆப்ப சட்டியை அடுப்பில் ஏற்றி சூடாகியதும் லேசாக எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை விட்டு இரண்டு கைகளாலும் சட்டியின் கைப்பிடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றிவிட்டு மூடிபோட்டு மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

ஆப்பம் வெந்ததும் (சிவக்க வேண்டாம்) தோசைத் திருப்பியால் அல்லது கைகளால்கூட எடுத்துவிடலாம்.ஓரங்கள் தானே பெயர்ந்து வந்துவிடும்.

அதன்பிறகு என்ன!ஒரு குழிவானத் தட்டில் ஆப்பத்தை வைத்து தேங்காய்ப்பாலை ஆப்பம் கொஞ்சம் மூழ்கும் அளவுக்கு ஊற்றி சாப்பிட வேண்டியதான்.

தேங்காய்ப் பாலை சட்னி போல் தொட்டு சாப்பிட வேண்டாம்.அது நன்றாக இருக்காது.

இரண்டு ஆப்பம்தான் லிமிட்.அதற்கு மேல் என்றால் திகட்டிவிடும்.

தேங்காய்ப் பால் செய்முறை:

இரண்டு மூன்று பேர் என்றால் ஒரு மூடி தேங்காய் போதும்.

நல்ல சதைப்பற்றுள்ள தேங்காய் மூடி_1
சர்க்கரை_தேவைக்கு (நிறையவே தேவைப்படும்.பால் நல்ல இனிப்பாக இருக்க வேண்டும்)
பசும்பால்_1/2 டம்ளர் (விருப்பமானால்)
ஏலக்காய்_1 (இதுவும் விருப்பமானால்)

ஒரு மூடி தேங்காயைத் துருவியோ அல்லது சிறுசிறு துண்டுகளாக்கியோ மிக்ஸியில் போட்டு  pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போலாகிவிடும்.

பிறகு சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து இரண்டு டம்ளர் அல்லது தேவையான அளவிற்கு மிதமான‌ சுடு தண்ணீர் விட்டு பாலை வடிகட்டிப்  பிழிந்துகொள்ளவும்.

அதனுடன் பசும்பால் 1/2 டம்ளர் அளவிற்கு காய்ச்சி சேர்த்துக்கொள்ளவும்.(விருப்பமானால்)

தேங்காய்ப்பாலில் ஏலக்காய்,சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை ஒரு கரண்டியால் கலக்கிவியவும்.

இப்போது தேங்காய்ப்பால் தயார்.

குறிப்பு:  

சமயத்தில் ஆப்ப மாவு இல்லாவிட்டால் தோசை மாவைக்கூட ஆப்பத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

முறுக்கு வடாம் (மற்றொரு வகை)

இங்கு (USA) வெயில் காலம் ஆரம்பிக்க இருப்பதால் வடாம் போட கொஞ்சம் வசதியாக இருக்கும்.

பச்சரிசியில் செய்யும் கூழ் வடாமில் முறுக்கு வடாம் என்றால் சீக்கிரம் காய்ந்துவிடும்.

காசு வடாம் என்றால் காய வைப்பது சிரமம்.மாடி வீடாக இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம்.

புழுங்கல் அரிசியில் செய்யும் வடாம் என்றால் சீக்கிரமே காய்ந்துவிடும்.அதன் செய்முறைகளைக்காண‌    இங்கே    கிளிக்கவும்.

தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_2 கப்
ஜவ்வரிசி_1/2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_ஒரு டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு

செய்முறை:

பச்சரிசி,ஜவ்வரிசி இரண்டையும் தனித்தனியாகக் கழுவி ஊற வைக்கவும்.

இவை இரண்டும் ஊறியதும் ஒரு இரண்டு லிட்டர் குக்கரில் முக்கால் பாகம் தண்ணீர் விட்டு, ஊறிய ஜவ்வரிசியைப் போட்டு அதனுடன் பெருங்காயம், சீரகம்,ஒன்றிரண்டு சொட்டு நல்லெண்ணெய் விட்டு (அப்போதுதான் கட்டி தட்டாமலும்,மாவு பொங்கி வராமலும் இருக்கும்) அடுப்பில் ஏற்றி கொதி நிலை வரும் வரை மூடி வைக்கவும்.

அதற்குள் அரிசியுடன் பச்சைமிளகாயைச் சேர்த்து மிக்ஸியில் (அ) கிரைண்டரில் போட்டு மைய அரைக்காமல் ரவை பதத்திற்கு நன்றாக நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.

நீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை சிறிதுசிறிதாக ஊற்றிக்கொண்டே விடாமல் கிளறவேண்டும்.

கொஞ்சம் கவனமாகக் கிளறிவிட வேண்டும்.இல்லையெனில் மாவு மேலே தெறித்துவிழ வாய்ப்புண்டு.

தீயை மிகவும் குறைத்துவைத்து மூடி போட்டு ஒரு 1/2 மணி நேரம் அடுப்பிலேயெ வைத்திருக்கவும்.

வடாம் கூழை ஒரு கரண்டியில் அள்ளிப்பார்த்தால் அரிசிரவை தெரியக் கூடாது.நன்றாக வெந்து விட்டால் அது தெரியாது

சரியாக வேகாவிட்டால் வடாம் பிழிந்த பிறகு சரியாகக் காயாமலும், இடையிடையே வெடித்தும் காணப்படும்.

நன்றாக வெந்த‌பிறகு 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு (இல்லையென்றாலும் பரவாயில்லை) விட்டால் வடாம் நல்ல வெண்மையாக இருக்கும்),உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்துவிடவும்.

இதனை இரவே செய்து வைத்துவிட்டால் காலையில் நன்றாக ஆறி பிழிவதற்கு பதமாக இருக்கும்.

இது நன்றாக ஆறியதும் மிகவும் கெட்டியாகிவிடும்.பிறகு ஒரு முறுக்கு அச்சில் ஒற்றைக் கண் உள்ள நட்சத்திர அச்சைப் போட்டு விருப்பமான வடிவத்தில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் பிழிந்து வெய்யிலில் காய வைக்கவும்.

முதல்நாள் காயவைத்து இரவு அப்படியே வைத்திருந்து இரண்டாம் நாள் திருப்பிவிட்டுக் காய வைக்கவும்.

மூன்றாம் நாள் ஒரு அகலமான எவர்சில்வர் தட்டில் வைத்துக் காய வைத்தால் அன்று மாலையே பொரித்து சாப்பிடலாம்.

நன்றாகக் காய்ந்ததும் தேவையானபோது ஒரு வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும்,குறிப்பாக வத்தக்குழம்பிற்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.

இட்லி மாவு,தோசை மாவு போலத்தான் வடாமும்.அவசரத்திற்கு உதவும்.

வெண்ணெய் புட்டு

            

வாயில் போட்டதும் வெண்ணெய் போல் வழுக்கிக்கொண்டு செல்வதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

என் அம்மா செய்வது மாதிரியே செய்ய வேண்டும் என்ற விருப்பத்தினால் கிண்ணத்தில் ஊற்றி கவிழ்த்து எடுத்தேன்.அவர் செய்வது போலவே வந்துவிட்டது.

பார்க்கவே அழகாக இருக்கும்.சுவையும்தான்!

இதனை தட்டுகளில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.

தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
கடலைப் பருப்பு_ஒரு டீஸ்பூன்
வெல்லம்_ஒரு கப்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
ஏலக்காய்_1 (பொடிக்கவும்)
உப்பு_துளிக்கும் குறைவாக(சுவைக்காக)

செய்முறை:

முதலில் பச்சரிசியைக் கழுவிக்கலைந்து ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான நீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

மாவு நீர்க்க இருக்கவேண்டும்.கெட்டியாக இருக்கவேண்டுமென்பதில்லை.

ஒரு அடி கனமான வாணலியில் ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

கடலைப்பருப்பைக் கழுவிவிட்டு வாணலியில் உள்ள தண்ணீரில் போடவும்.

த‌ண்ணீர் கொதி வந்ததும் அரிசிமாவில் துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துவிட்டு  கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் தண்ணீரில் ஊற்றிக்கொண்டே கரண்டியால்  விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

கிண்டுவதற்கு  whisk  ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.

மாவு எல்லாவற்றையும் ஊற்றிய பிறகும் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

இல்லையென்றால் மாவு அடிப்பிடிக்கும்.மேலும் மாவு வேகாமல் உருண்டை உருண்டையாக இருக்கும்.

இப்போது மாவு வெந்து கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.

இப்போது வெல்லத்தை பொடித்து (கல்,மண்,தூசு இல்லாமல்)போட்டுக் கிளறிவிடவும்.

முதலில் கொஞ்சம் நீர்த்துக்கொள்ளும்.பிறகு வேக வேக இறுகி வரும்.

நன்றாக இறுகி வரும்போது தேங்காய்ப் பூ,ஏலக்காய் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான வெண்ணெய் புட்டு தயார்.

இதனை  சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ சாப்பிடலாம்.

சர்க்கரைப் பொங்கல்

சூடாக இருக்கும்போது கொஞ்சம் தளர்வாக இருக்கும்.    அதுவே     ஆறியதும்      இறுகிவிடும்.

சர்க்கரைப் பொங்கல் & சாதாரண வெண் பொங்கல்

பொங்கலன்று சாதாரண வெண்பொங்கல்,சர்க்கரைப் பொங்கல் செய்வது வழக்கம்.

இவற்றின் புகைப்படம் தற்சமயம் இல்லையாதலால் செய்முறை மட்டுமே போட்டுள்ளேன்.பொங்கலன்று படத்தை இணைத்துவிடுகிறேன்.

சர்க்கரைப் பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பச்சைப் பருப்பு_1/3 கப்
வெல்லம்_ஒரு கப்
பால்_1/2 கப்
ஏலக்காய்_2
குங்குமப்பூ_ஒரு 15 இதழ்கள்
முந்திரி_15
திராட்சை_15
நெய்_1/4 கப்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.ஆறிய பிறகு   கழுவிவிட்டு அதில்  4 கப்புகள் அளவிற்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

பருப்பு பாதி வெந்த நிலையில் அரிசியைக் கழுவி அதில் சேர்த்து விடவும். அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்தால் அரிசி வெந்து விடும்.பருப்பு வேகாமல் இருக்கும்.எனவே முதலில் பருப்பையும் அடுத்து அரிசியையும் சேர்க்க வேண்டும்.

இரண்டும் ஒன்றாகக் கலந்து நன்றாகக் குழைய வேக வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து இளம் பாகு பதம் வந்ததும் அதை குழைய வெந்துள்ள பொங்கலில் கொட்டிக் கிளறி விடவும். அடுத்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.

அடுத்து நெய்யில் முந்திரி,திராட்சையை வறுத்து நெய்யுடன் சேர்த்துக் கொட்டிக் கிளறி இறக்கவும்.

சாதாரண வெண்பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பால்_1/4 கப்

செய்முறை:

ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் அளவிற்கு பாலும் தண்ணீருமாகச் சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதித்து பொங்கி வரும்போது அரிசியைப் போட்டு அடிப்பிடிக்காமல் அடிக்கடிக் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.நன்கு குழைய வெந்த பிறகு இறக்கவும்.

இதற்கு பொங்கல் குழம்பு அல்லது கருனைக் கிழங்கு புளிக் குழம்பு நன்றாக இருக்கும்.

பச்சரிசி புட்டு

புட்டு செய்யும் போது ஈர அரிசி மாவைத்தான் பயன்படுத்த வேண்டும்.ஈர அரிசி மாவை வீட்டிலேயே தயாரித்து செய்யும்போது புட்டு பூ போல் வரும்.

தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
வெல்லம்_3/4 கப்
ஏலக்காய்_1
உப்பு_ஒரு துளிக்கும் குறைவாக‌
முந்திரி_5
உலர் திராட்சை_10

செய்முறை:

முதலில் பச்சரிசியைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு நீரை வடித்து விடவேண்டும்.அரிசி ஈரமாக இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் கோர்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

ஏலக்காய்,வெல்லம் இவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி,திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.

அரிசியை மிக்ஸியில் போட்டு ஈர மாவாக, niceஆக‌ இடித்துக்கொள்ளவும். அதை இட்லிப் பானையில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுத்துக்கொள்ளவும்.ஆவி வெளியில் வரும்போது சிறிது நேரம் கழித்து நல்ல வாசனை வரும்.அப்போது மாவை இட்லிப் பானையில் இருந்து எடுத்து ஆற வைக்கவும்.நன்றாக வெந்த மாவு கைகளில் ஒட்டாது.ஆறிய பிறகு துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கட்டிகளில்லாமல் மாவை உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த மாவை மிக்ஸியில் போட்டு   pulse   ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போல் ஆகி விடும்.

இந்த மாவை மீண்டும் இட்லிப் பானையில் வைத்து அவிக்கவும்.மாவு ஏற்கனவே வெந்து விட்டதால் இந்த முறை சீக்கிரமே ஆவி வந்துவிடும். எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி ஏலத்தூள்,வெல்லம்,முந்திரி,திராட்சை சேர்த்துக் கிளறி சாப்பிடவேண்டியதுதான்.இப்போது நல்ல சுவையான , சத்தான, குழந்தைகளுக்குப் பிடித்தமான புட்டு தயார்.

வெண் பொங்கல்

தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_2 கப்
பச்சைப் பருப்பு(அ)பாசிப்பருப்பு_3/4 கப்
மஞ்சள் தூள்_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நெய்_1 டேபிள்ஸ்பூன்
மிளகு_1 டீஸ்பூன்
சீரகம்_2 டீஸ்பூன்
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
முந்திரி_10
கறிவேப்பிலை_பாதி கொத்து

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.பிறகு கழுவிவிட்டு ஒரு பாத்திரத்தில்(அ) குக்கரில் போதிய தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து  வேக வைக்கவும்.பருப்பு பாதி வெந்த நிலையில் அரிசியைக் கழுவி பருப்புடன் சேர்த்து  ஒன்றுக்கு மூன்று என தண்ணீர் ஊற்றி நன்றாகக் குழைய வேக வைக்கவும்.(ஏனெனில் பொங்கல், சாதம் போல் இல்லாமல் கொஞ்சம் குழைய இருக்க வேண்டும்.).ஒரு முறை திறந்து கிளறி சிறிது மஞ்சள் தூள்,உப்பு போட்டு சிறிது நேரம் மூடி வேக வைக்கவும்.பருப்பு,சாதம் இரண்டும் ஒன்றாகக் கலந்து குழைய வெந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஒரு வாணலியில் நெய் எடுத்து சூடுபடுத்தி அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து) ,சீரகம்,இஞ்சி,முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்களில் கொட்டிக் கிளறவும்.அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் கொட்டிக் கிளறி இறக்கலாம்.இது மிகவும் நன்றாக இருக்கும்.

இதற்கு தொட்டு சாப்பிட சாம்பார்,தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். இதற்கென சாம்பார் செய்யும்போது புளி போடாமல் செய்ய வேண்டும்.அல்லது புளி குறைவாக சேர்த்தால் போதும்.

இடியாப்பம்

தேவையான பொருட்கள்
பச்சரிசி –  2கப்புகள்
உப்பு -1 சிட்டிகை
தேங்காய்- 1/2 மூடி
பால் – 1 கப்
சர்க்கரை – தேவையான அளவு
ஏலக்காய் – 1
செய்முறை:

பச்சரிசியை சுமார் 2 மணி நேரத்திற்கு ஊறவைத்து வடிகட்ட வேண்டும். பிறகு  சிறிது  ஈரப்பதத்துடனே மிக்சியில் பொட்டு ஈர மாவாக இடித்துக் கொள்ளவும். பின் இட்லி பானையை அடுப்பில் ஏற்றி ஒரு இட்லி கொத்தில் துணியைப் போட்டு மாவை நன்றாக அவிக்கவேண்டும். மூடியைத்திறந்து மாவை கைகளால் தொட்டால் ஒட்டக் கூடாது. அந்தப் பதத்தில் மாவை இறக்கி உதிர்த்து ஆற வைக்க வேண்டும்.ஆறியதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இளஞ் சூடான தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். மீண்டும் இட்லி பானையை அடுப்பில் ஏற்றிவிட்டு ஒரு இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு சிறிது மாவை இடியாப்ப அச்சில் போட்டு தட்டு முழுவதும் பிழிந்து விட வேண்டும். பின் அதை இட்லிப் பானையில் வைது வேக விட வேண்டும். ஆவி வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி தேங்காய்ப்பாலை விட்டு சாப்பிட சுவையோ சுவை. இல்லை எனில் காய்கறி குருமா அல்லது கோழி குருமா சேர்த்து சாப்பிடலாம்.

தேங்காய்ப் பால் செய்முறை:

பாலைக் காய்ச்சவும்.தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு இளஞ்சூடான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து முதல் பால் பிழிந்து எடுத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை அறைத்து இரண்டாம் பாலையும் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். இதை பாலுடன் கலந்து சர்க்கரை,பொடித்த எலக்காய் சேர்த்து கலக்கவும்.

குறிப்பு:

மாவை பிசைந்த பிறகு கைகளால் தொட்டால் ஒட்டக் கூடாது. ஒட்டினால் மாவு நன்றாக வேகவில்லை என்று அர்த்தம்.எனவே மாவில் சிறிது நீர் தெளித்து மைக்ரோ அவனில் ஓரிரு மணித்துளிகள் வைத்து எடுக்கவும்.