பனீர் & பச்சைப்பட்டாணி குருமா / Paneer mutter masala

kurumakuruma

அவரவர் விருப்பம்போல் பனீரை தனியாகவோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்தோ குருமா செய்யலாம்.

தேவையானவை:

பனீர்_சுமார் 100 g
பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1 பெரியது
இஞ்சி_சிறு துண்டு
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
எலுமிச்சை சாறு
கொத்துமல்லி தழை_ஒரு கொத்து
புதினா_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

அரைக்க:

தேங்காய் பத்தை_3
கசகசா_ஒரு டீஸ்பூன்
முந்திரி_2 (அல்லது) சிறிது பொட்டுக்கடலை

தாளிக்க:

எண்ணெய்
கிராம்பு_3
பட்டை_சிறு துண்டு
சீரகம்
பெருஞ்சீரகம்
வெந்தயம்_4 (வாசனைக்கு)

செய்முறை:

பச்சைப்பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிட‌வும்.

வெங்காயம்,தக்காளி இவற்றை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்..இஞ்சி & பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.

அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,முதலில் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

பிறகு வெங்காயம் & தக்காளி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம்போக நன்றாக வதக்கவும்.

அடுத்து பட்டாணியை சேர்த்து வதக்கிவிட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

குருமா கொதி வருவதற்குள் ஒரு கடாய் அல்லது தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விடவும்.

பனீரை சிறுசிறு துண்டுகளாக்கி,எண்ணெய் சூடானதும் கடாயில் போட்டு,பனீரின் எல்லா பக்கங்களும் லேஸாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.அல்லது நறுக்கிய துண்டுகளை அப்படியேகூட‌ சேர்த்துக்கொள்ள‌லாம்.

குருமா கொதிக்க ஆரம்பித்ததும் பனீர் துண்டுகளை சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க‌விடவும்.

குருமா நன்றாகக் கொதித்த பிறகு தேங்காய்,கஸகஸா,முந்திரி இவற்றை மைய அரைத்து குருமாவுடன் சேர்த்து கலக்கிவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்ததும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி,புதினா சேர்த்து இறக்கவும்.

kuruma

இது சாதம்,சப்பாத்தி,பரோட்டா இவற்றிற்கு சூப்பராக இருக்கும்(இருந்தது).

சமோசா

 

தேவை:

Medium Wonton Wraps_1
உருளைக்கிழங்கு_1
பச்சைப்பட்டாணி_1/2 கப்
பெரிய வெங்காயம்_1
பச்சை மிளகாய்_1
இஞ்சி_1 சிறிய துண்டு
பூண்டு_2
மிளகாய் தூள்_1/2 டீஸ்பூன்
சீரக தூள்_1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து
எண்ணெய்_ சமோசா பொரிக்கத் தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_1 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
முந்திரி_5

செய்முறை:

சமோசா மேல் மாவிற்கு மாவைப் பிசைந்து,உருட்டி செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும்.சிலர் கடைகளில் கிடைக்கும்  Samosa sheet  ஐப் பயன்படுத்துவார்கள்.அதற்கு பதிலாக சைனீஸ் கடைகளில் கிடைக்கும்  Medium  Wonton Wraps   ஐப் பயன்படுத்தலாம்.இதை பயன்படுத்துவதும் எளிது. ஒரு பாக்கெட்டில் சுமார் 75 sheets   இருக்கும்.நாம் செய்யப்போகும் மசாலா அளவு சுமார் 25 சமோசாக்களுக்கு போதுமானதாக இருக்கும். மீதமுள்ள sheets  ஐ  fridge  ல்  வைத்துக்கொண்டால் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்த sheet  ல்  1  ஸ்பூன் அளவுதான் மசாலா வைக்க முடியும். 2 bite size  ஆக இருக்கும்.ஒரு முறை முயற்சி செய்தால் மறுமுறையும் இதையேதான் பயன்படுத்துவீர்கள்.

பச்சைப் பட்டானியை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்.உருளைக் கிழங்கை வேகவைத்து,தோல் உரித்து,சிறு துண்டுகளாக நறுக்கவும்.வெங்காயத்தை நீளவாகிலும்,பச்சை மிளகாயைப் பொடியாகவும் நறுக்கவும்.இஞ்சி,பூண்டை தட்டி வைக்கவும்.

ஒரு பாதிரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெருஞ்சீரகம்,முந்திரி தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கியதும் பட்டாணி, உருளை சேர்த்து கிளறி மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும்.எல்லாம் கலந்து வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு,சிறிது சீரகத்தூள் (விருப்பமானால்), கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

மசாலா ஆறியதும் sheet ல் ஒன்றை எடுத்து அதில் மசாலா வைத்து ஓரத்தில் தண்ணீர் தடவி அழுத்தி மூட வேண்டும்.இதை வேண்டிய வடிவங்களில் செய்துகொள்ளலாம்.இதுபோல் தேவையானதை செய்து fridge ல் வைத்துக்கொள்ளவும். வெளியில் காற்றுப்பட வைத்தால் காய்ந்து ஈரப்பதம் இல்லாமல் போய்விடும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் செய்து வைத்துள்ள சமோசாவை ஒவ்வொன்றாகவோ (அ)எண்ணெய் கொண்ட மட்டும் போட்டு ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.இதை தேங்காய் சட்னி, ketchup, மற்றும் புளிப்பு,இனிப்பு சட்னியுடன்  உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.