அதிரசம்

தேவையான பொருள்கள்:

1.பச்சரிசி- 2 கப்
2.வெல்லம்-  1  1/2 கப்
3.ஏலக்காய்-2
4.உப்பு- 1/4 சிட்டிகை (விருப்பமானால்)

செய்முறை:

பச்சரிசியை தண்ணீரில் நனைத்து சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.பிறகு வடிகட்டி தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் போட்டு ஈர மாவாக இடித்துக்கொள்ளவும்.பிறகு வெல்லத்தை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தவேண்டும்.வெல்லம் கரைந்து நுரைத்து வரும்.தீயை மிதமாக வைக்கவேண்டும்.இல்லை என்றால் வெல்லம் தீய்ந்து விடும். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு,ஒரு சிறு கரண்டியால் பாகை எடுத்து ஒரு சொட்டு தண்ணீரில் விட்டு விரல்களால் உருட்டிப் பார்க்க வேண்டும்.விரலில் ஒட்டாமல் உருட்ட வந்தால் அதுதான் கெட்டிப் பதம். அப்போது பாகை அடுப்பில் இருந்து இறக்கி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மத்தின் அடிப்பகுதியால் நன்கு கிளர வேண்டும். கூடவே பொடித்து வைத்துள்ள ஏலம், உப்பு இவற்றையும் சேர்த்துக் கிளற வேண்டும்.இந்த மாவை நன்றாக ஆறிய பிறகு ஒரு மூடியைப்போட்டு இறுக்கமாக மூடி வைக்கவேண்டும்.

மறுநாள் வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி  மிதமாக சூடுபடுத்த வேண்டும். மாவை மீண்டும் ந்ன்றாகக் கிளறி ஒரு சிறு எலுமிச்சை அளவு எடுத்து கைகளில் வைத்து உருண்டையாக்கி வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து வட்டமாகத் தட்டவும்.இதுபோல் அனைத்து மாவையும் தட்டிக்கொண்டு எண்ணெயில் போட்டு இரு புறமும் லேசாக சிவந்ததும் எடுத்து விடவும். பாகு நல்ல பதமாக இருந்தால் அதிரசம் நன்றாக உப்பி வரும். அதிரசத்தை எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் ஒரு தட்டில் போட்டு அடி தட்டையாக உள்ள மற்றொரு தட்டால் அமுக்கி விடவும். நன்றாக ஆறிய பிறகு சுத்தமான டப்பாவில் எடுத்து வைக்கவும். இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

குறிப்பு:
உப்பு சேர்ப்பது ருசியை அதிகப்படுத்துவதற்குத்தான். மேலும் 1 கப் வெல்லத்திற்கு 1/4 கப் தண்ணீர் போதும்.