ப்ரோக்கலி என்றாலே சிலருக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால் அதனுடன் இதுமாதிரி உருளை, கடலை போன்றவற்றை சேர்த்து சமைத்தால் சாப்பிடாதவர்களும் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்
தேவையானவை:
ப்ரோக்கலி _ 1
சிறிய உருளைக்கிழங்கு _ 1
அவித்த வேர்க்கடலை _ ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
பூண்டுப்பல் _ மூன்றுநான்கு
தேங்காய்ப் பூ
கொத்துமல்லி தழை
உப்பு _ தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல்நீக்கியோ அல்லது அப்படியேவோ சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும்.
அவித்த வேர்க்கடலையைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.
ப்ரோக்கலியை நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.
பூண்டுப்பல்லை தட்டிக்கொள்ளவும்.
இவை எல்லாம் தயாரானவுடன், அடுப்பில் வாணலை ஏற்றித் தாளித்துவிட்டு, தட்டி வைத்துள்ள பூண்டு போட்டு வதக்கிகொண்டு ப்ரோக்கலி, உருளை, வேர்க்கடலை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது வதக்கிவிட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீரை தெளித்தாற்போல் விட்டு மூடி வேகவிடவும்.
உருளையும், வேர்க்கடலையும் ஏற்கனவே வெந்திருப்பதாலும், ப்ரோக்கலி சூடு பட்டாலே வெந்துவிடும் என்பதாலும் தண்ணீர் அதிகம் தேவையிராது.
தண்ணீர் சுண்டி மிளகாய்த்தூள் வாசனை போனதும் தேங்காய்ப்பூ & கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.