ப்ரஸ்ஸல்ஸ் குருமா / Brussels sprouts kurma

kurma

இவை பார்ப்பதற்கு குட்டிக்குட்டி கோஸ் மாதிரி கொத்துகொத்தாக இருக்கும். இதைவைத்து பொரியல்,சாம்பார்,குருமா எல்லாம் வைக்கலாம்.சுவையும் ஏறக்குறைய அதேதான்.

நான் பச்சைப்பட்டாணி சேர்த்து குருமா செய்துள்ளேன்.அவரவர்க்கு விருப்பமான காய்களுடன் அல்லது சிக்கனுடனும் சேர்த்து சமைக்கலாம்.

brussels sproutbrussel sprout

தேவையானவை:

ப்ரஸ்ஸல்ஸ்_சுமார் 15
பச்சைப்பட்டாணி_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
இஞ்சி_சிறுதுண்டு
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி,புதினா
உப்பு_தேவைக்கு

அரைக்க:

தேங்காய் பத்தை_3
கசகசா_ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை_ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கிராம்பு_3
பிரிஞ்சி இலை_1
பட்டை_1
பெருஞ்சீரகம்
சீரகம்

செய்முறை:

பச்சைப்பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கவும்.இஞ்சி&பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.

ப்ரஸ்ஸல்ஸை முழுதாகக் கழுவிவிட்டு நுனிப்பகுதியில் லேஸாகக் கீறிவிடவும்.அல்லது முழுதாகக்கூட போட்டுக்கொள்ள‌லாம்.

அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயம்,தக்காளி,பட்டாணி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கிவிட்டு,இரண்டு கப் தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

நன்றாகக் கொதித்த பிறகு ப்ரஸ்ஸல்ஸை சேர்த்து வேக வைக்கவும்.இது சீக்கிரமே வெந்துவிடும்.

அரைக்க வேண்டியவற்றை மைய அரைத்து,குருமா மீண்டும் கொதி வரும்போது அதில் சேர்த்து கலக்கிவிடவும்.

எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை,புதினா சேர்த்து இறக்கவும்.

இது சாதம்,சப்பாத்தி,பரோட்டா இவற்றிற்கு நன்றாகப் பொருந்தும்.

Advertisements
குருமா வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 11 Comments »

ப்ரஸ்ஸல்ஸ் பொரியல் (Brussels Sprouts)

ப்ரஸ்ஸல்ஸ்_குட்டிக் குட்டியான அளவில் சிறுசிறு கோஸ் போலக் காணப்படும் இவற்றில் பொரியல்,சாம்பார்,கூட்டு என எல்லா வகையான சமையலும் செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும்.

ப்ரஸ்ஸல்ஸ் பொரியலுக்குத் தேவையானப் பொருள்கள்:

ப்ரஸ்ஸல்ஸ்_5
சின்ன வெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
தேங்காய்ப் பூ_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

ப்ரஸ்ஸல்ஸை கழுவிவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.வெங்காயம் பொடியாகவும்,பச்சை மிளகாயைக் கீறியும் வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து ப்ரஸ்ஸல்ஸை சேர்த்து,சிறிது உப்பும் போட்டு மூடி போடாமல் கிளறி விடவும்.மூடி போட்டால் அந்த அழகான‌ பச்சை நிறம் மாறிவிடும்.

தீ மிதமாக இருக்கட்டும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.சீக்கிரமே வெந்துவிடும்.

இறுதியில் தேங்காய்ப் பூ,கொத்துமல்லித் தூவிக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

விருப்பமானால் தேங்காய்ப் பூ சேர்ப்பதற்கு முன் வெந்த துவரம் பருப்பு ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்.