சர்க்கரைப் பொங்கல் & சாதாரண வெண் பொங்கல்

பொங்கலன்று சாதாரண வெண்பொங்கல்,சர்க்கரைப் பொங்கல் செய்வது வழக்கம்.

இவற்றின் புகைப்படம் தற்சமயம் இல்லையாதலால் செய்முறை மட்டுமே போட்டுள்ளேன்.பொங்கலன்று படத்தை இணைத்துவிடுகிறேன்.

சர்க்கரைப் பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பச்சைப் பருப்பு_1/3 கப்
வெல்லம்_ஒரு கப்
பால்_1/2 கப்
ஏலக்காய்_2
குங்குமப்பூ_ஒரு 15 இதழ்கள்
முந்திரி_15
திராட்சை_15
நெய்_1/4 கப்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.ஆறிய பிறகு   கழுவிவிட்டு அதில்  4 கப்புகள் அளவிற்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

பருப்பு பாதி வெந்த நிலையில் அரிசியைக் கழுவி அதில் சேர்த்து விடவும். அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்தால் அரிசி வெந்து விடும்.பருப்பு வேகாமல் இருக்கும்.எனவே முதலில் பருப்பையும் அடுத்து அரிசியையும் சேர்க்க வேண்டும்.

இரண்டும் ஒன்றாகக் கலந்து நன்றாகக் குழைய வேக வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து இளம் பாகு பதம் வந்ததும் அதை குழைய வெந்துள்ள பொங்கலில் கொட்டிக் கிளறி விடவும். அடுத்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.

அடுத்து நெய்யில் முந்திரி,திராட்சையை வறுத்து நெய்யுடன் சேர்த்துக் கொட்டிக் கிளறி இறக்கவும்.

சாதாரண வெண்பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பால்_1/4 கப்

செய்முறை:

ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் அளவிற்கு பாலும் தண்ணீருமாகச் சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதித்து பொங்கி வரும்போது அரிசியைப் போட்டு அடிப்பிடிக்காமல் அடிக்கடிக் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.நன்கு குழைய வெந்த பிறகு இறக்கவும்.

இதற்கு பொங்கல் குழம்பு அல்லது கருனைக் கிழங்கு புளிக் குழம்பு நன்றாக இருக்கும்.

பச்சைப் பருப்புப் பாயசம்

பாயசம் ப‌ல வகைகளில் செய்வதுண்டு.அதில் ஒன்றுதான் பச்சைப் பருப்புப் பாயசம். உளுந்து வடை செய்தால் அதன் பக்க உணவான பாயசம்,சாம்பார் அல்லது தேங்காய் சட்னி இவை இருந்தால்தான் வடை சாப்பிட்ட திருப்தியே வரும்.இன்று பச்சைப் பருப்புப் பாயசம் செய்வதைப் பற்றிப் பார்க்கலாம்.

தேவையானப் பொருள்கள்:

பச்சைப் பருப்பு_1/2 கப்
வெல்லம்_1/2 கப் (அ) சுவைக்கேற்ப‌
பால்_1/2 கப்
ஏலக்காய்_1
முந்திரி_10
திராட்சை_10
நெய்_முந்திரி,திராட்சை வறுக்கும் அளவு
குங்குமப்பூ_10 இதழ்கள்

செய்முறை:

முதலில் பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும்.பிறகு பாயசம் வைக்கும் பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு இரண்டு தரம் தண்ணீரில் கழுவிவிட்டு அதில் இரண்டு கப்புகள் தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் ஒரு கரண்டியால் மசித்துவிட்டு வெல்லத்தைப் பொடித்து அதில் சேர்த்துக் கிளறி விடவும்.வெல்லம் கரைந்த பிறகு பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலத்தூள்,குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாகியதும் முந்திரி,திராட்சை வறுத்து பாயசத்தில் கொட்டவும்.சுவையான பச்சைப் பருப்பு பாயசம் தயார்.

பாயசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஸ்பூனால் சாப்பிடலாம். அல்லது வடையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இன்னும் அப்பளத்துடன் சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.

உளுந்து வடையின் செய்முறையைக் காண‌ இங்கே செல்லவும்.

முழு பச்சைப் பருப்பு குருமா

 

தேவையானப் பொருள்கள்:

முழு பச்சைப் பருப்பு _  ஒரு  கப்
சின்ன வெங்காயம் _5 லிருந்து 10
தக்காளி _பாதி
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_2 பற்கள்
தேங்காய் கீற்று_2
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பிரிஞ்சி இலை_1

செய்முறை:

முழு பச்சைப் பயறை சுண்டலுக்கு அவிப்பது போல் வேக வை.குழைய வேக வைக்க வேண்டாம்.ஊறிய(அ)முளை கட்டிய பயறு என்றால் வேக வைக்க வேண்டாம்.

வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கி வை.இஞ்சி,பூண்டு தட்டி வை.தேங்காய் அரைத்துக்கொள்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கு.அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கு.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கி,பயறைக் கொட்டிக் கிளறி,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வை.பயறு,மசாலா எல்லாம் ஒன்றாகக் கலந்து வெந்த பிறகு தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கு.

இது சப்பாத்தி,பரோட்டா,நாண்,இட்லி,தோசை இவற்றிற்கு நன்றாக இருக்கும்.

வெண் பொங்கல்

தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_2 கப்
பச்சைப் பருப்பு(அ)பாசிப்பருப்பு_3/4 கப்
மஞ்சள் தூள்_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நெய்_1 டேபிள்ஸ்பூன்
மிளகு_1 டீஸ்பூன்
சீரகம்_2 டீஸ்பூன்
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
முந்திரி_10
கறிவேப்பிலை_பாதி கொத்து

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.பிறகு கழுவிவிட்டு ஒரு பாத்திரத்தில்(அ) குக்கரில் போதிய தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து  வேக வைக்கவும்.பருப்பு பாதி வெந்த நிலையில் அரிசியைக் கழுவி பருப்புடன் சேர்த்து  ஒன்றுக்கு மூன்று என தண்ணீர் ஊற்றி நன்றாகக் குழைய வேக வைக்கவும்.(ஏனெனில் பொங்கல், சாதம் போல் இல்லாமல் கொஞ்சம் குழைய இருக்க வேண்டும்.).ஒரு முறை திறந்து கிளறி சிறிது மஞ்சள் தூள்,உப்பு போட்டு சிறிது நேரம் மூடி வேக வைக்கவும்.பருப்பு,சாதம் இரண்டும் ஒன்றாகக் கலந்து குழைய வெந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஒரு வாணலியில் நெய் எடுத்து சூடுபடுத்தி அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து) ,சீரகம்,இஞ்சி,முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்களில் கொட்டிக் கிளறவும்.அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் கொட்டிக் கிளறி இறக்கலாம்.இது மிகவும் நன்றாக இருக்கும்.

இதற்கு தொட்டு சாப்பிட சாம்பார்,தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். இதற்கென சாம்பார் செய்யும்போது புளி போடாமல் செய்ய வேண்டும்.அல்லது புளி குறைவாக சேர்த்தால் போதும்.

கொத்தவரங்காய்ப் பொரியல்

தேவையானவை:

கொத்தவரங்காய்_1/4 kg
பச்சைப் பருப்பு_2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்_2
மஞ்சள் தூள்_துளி
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து
தேங்காய்ப் பூ_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு_கொஞ்சம்
உளுந்து_கொஞ்சம்
சீரகம்_கொஞ்சம்
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

முதலில் பச்சைப் பருப்பை சிவக்க வறுத்து மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.பாதி வெந்த நிலையில் எடுத்து பிழிந்து வைத்துக்கொள்ளாவும்.இப்போது கொத்தவரங்காயைக் கழுவிவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளிக்கவும்.முதலில் வெங்காயத்தையும் பிறகு கொத்தவரங்காயையும் போட்டு வதக்கி காய் வேகுமளவுத் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பாதி வெந்த நிலையில் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி விட்டு மிதமானத் தீயில் வேக விடவும்.காய் நன்றாக வெந்த பிறகு  பச்சைப் பருப்பைச் சேர்த்துக் கிளறி விட்டு சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து  நீர் வற்றியதும் கொத்துமல்லி இலை, தேங்காய்ப் பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

குறிப்பு:

பச்சைப் பருப்பிற்குப் பதிலாக துவரம் பருப்பையும் சேர்க்கலாம்.

பீட்ரூட் பொரியல்

தேவையானவை:

பீட்ரூட்_1 (சிறியது)
பச்சைப் பருப்பு_1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்_1
மிளகாய்த் தூள்_1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
தேங்காய்ப் பூ_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து

தாளிக்க:
நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_ஒரு 5 இலைகள்

செய்முறை:

முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும்.ஊறியதும் வடிகட்டவும்.பீட்ரூட்டைக் கழுவித் துடைத்து மேல் தோலைச் சீவிவிட்டு பொடியாக நறுக்கவும்.வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து ஊறிய பச்சைப் பருப்பைப் போட்டு வதக்கவும்.பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து பீட்ரூட்டைப் போட்டு வதக்கி மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீரும் ஊற்றி மூடி வேக வைக்கவும்.சீக்கிரமே வெந்து விடும்.இடையில் ஒன்றிரண்டு முறை கிளறி விடவும்.நன்றாக வெந்ததும் ஒரு முறை கிளறி விட்டு தேங்காய்ப் பூ,கொத்துமல்லி இலைத் தூவி பரிமாறலாம்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

பச்சைப் பருப்பை ஊற வைத்துப் போடுவதற்கு பதில் பாதி வெந்த பருப்பைச் சேர்க்கலாம்.பச்சைப் பருப்பிற்குப் பதிலாகத் துவரம் பருப்பைக்கூடச் சேர்க்கலாம்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

சர்க்கரைப் பொங்கல் (கோதுமை அரிசி)

தேவையானப் பொருள்கள்:

கோதுமை அரிசி_ 1  கப்
பச்சைப் பருப்பு_1/4 கப்
வெல்லம்_1 கப்
முந்திரி_10
திராட்சை_10
பால் (அ) தேங்காய்ப் பால்_1/4 கப்
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து சுமார் 4 கப்புகள் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.நன்றாக வெந்ததும் கோதுமை அரிசியை சேர்த்துக் கிளறி வேக வைக்கவும்.நன்றாகக் குழைய வேக வேண்டும்.

இது வெந்துகொண்டிருக்கும்போதே வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மிதமானத் தீயில் கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்து வரும்.லேசான பாகு பதம் வரும் போது இறக்கிப்  பொங்களில் ஊற்றிக் கிளறவும்.பிறகு பால் விட்டுக் கிளறி,ஏலக்காயைப் பொடித்துப் போட்டு  சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.

அடுத்து ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கி முந்திரி,திராட்சை வறுத்து பொங்களில் கொட்டிக் கிளறவும். சுவையான,இனிப்பான‌ கோதுமைச் சர்க்கரைப் பொங்கல் தயார்.

குறிப்பு:

கோதுமை அரிசியை வறுக்க வேண்டாம்.வறுத்தால் குழைய வேகாமல் உதிருதிராக உப்புமா போல் வரும். உப்புமா செய்வதாக இருந்தால் மட்டுமே வறுக்க வேண்டும்.

கோதுமை அரிசி வாங்கும் போது ரவை மாதிரி இல்லாமல் ஒன்றிரண்டாக உடைத்த அரிசியாக வாங்கினால் சாதம்,பொங்கல்,உப்புமா என வெரைட்டியாக செய்வதற்கு நன்றாக இருக்கும்.

முருங்கைக்கீரை மசியல்

தேவை:
முருங்கைக் கீரை_ 2 கப்
பச்சைப் பருப்பு_ 1/4 கப்
சின்ன வெங்காயம்_2
தக்காளி_1/4
பச்சை மிளகாய்_1
பூண்டு_ 2 பற்கள்

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:
கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_ 1/4 டீஸ்பூன்
மிளகு_5
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
நல்லெண்ணெய்_ 1 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து தண்ணீர் விட்டு மலர வேகவைக்கவும்.அது வேகும்போதே சின்ன வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வேகவைக்கவும்.கடைசியில் கீரை சேர்த்து ஒரு கொதி வந்ததும்  இறக்கவும்.நீண்ட நேரம் கீரை அடுப்பில் இருந்தால் கறுத்து விடும்.அதனால் கசக்கும். கீரை போட்ட பிறகு மூட வேண்டாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து கீரையில் கொட்டவும்.நன்றாக ஆறியதும் கடைந்து வைக்கவும்.