பூரி & கிழங்கு

IMG-20150315-WA0005

பூரி செய்யத் தேவையானப் பொருள்கள்:

கோதுமை மாவு_3 கப்
ரவை_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பூரி சுடத் தேவையான அளவு

செய்முறை:

முதலில் ரவை நன்றாக ஊறும்  அளவிற்கு தண்ணீர் விட்டு ஒரு 2 நிமி ஊற வைத்து பிசைந்துகொள்.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,உப்பு எடுத்துக்கொண்டு கைகளால் நன்றாகக் கலந்துகொண்டு,அதில் பிசைந்த ரவையைப் போட்டு,சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.மாவு பிசைந்த உடனேயே பூரியை சுட்டு விட வேண்டும்.அதிக நேரம் வைத்திருந்தால் பூரி சிவந்துவிடும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவில் இருந்து சிறு எலுமிச்சை அளவிற்கு எடுத்து கைகளால் உருட்டி கோதுமை மாவில் புரட்டி பூரி கட்டையில் வைத்து சிறு வட்டமாகத் தேய்த்து (சப்பாத்தியை விட சிறிது கனமாக) எண்ணெயில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி வீட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.சிவக்க விட வேண்டாம்.இதுபோல் ஒவ்வொரு பூரியாக சுட்டு எடு.

மசாலா கிழங்கு செய்யத் தேவையானப் பொருள்கள்:

உருளைக் கிழங்கு_ 2 (அ) 3
பச்சைப் பட்டாணி_ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம்_10 (அ) பெரிய வெங்காயம்_1
தக்காளி_பாதி
பச்சை மிளகாய்_1
இஞ்சி_மிகச்சிறிய துண்டு
பூண்டு_ஒரு பல்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_ ஒரு டீஸ்பூன்
பிரிஞ்சி இலை_1
சீரகம்
உளுந்து
கடலைப் பருப்பு
முந்திரி_2
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_ஒரு கொத்து

செய்முறை:

பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வை.இப்போது பட்டாணியை வேக வை.உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ஆறியதும் ஒன்றும் பாதியுமாக கைகளால் பிசைந்து வை..வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி பொடியாக நறுக்கி வை.இஞ்சி,பூண்டு தட்டி வை.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கு.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கு.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கு.அது வதங்கியதும் மஞ்சள்தூள்,உருளைக் கிழங்கு,பட்டாணி சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீர்,உப்பு சேர்த்து மிதமானத் தீயில் கொதி வரும் வரை மூடி வை. நீண்ட நேரம் கொதிக்க வேண்டாம். கொதி வந்ததும் 1/2 டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவை எடுத்து சிறிது நீர் விட்டுக் கரைத்து மசாலாவில் ஊற்றினால் கிழங்கு தனித்தனியாக இல்லாமல் எல்லாம் ஒன்றாகக் கலந்திருக்கும்.நன்றாகக் கிளறி விட்டு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கு.

குறிப்பு:

வெறும் கோதுமை மாவில் பூரி செய்தால் சிறிது நேரத்தில் பூரி அமுங்கிவிடும்.அதனுடன் ரவையைச் சேர்த்தால் எவ்வளவு நேரமானாலும் அமுங்காமல் அப்படியே இருக்கும்.