ஓட்ஸ் பொங்கல் / Rolled Oats pongal

oats pongal

பொங்கலில் மிளகை ஒன்றும்பாதியுமாக பொடித்துப் போட்டால் சாப்பிட்டு முடித்தபிறகு தட்டில் மிளகு மீதமாகி இருப்பதைத் தவிர்க்கலாம்.இஞ்சியையும் அப்படியே வெளியே எடுத்துப் போடாத அளவிற்கு தட்டிப்போடலாம்.

இந்தப் பொங்கலை நான் எழுதியுள்ள மாதிரியும் செய்யலாம்.இல்லாவிடில் பச்சைப்பருப்பு+ஓட்ஸிற்கும் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதில் பச்சைப்பருப்பை வேகவைத்து,வெந்ததும் ஓட்ஸைப்போட்டுக் கிளறிக்கொடுத்து இறக்கும்போது,தாளிப்பை செய்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கினால் இன்னும் நல்ல வாசனையாக இருக்கும்.

தேவையானவை:

வெறும் வாணலில் வறுத்துப் பொடித்த ஓட்ஸ் பொடி_2 கப்
பச்சைப் பயறு_1/4 கப்பிலிருந்து 1/2 கப்பிற்குள்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_இரண்டுமூன்று டீஸ்பூன்.
மிளகு_சிறிது
சீரகம்_கொஞ்சம்
முந்திரி_10
இஞ்சி_சிறு துண்டு
கறிவேப்பிலை_ஒரு கொத்து

செய்முறை:

பச்சைப்பயறை சிவக்க வறுத்து,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் விட்டு ரொம்பவும் குழையாமல் வேகவைக்கவும்.பச்சைப்பருப்பு வேகத்தான் நேரமெடுக்கும்.அது வெந்துவிட்டால் பொங்கல் நிமிடங்களில் ரெடியாகிவிடும்.

அது வெந்துகொண்டிருக்கும்போதே இஞ்சியைத் தட்டிவைத்துக்கொள்ளவும். மிளகையும் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி,நெய்யை விட்டு சூடாகியதும் தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்துவிட்டு ஒரு பங்கு ஓட்ஸ்பொடிக்கு இரண்டு பங்கு என தண்ணீர் விடவும்.எனவே இரண்டு கப் ஓட்ஸிற்கு 4 கப் தண்ணீர் ஊற்றி,தேவையான உப்பும் போட்டு,கொதிக்கும்வரை மூடி வைக்கவும்.

பொங்கல் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் வேண்டுமானால் சிறிது மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அல்லது அதற்கு முன்பாகவேகூட வெந்த பச்சைப்பருப்பை சேர்த்து விடலாம்.

எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொதித்ததும் ஓட்ஸை தூவியவாறு கொட்டிக்கொண்டே விடாமல் கிண்டிவிடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.

ரவையைப்போல ஓட்ஸும் சீக்கிரமே வெந்துவிடுமாதலால் மிதமானத் தீயில் ஒன்றிரண்டு தரம் கிளறிக்கொடுத்து தீயை நிறுத்தி மூடிவிடவும்.

இப்போது சுவையான,சத்தான,வாசனையுள்ள,கொஞ்சம் கொழகொழப்பில்லாத,எளிதாக செய்யக்கூடிய ஓட்ஸ் பொங்கல் தயார்.

oats pongal

ஆறஆற பொங்கல் கெட்டியாகும்.சூடாகவோ அல்லது மிதமான சூட்டிலோ தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.சாம்பாருடனும் நன்றாக இருக்கும்.

அவல் சர்க்கரைப் பொங்கல்/Aval sakkarai pongal

இது அவசரத்திற்கு எளிதில் செய்யக்கூடியது. இதற்கு ஆகும் நேரமும் குறைவு.சுவையோ அதிகம். சத்தானதும்கூட.

இதில் நான் வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி ஒன்றும் பாதியுமாக இடித்துப் போட்டுள்ளேன்.அவரவர் விருப்பமாக முழு அவலைப் போட்டும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

அவல்_ஒரு கப்
பச்சைப் பயறு_1/4 கப்
வெல்லம்_ஒரு கப்
குங்குமப்பூ_சிறிது
பால்_1/2  கப்
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்
முந்திரி_10
திராட்சை_10

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ளவும்.

பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும்.

பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக்  கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும்.அவல் சீக்கிரமே வெந்துவிடும்.

சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்களில் சேர்த்துவிடவும்.

இதற்கிடையில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி,திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும்.

சர்க்கரைப் பொங்கலுடன் புளிசாதம், உருளைக் கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.

சேமியா பொங்கல்

சேமியா பொங்கலுக்கு ரவை சேர்த்துத்தான் செய்யவேண்டுமென்பதில்லை.தனி சேமியாவில் செய்தாலும் சுவையாக இருக்கும்.

உப்பமா என்றாலே சிலருக்கு வெறுப்பாக இருக்கும்.அதிலும் சேமியா,ரவை உப்புமா என்றால் கேட்கவே வேண்டாம். உப்புமாவிற்கு பதிலாக இவற்றை வைத்து பொங்கலாக செய்யும்போது அதிலும் நெய்யில் மிளகு,சீரகத்தை வறுக்கும் வாசனை வந்தவுடன் உடனே சாப்பிடத்தோணும்.

தேவையானப் பொருள்கள்:

சேமியா_2 கப்
ரவை_1/2 கப்
பச்சைப் பருப்பு_1/2 கப்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்
மிளகு_1  டீஸ்பூன்
சீரகம்_1  டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் சேமியாவையும்,ரவையையும் தனித்தனியாக‌ சூடு வர வறுத்துக்கொள்ளவும்.

அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

ஒரு  வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து, ஒரு பங்கு சேமியா & ரவைக்கு  இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு கொதி நிலை வரும்வரை மூடி வைக்கவும்.

பச்சைப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றவேண்டாம்.

தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவை கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்து ,கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.

சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி,கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

ரவை முழுவதையும் சேர்த்த பிறகு,நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி,மூடி வைக்கவும்.இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

இப்போது சேமியா பொங்கல் சாப்பிடத் தயாராக உள்ளது.


இது நல்ல வாசனையாகவும்,சுவையாகவும்,எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

இதற்கு தேங்காய் சட்னிதான் மிகப் பொருத்தம்.சாம்பாரும் நன்றாக இருக்கும்.

ஓட்ஸ் பொங்கல்(steel cut oats )/Oats pongal

சாதாரன பொங்கல் போல் அல்லாமல் ஓட்ஸ் பொங்கல் செய்யும்போது பச்சைப் பருப்பின் அளவைக் கொஞ்சம் கூட்டி செய்தால்தான் நன்றாக இருக்கும்.

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்_2 கப்
பச்சைப் பருப்பு_3/4 கப்
மஞ்சள்தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்
மிளகு_1  டீஸ்பூன்
சீரகம்_1  டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை_கொஞ்சம்

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக்கொள்ளவும்.

பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் ஒரு பங்கு ஓட்ஸுக்கு இரண்டரை பங்கு தண்ணீர்  என 5 கப் தண்ணீர் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டு,தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.

இரண்டும் நன்றாகக் குழைந்து,வேகும் வரை மிதமானத் தீயில் வைக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்தி,அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து),சீரகம்,இஞ்சி,முந்திரி, கறிவேப்பிலை தாளித்துப் பொங்களில் கொட்டிக் கிளறி இறக்கவும்.

அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் கொட்டிக் கிளறி இறக்கலாம்.இந்த முறையில் செய்யும்பொழுது மிகவும் நன்றாக இருக்கும்.

இதற்கு தேங்காய் சட்னி,சாம்பார் இவை மிகப்பொருத்தமாக இருக்கும்.

ரவை பொங்கல்

தேவையானப் பொருள்கள்:

ரவை_2 கப்
பச்சைப் பருப்பு_1/2 கப்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்
மிளகு_1  டீஸ்பூன்
சீரகம்_1  டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் ரவையைப் போட்டு சூடு வர வறுத்துக்கொள்ளவும்.

அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

மீண்டும் வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து,ஒரு கப் ரவைக்கு இரண்டேகால் கப் தண்ணீர் என ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

பச்சைப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றவேண்டாம்.

தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு,வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

மீண்டும் ஒரு கொதி வந்ததும் ரவையை சிறிதுசிறிதாகக் கொட்டி,கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

ரவை முழுவதையும் சேர்த்த பிறகு,நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி,மூடி வைக்கவும்.இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

நீண்ட நேரம் அடுப்பிலேயே இருந்தால் ரவை பொங்கலுக்குப் பதில் ரவை உப்புமாவாக மாறிவிடும்.

இப்போது ரவை பொங்கல் தயார்.

இது நல்ல வாசனையாகவும்,சுவையாகவும்,எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

இதற்கு தேங்காய் சட்னிதான் மிகப் பொருத்தம்.சாம்பாரும் நன்றாக இருக்கும்.

கோதுமை ரவை பொங்கல்/Wheat rava pongal

தேவையானப் பொருள்கள்:

கோதுமை ரவை_2 கப்
பச்சைப் பருப்பு_1/2 கப்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்
மிளகு_ஒரு டீஸ்பூன்
சீரகம்_ஒரு டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை

செய்முறை:

இதன் செய்முறையும் சாதாரண வெண்பொங்கல் செய்வது மாதிரிதான்.

முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க, வாசம் வரும்வரை வறுத்து ஆறியதும் கழுவிவிட்டு,தேவையானத் தண்ணீர்விட்டு,மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

பாதி வெந்த நிலையில் கோதுமை ரவையைக் கழுவிவிட்டு (வறுக்க வேண்டாம்)ஒன்றுக்கு மூன்று அல்லது அதற்கும் மேல் தண்ணீர் விட்டு,உப்பு போட்டு பருப்புடன் சேர்த்து வேகவிடவும்.இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து குழைய வேக வேண்டும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து பொங்கலில் கொட்டிக் கிளறி இறக்கவும்.அல்லது தாளிப்பு முடிந்ததும் பொங்கலை வாணலியில் கொட்டிக் கிளறி இற‌க்கலாம்.

பொங்கலுக்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல் & சாதாரண வெண் பொங்கல்

பொங்கலன்று சாதாரண வெண்பொங்கல்,சர்க்கரைப் பொங்கல் செய்வது வழக்கம்.

இவற்றின் புகைப்படம் தற்சமயம் இல்லையாதலால் செய்முறை மட்டுமே போட்டுள்ளேன்.பொங்கலன்று படத்தை இணைத்துவிடுகிறேன்.

சர்க்கரைப் பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பச்சைப் பருப்பு_1/3 கப்
வெல்லம்_ஒரு கப்
பால்_1/2 கப்
ஏலக்காய்_2
குங்குமப்பூ_ஒரு 15 இதழ்கள்
முந்திரி_15
திராட்சை_15
நெய்_1/4 கப்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.ஆறிய பிறகு   கழுவிவிட்டு அதில்  4 கப்புகள் அளவிற்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

பருப்பு பாதி வெந்த நிலையில் அரிசியைக் கழுவி அதில் சேர்த்து விடவும். அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்தால் அரிசி வெந்து விடும்.பருப்பு வேகாமல் இருக்கும்.எனவே முதலில் பருப்பையும் அடுத்து அரிசியையும் சேர்க்க வேண்டும்.

இரண்டும் ஒன்றாகக் கலந்து நன்றாகக் குழைய வேக வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து இளம் பாகு பதம் வந்ததும் அதை குழைய வெந்துள்ள பொங்கலில் கொட்டிக் கிளறி விடவும். அடுத்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.

அடுத்து நெய்யில் முந்திரி,திராட்சையை வறுத்து நெய்யுடன் சேர்த்துக் கொட்டிக் கிளறி இறக்கவும்.

சாதாரண வெண்பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பால்_1/4 கப்

செய்முறை:

ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் அளவிற்கு பாலும் தண்ணீருமாகச் சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதித்து பொங்கி வரும்போது அரிசியைப் போட்டு அடிப்பிடிக்காமல் அடிக்கடிக் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.நன்கு குழைய வெந்த பிறகு இறக்கவும்.

இதற்கு பொங்கல் குழம்பு அல்லது கருனைக் கிழங்கு புளிக் குழம்பு நன்றாக இருக்கும்.