தாளித்த புளிசாதம்

தேவையானப் பொருள்கள்:

சாதம்_ஒரு கிண்ணம்
புளி_கோலி அளவு
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
வேர்க்கடலை_கொஞ்சம் (இல்லையெனில் பரவாயில்லை)
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

வதக்க வேண்டிய பொடிகள்:

கொத்துமல்லி பொடி_ஒரு டீஸ்பூன்
வெந்தயப்பொடி_சிறிது

செய்முறை:

இதனைப் பெரும்பாலும் இரவு மீதமாகும் சாதத்தில்தான் செய்வார்கள்.சாதம் ஒரு கிண்ணம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.

புளியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

ஊறியதும் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

சாதத்தில் புளித்தண்ணீர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். இரவு முழுவதும் இருக்கட்டும்.அப்போதுதான் புளி,சாதத்தில் நன்றாக ஊறி இருக்கும்.காலையில் பார்த்தால் சாதம் நீர்விட்டிருக்கக் கூடாது.கெட்டியாக இருக்க வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு,தீயை மிகவும் குறைவாக வைத்துக்கொண்டு கொத்துமல்லிப் பொடி,வெந்தயப் பொடியை சேர்த்து ஒரு கிளறு கிளறிவிட்டு உடனடியாக சாதத்தை சேர்த்துக் கிளறவும்.

இப்போது தீயை மிதமாக்கிக்கொண்டு ஒரு மூடி போட்டு வைக்கவும்.

இடையிடையே கிளறி விடவும்.

சாதம் நன்றாக சூடு ஏறி புளி வாசனை போனதும் இறக்கவும்.

இதற்கு உருளைக்கிழங்கு,சேப்பங்கிழங்கு,முட்டை,சிக்கன் வறுவல்கள் நன்றாக இருக்கும்.

நல்ல பதமாக செய்தால் குழம்பு வைத்து கிண்டும் சாதத்தைவிட இதுதான் அருமையாக இருக்கும்.

புளிக்குழம்பு & புளிசாதம்

கிளறிய சாதம் செய்யலாம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது புளிசாதம், தயிர் சாதம் தான்.

புளிசாதம் செய்யும்போது கூடவே சர்க்கரைப் பொங்கல் , உருளைக் கிழங்கு வறுவல  அல்லது  மசால் வடை (கடலைப் பருப்பு வடை) செய்தால் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.

குழம்பு செய்யத் தேவையானப் பொருள்கள்:

புளி_எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

வறுத்துப் பொடிக்க:

எள்_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி விதை_2 டீஸ்பூன்
வெந்தயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_2

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
வேர்க்கடலை_ஒரு கைப்பிடி
காய்ந்தமிளகாய்_2
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.

வறுத்துப் பொடிக்க வேண்டியவற்றை எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் போட்டு தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.

வறுத்தவற்றுள் எள்ளைத் தனியாகவும்(ஒன்றும் பாதியுமாக), மற்ற பொருள்களை ஒன்றாகவும் பொடித்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு புளிக்கரைசலை ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

சிறிது நேரம் கொதித்ததும் எண்ணெய் மேலே பிரிந்து வந்திருக்கும். அப்போது (எள் நீங்களாக) பொடித்து வைத்துள்ளப் பொடியை சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

நன்றாகக் கொதித்ததும் பொடித்த எள்ளைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

புளி சாதம் கிளறுதல்:

தேவையானவை:

அரிசி_2 கப்
புளிக்குழம்பு_தேவைக்கு

புளி சாதம் கிளறுவதாக இருந்தால் வடித்த சாதத்தைப் பயன்படுத்தினால்தான் நன்றாக இருக்கும்.இல்லாவிடில் எலெக்ட்ரிக் குக்கர் சாதம் பரவாயில்லையாக இருக்கும்.

சாதம் வேகும் போது சிறிது உப்பு சேர்த்து வடித்தால் சுவையாக இருக்கும்.

அதுபோல் பச்சரிசி சாதத்தில் செய்தால் நன்றாக இருக்கும்.

லன்ச்சுக்கு சாதம் கிளறுவதாக இருந்தால் சாதத்தை வடித்து ஆற விட்டு சூடான குழம்பில் போட்டுக் கிளறவேண்டும்.

வெளியூர் பயணம் அல்லது அடுத்த நாளுக்கு என்றால் சாதம்,குழம்பு இரண்டும் நன்றாக ஆறியபிறகு கிண்டி வைத்தால் சாதம் அருமையாக இருக்கும்.

அதுவும் வாழை இலையில் வைத்துக் கட்டி வைக்க வேண்டும்.அதன் சுவையே தனிதான்.