வாழைக்காய் பொடிமாஸ்

vazhai podimas

தேவையானப் பொருள்கள்:

வாழைக்காய்_1
மஞ்சள்தூள்_சிறிது
இஞ்சி_சிறிது
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய்_2
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வாழைக்காயை முழுதாகவோ அல்லது இரண்டாக நறுக்கியோ தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் தண்ணீரிலிருந்து எடுத்து ஆறியதும் தோலை உரித்துவிடவும். காய் நன்றாக வெந்திருந்தால் தோல் உரிக்க எளிதாக வரும்.

உரித்த வாழைக்காயை உதிர்த்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக்கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு இஞ்சி சேர்த்து லேசாக வதக்கிவிட்டு உதிர்த்து வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி மிதமானத் தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும்.

தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

காய் சூடேறியதும் கொத்துமல்லி தூவி, கிளறிவிட்டு இறக்கவும்.

இந்த செய்முறையில் உருளைக் கிழங்கிலும் செய்யலாம்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.