பாவக்காய் புளிக்குழம்பு / Paavakkaai puli kuzhambu

paavakkaai

ஒருசில மாதங்கள் தவிர மற்ற எல்லா காலங்களிலும் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் விதவிதமான பாவக்காய்கள் வரும். நான் வாங்குவது படத்திலுள்ள இந்த பிஞ்சு பாவக்காய்தான்.விதைகளை நீக்க வேண்டிய அவசியம்கூட இருக்காது. பிஞ்சு பாவக்காய் நல்லதா அல்லது முற்றல் நல்லதான்னு தெரியவில்லை.

இதில் புளிக்குழம்பு,பொரியல் என எது செய்தாலும் பிடிக்கும்.

paavakkaai

தேவையானவை:

பாவக்காய்_3
புளி_பெரிய கோலியளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_1
முழு பூண்டு_1
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்_2 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
காய்ந்தமிளகாய்
கடலைப்பருப்பு
சீரகம்
வெந்தயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.

பாவக்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொண்டு விதை இருந்தால் நீக்கி விடவும்.

பூண்டு உரித்துக்கொண்டு,வெங்காயம்,தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு வைக்கப்போகும் சட்டியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துக்கொள்ளவும்.

தாளிப்பு முடிந்ததும் வெங்காயம்,பூண்டு,தக்காளி,பாவக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

காய்கள் வதங்கியதும் புளியை இரண்டுதரம் கரைத்து ஊற்றி,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து பாவக்காய் வெந்து,பொதுவாக‌ எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும்சமயம் இறக்கிவிடலாம். எங்க வீட்டு குழம்பில் எண்ணெய் மிதக்க சான்ஸே இல்லை.

paavakkaai pulikuzhambu

சாதம் & அப்பளம் அல்லது வ‌த்தலுடன் இந்த புளிக்குழம்பு சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 1 Comment »

பேக்(ட்)டு பாவக்காய் சிப்ஸ்/Baked paavakkai chips

 

இங்கு கடைகளில் அவ்வளவாக பாவக்காய் வாங்குவதில்லை.சம்மரில் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் இளம் பிஞ்சாக நிறைய வரும்.இரண்டுமூன்று வாங்கலாம் என்றால் மனசு கேட்காமல் நிறைய வாங்கிவிடுவேன்.பொரியல், புளிக்குழம்பு என செய்தபிறகு மீதமாகும் பாவக்காய்களை பேக்(ட்)டு சிப்ஸ் செய்வேன்.எவ்வளவு செய்தாலும் உடனே காலியாகிவிடும். பாவக்காயின் கசப்புத் தன்மையினால் சாப்பிடாதவர்களும் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

பாவக்காய்களை சிப்ஸ் கட்டையில் வைத்து சீவி,வில்லைகளாக்கி, எவர்சில்வர் தட்டுகளில் ஒவ்வொன்றாக அடுக்கி வெய்யிலில் காய வைத்து, வத்தலாக்கி எடுத்து வைத்துக்கொண்டால் வேண்டும்போது வத்தக்குழம்பும் செய்துவிடலாம்.

தேவையானவை:

பாவக்காய்_2 (பெரியது)
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
ஆலிவ் ஆயில்_ஒரு டீஸ்பூன்
உப்பு_சிறிது

செய்முறை:

பாவக்காயை நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டு சிப்ஸ் கட்டையில் வைத்து வில்லைகள் போடவும்.இதற்கு கத்தியைக்கூடப் பயன்படுத்தலாம்.ஆனால் வில்லைகள் ஒரே அளவாக வருமாறு பார்த்துக்கொள்ளவும். இல்லையென்றால் ஒவ்வொன்றின் வேகும் நேரமும் வேறுபடும்.

ஒரு தட்டில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலந்துகொண்டு,அதில் பாவக்காய் வில்லைகளைப் போட்டுப் புரட்டி, மிளகாய்த்தூள் எல்லா பகுதிகளிலும் சீராகப் படுமாறு செய்யவும்.

இவ்வாறு செய்த பிறகு எண்ணெயை வில்லகளின்மேல் பரவலாக ஊற்றிக் கிளறி ஒரு பௌளில் வைத்து மூடி ஃப்ரிட்ஜில் ஒரு 1/2 மணி நேரம் வைக்கவும்.

அவனை 350 டிகிரிக்கு சூடுபடுத்தவும்.பேக்கிங் ட்ரேயில் அலுமினம் ஃபாயிலைப்போட்டு ஒவ்வொரு வில்லையாக அடுக்கி அவனில் வைத்து பேக் செய்யவும்.

பாவக்காய் வேக ஆரம்பிக்கும்போதே பாவக்காயின் கசப்பு மணம் நன்றாக வரும்.

ஒரு 10 நிமி கழித்த பிறகு வெளியே எடுத்து வில்லைகளைத் திருப்பிவைக்கவும். இவ்வாறே அடுத்தடுத்து 8 லிருந்து 10 நிமிடத்திற்கு இரண்டு தடவைத் திருப்பிவிடவும்.

அடுத்து நான்கைந்து நிமிடங்களுக்கு இரண்டு தடவை அல்லது தேவைப்படும் நேரத்திற்கு ஒருமுறை திருப்பிவிடவும்.

கடைசியில் கொஞ்சம் கவனமாக‌ இருக்க வேண்டும்.இல்லையென்றால் தீய்ந்துபோக வாய்ப்புண்டு.

ஒவ்வொரு முறை ட்ரேயை வெளியில் எடுக்கும்போதும் வெந்திருக்கும் ஒருசிலவற்றை எடுத்துவிடவும். சிவக்கட்டும் அல்லது ப்ரௌன் நிறமாகட்டும் என நினைக்க வேண்டாம்.வெந்த சிப்ஸும்கூட பச்சையாகத்தான் இருக்கும்.நடுவிலுள்ள பகுதி மட்டுமே லேஸாக சிவந்திருக்கும்.

கடைசியில் எல்லா சிப்ஸும் வெந்த பிறகு ட்ரேயை வெளியில் வைத்து ஆறவிடவும்.

கொஞ்சம் இருக்கட்டுமே என்று ஸ்விட்ச் ஆஃப் செய்தபிறகு அவனிலேயே விட வேண்டாம்.கருகிவிடும்.

இப்போது சுவையான,கரகரப்பான பேக்(ட்)டு பாவக்காய் சிப்ஸ் தயார்.நன்றாக ஆறிய பிறகு எடுத்து சாப்பிடவும்.

பாவக்காய் பொரியல்

 

தேவையானப் பொருள்கள்:

பாவக்காய்_2
சின்ன வெங்காயம்_10
பூண்டு_10 பற்கள்
தக்காளி_பாதி
புளி_சிறு கோலி அளவு
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலை பருப்பு
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

 

 

பாவக்காயை விரும்பிய வடிவத்தில் நறுக்கி வை.வெங்காயம்,தக்காளி,பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கி வை.பாவக்காயில் கசப்பு இருப்பதால் வெங்காயம்,பூண்டு,தக்காளி அதிகம் சேர்த்தால் அந்த அளவிற்கு கசப்பு தெரியாது.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கு.வதங்கியதும் பாவக்காய்,மஞ்சள் தூள்  சேர்த்து நன்றாக வதக்கவும்.வதங்கியதும் காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி வேக விடு.இடையிடையே திறந்து ,கிளறி ,மிதமானத் தீயில் வேக விடு.பாவக்காய் வேக சிறிது நேரம் பிடிக்கும்.

காய் முக்கால் பதம் வெந்த பிறகு மிளகாய்த் தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு மீண்டும் வேக விடு.மசாலா எல்லாம் கலந்து காய் வெந்த பிறகு கொத்துமல்லி தூவி இறக்கு.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

பாவக்காயில் கசப்பு இருப்பதால் வெங்காயம்,பூண்டு,தக்காளி அதிகம் சேர்த்தால் அந்த அளவிற்கு கசப்பு தெரியாது.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »