சுட்ட வேர்க்கடலை/Baked green peanuts


வேர்க்கடலையைப் பச்சையாக சாப்பிடும்போது ஒரு சுவை.அதையே வேகவைத்து சாப்பிடும்போது தனிச்சுவை.சுட்டு சாப்பிடும்போது மற்ற எல்லா சுவைகளையும் மிஞ்சிவிடும்.

விறகடுப்பில் சமையல் முடித்த பிறகு அதிலுள்ள நெருப்பில் பச்சை வேர்க்கடலையைப் போட்டு சுட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதைவிட வேர்க்கடலைச் செடியையேப் பயன்படுத்தி சுடும்போது(பாதி செடி காய்ந்து சருகாகவும் மீதி பச்சையாகவும் இருக்கும்) இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.

இங்கு லேட் சம்மரில் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டிற்கு பச்சை வேர்க்கடலை வரும்.விலை அதிகம் என்றாலும் கிடைக்கிறதே என வாங்கிவிடுவேன். வீட்டிற்கு வருவதற்குள் பாதி காலியாகிவிடும்.மீதியை வேகவைத்து சாப்பிடுவோம்.சில சமயங்களில் அவனில் வேகவைத்து சாப்பிடுவோம்.இது ஓரளவிற்கு சுட்ட வேர்க்கடலை போலவே இருக்கும்.

வேர்க்கடலை மண்,தூசு இல்லாமல் சுத்தமாகவேக் கிடைக்கும்.அதை பேக்கிங் ஷீட்டில் கொட்டி பரப்பி விட்டு அவனில் வைத்து 350 டிகிரியில் வேக (bake ) வைக்கவும்.நன்றாக வேக சுமார் ஒரு மணி நேரமாவது ஆகும்.வேகும் நேரம் வேர்க்கடலையின் அளவைப் பொறுத்து மாறும்.

இந்த ஒரு மணி நேரத்தில் இரண்டுமூன்று தடவை வேர்க்கடலையை ஒரு மரக்கரண்டியால் கிளறி விடவும்.கடைசியில் ஒன்றை உரித்து சாப்பிட்டுப்பார்த்து வெந்திருந்தால் அவனிலிருந்து எடுத்துவிடவும். இல்லையென்றால் சிறிது நேரம் கழித்து வெந்ததும் எடுக்கவும்.

சூடு ஆறியபின் உரித்து சாப்பிட வேண்டியதுதான்.வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும்.

அடுத்த வாரம் வேக வைத்த வேர்க்கடலையுடன் பார்க்கலாம்.

கிராமத்து உணவு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 6 Comments »