கரணைக்கிழங்கு புளிக்குழம்பு

pulikuzhambu

கீழே படத்தில் இருக்கும் கிழங்கைத்தான் நான் கரணைக்கிழங்கு மாதிரி என்று முன்பு ஒரு பதிவில் சொன்னேன். இது அந்தக்கிழங்கு இல்லைதான். இருந்தாலும் கரணைக்கிழங்கு வைத்து செய்யும் சமையலை இதை வைத்தே செய்துவிடுவேன். சாம்பார், பொரியல்கூட சூப்பராக வரும். நான் வாங்கியுள்ளது இருப்பதிலேயே சின்னக் கிழங்கு. மற்றதெல்லாம் பெரிசு பெரிசா இருக்கும்.

இதை வேகவைக்கும் முறையை ஏற்கனவே இங்கே சொல்லியுள்ளேன்.

IMG_1799IMG_0353

தேவையானவை:

கரணைக் கிழங்கு_ படத்தில் இருப்பதில் 1/3 பங்கு
புளி_பெரிய கோலியளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_1
முழு பூண்டு_1
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்_2 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
காய்ந்தமிளகாய்
கடலைப்பருப்பு
சீரகம்
வெந்தயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.

வேகவைத்துள்ள கரணைக்கிழங்கு ஆறியதும் விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ள‌வும்.

பூண்டு உரித்துக்கொண்டு,வெங்காயம்,தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு வைக்கப்போகும் சட்டியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துக்கொள்ளவும்.

தாளிப்பு முடிந்ததும் வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

இவை வதங்கியதும் புளியை இரண்டுமூன்று தரம் கரைத்து ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் கரணைக்கிழங்கு துண்டுகளை குழம்பில் சேர்த்துவிட்டு கரண்டியால் ஒரு கிண்டுகிண்டி விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து வாசனை வந்ததும் இறக்கிவிடலாம். இக்குழம்பு மற்ற புளிக்குழம்பு மாதிரி இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். எனவே தண்ணீர் கொஞ்சம் கூடுதலாகக்கூட விடலாம்.

சாதத்துடன் இக்குழம்பு + அப்பளம், ம்ஹூம்….இக்குழம்பிலுள்ள காயையேத் தொட்டு சாப்பிட‌லாம்.

தயிர் சாதம், பழைய சாதத்துடன் சூப்பராக இருக்கும்.

குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 16 Comments »

கத்தரிக்காய் புளிக்குழம்பு

தேவையானப் பொருள்கள்:

கத்தரிக்காய்_7 லிருந்து 10 க்குள்
புளி_சிறு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_பாதி அல்லது முழு பூண்டு
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
சீரகம்
கடலைப் பருப்பு
வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.ஊறியதும் தேவையானத் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

குழம்பு சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றி,உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.

கொதி வருவதற்கிடையில் கத்தரிக்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.

கொதி வந்ததும் கத்தரிக்காயை குழம்பில் சேர்த்துக் கலக்கி விட்டு மீண்டும் மூடி கொதிக்க வைக்கவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து,காய் வெந்து,வாசனை வந்து,எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

வெங்காயம்,தக்காளி வதக்கிய பிறகு கத்தரிக்காயை சேர்த்து வதக்கியும் குழம்பு செய்யலாம்.

புளிக்குழம்பு & புளிசாதம்

கிளறிய சாதம் செய்யலாம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது புளிசாதம், தயிர் சாதம் தான்.

புளிசாதம் செய்யும்போது கூடவே சர்க்கரைப் பொங்கல் , உருளைக் கிழங்கு வறுவல  அல்லது  மசால் வடை (கடலைப் பருப்பு வடை) செய்தால் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.

குழம்பு செய்யத் தேவையானப் பொருள்கள்:

புளி_எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

வறுத்துப் பொடிக்க:

எள்_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி விதை_2 டீஸ்பூன்
வெந்தயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_2

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
வேர்க்கடலை_ஒரு கைப்பிடி
காய்ந்தமிளகாய்_2
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.

வறுத்துப் பொடிக்க வேண்டியவற்றை எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் போட்டு தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.

வறுத்தவற்றுள் எள்ளைத் தனியாகவும்(ஒன்றும் பாதியுமாக), மற்ற பொருள்களை ஒன்றாகவும் பொடித்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு புளிக்கரைசலை ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

சிறிது நேரம் கொதித்ததும் எண்ணெய் மேலே பிரிந்து வந்திருக்கும். அப்போது (எள் நீங்களாக) பொடித்து வைத்துள்ளப் பொடியை சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

நன்றாகக் கொதித்ததும் பொடித்த எள்ளைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

புளி சாதம் கிளறுதல்:

தேவையானவை:

அரிசி_2 கப்
புளிக்குழம்பு_தேவைக்கு

புளி சாதம் கிளறுவதாக இருந்தால் வடித்த சாதத்தைப் பயன்படுத்தினால்தான் நன்றாக இருக்கும்.இல்லாவிடில் எலெக்ட்ரிக் குக்கர் சாதம் பரவாயில்லையாக இருக்கும்.

சாதம் வேகும் போது சிறிது உப்பு சேர்த்து வடித்தால் சுவையாக இருக்கும்.

அதுபோல் பச்சரிசி சாதத்தில் செய்தால் நன்றாக இருக்கும்.

லன்ச்சுக்கு சாதம் கிளறுவதாக இருந்தால் சாதத்தை வடித்து ஆற விட்டு சூடான குழம்பில் போட்டுக் கிளறவேண்டும்.

வெளியூர் பயணம் அல்லது அடுத்த நாளுக்கு என்றால் சாதம்,குழம்பு இரண்டும் நன்றாக ஆறியபிறகு கிண்டி வைத்தால் சாதம் அருமையாக இருக்கும்.

அதுவும் வாழை இலையில் வைத்துக் கட்டி வைக்க வேண்டும்.அதன் சுவையே தனிதான்.

முருங்கைக்காய் புளிக்குழம்பு

தேவையானப் பொருள்கள்:

முருங்கைக்காய்_1 (அ) 2
புளி_நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
பூண்டு_10 பற்கள்
மிளகாய்த்தூள்_1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_1 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_1/4 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
வடகம்
சீரகம்
கடலைப் பருப்பு
வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவுத் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து நறுக்கி வைக்கவும்.தக்காளியையும் நறுக்கவும்.

கொத்துமல்லி,சீரகம்,வெந்தயம் இவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து பொடித்துக்கொள்ளவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளியைக் கரைத்து ஊற்றவும்.தேவையானத் தண்னீர் சேர்த்து உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.ஒரு கொதி வந்ததும் முருங்கைக்காயைக் கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் குழம்பில் போட்டுக் கலக்கி விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து,காய் வெந்து வரும்போது வறுத்துப் பொடித்தப் பொடியைப் போட்டு கலக்கி விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு நன்றாக இருக்கும்.

குறிப்பு:

குழம்பை இறக்கும்போது அரை கைப்பிடி அளவிற்கு வெந்தயக் கீரை போட்டு இறக்கினால் நல்ல வாசனையாகவும்,சுவை அதிகமாகவும் இருக்கும்.முருங்கைக்காய்  fresh    ஆக இருந்தால் குழம்பு ஒரு கொதி வந்த பிறகு போடலாம்.frozen  காயாக இருந்தால் வெங்காயம்,தக்காளி வதக்கும்போது இதையும் சேர்த்து வதக்கினால்தான் காய் வேகும்.