ஆம்லெட்/Omelet (மற்றொரு முறை)

omelet

தேவையானவை:

முட்டை_2
பால்_ஒரு டீஸ்பூன்
மிளகு 4 பொடித்துக்கொள்ளவும்.
உப்பு_சிறிது
பட்டர் அல்லது எண்ணெய்_சிறிது

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் ஏற்றவும்.தீ மிதமாக இருக்கட்டும்.

ஒரு பௌளில் முட்டையை உடைத்து ஊற்றி whisk ஆல் நன்றாகக் கலக்கவும்.

பிறகு பால்,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

கடாயில் பட்டரைப் போட்டு அது கரைந்ததும் முட்டைக் கலவையை ஊற்றி லேஸாக சுழற்றி விடவும் அல்லது அதுவாகவே சுற்றிலும் பரவிவிடும்.

பாதி வேகும்போதே மிளகுத்தூளை ஆம்லெட் முழுவதும் தூவி முற்சூடு செய்த அவனில் ஒரு சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்வதால் மேல் பகுதியும் நன்கு வெந்துவிடும்.கடாய் oven safe உள்ள‌தாக இருக்கட்டும்.

படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு தட்டில் வைத்து மேலே சிறிது மிளகுத்தூளைத் தூவிவிடவும்.

எளிதாகச் செய்யக்கூடிய சுவையான ஆம்லெட் தயார்.

மிளகுத்தூளிற்குப் பதிலாக பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் + பச்சைமிளகாய்,வெங்காயத்தாள்,துருவிய சீஸ் போன்று நமக்கு விருப்பமானதைப் போட்டு அலங்கரித்துக்கொள்ளலாம்.

அசைவம், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 4 Comments »

கேரட் & முட்டை பொரியல்

தேவையானப் பொருள்கள்:

கேரட்_1
சின்ன வெங்காயம்_2
பச்சை மிளகாய்_1
மஞ்சள் தூள்_சிறிது
முட்டை_1
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலை பருப்பு
கறிவேப்பிலை

செய்முறை:

கேரட் பொரியலில் கேரட் வெந்ததும் தேங்காய்ப்பூ அல்லது வெந்த பருப்பு சேர்ப்போம்.அதற்கு பதிலாக இதில் முட்டையை ஊற்றி செய்கிறோம். அவ்வளவே.

வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டை கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத்   தாளித்துவிட்டு  வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு கேரட்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.

இரண்டும் சேர்ந்தார்போல் வந்ததும் இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

முட்டைப் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

முட்டை_4
உப்பு_தேவைக்கு

தாளிக்க:
நல்லெண்ணெய்_சிறிது
உளுந்து_1/4 டீஸ்பூன்
மிளகு_ஒரு டீஸ்பூன் (காரத்திற்குத் ஏற்றவாறு கூடக்குறைய இருக்கலாம்)
மஞ்சள் தூள்_சிறிது

செய்முறை:

மிளகைப் பொடித்துக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து பெயருக்கு சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முதலில் உளுந்து போட்டு சிவந்ததும் மிளகு,மஞ்சள்தூள் சேர்த்து லேசாகக் கிளறிவிட்டு (மஞ்சள் தூள் கருகாமல்) உடனே முட்டையை உடைத்து ஊற்றவும்.

ஊற்றியதும் ஒரு தோசைத்திருப்பியால் கிளறிவிட்டு உப்பைத் தூவினாற்போல் போட்டு முட்டை வேகும் வரை (சீக்கிரமே வெந்துவிடும்) அடிக்கடி கிளறிவிடவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.இல்லையென்றால் முட்டை தீய்ந்து வேண்டாத வாசனை வந்துவிடும்.

வெந்த முட்டைப் பொரியல் பெரியபெரிய‌ துண்டுகளாக இருந்தால் கரண்டியால் உடைத்து சிறுசிறு துண்டுகளாக்கவும்.இப்போது முட்டைப் பொரியல் தயார்.

இது எல்லா வகையான சாததிற்கும்(தயிர் சாதம் தவிர்த்து) பொருத்தமாக இருக்கும்.

முட்டை ஆம்லெட் (Egg Omelet)

தேவையானப் பொருள்கள்:

முட்டை_1
மிளகு_5 (எண்ணிக்கை)
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_ஒரு துளி

செய்முறை:

மிளகைப் பொடித்துக்கொள்ளவும்.

முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் மிளகுப்பொடி,மஞ்சள்தூள்,உப்பு போட்டு whisk ஆல் நன்றாக அடித்துக்கொள்.

அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து சூடுபடுத்தவும்.

அது சூடேறியதும் கல்லில் சிறிது எண்ணெய் தடவிவிட்டு முட்டைக் கலவையை ஊற்றிக் கல்லை லேசாக சுழற்றினால் போதும்.முட்டை தானாகவே கல் முழுவதும் பரவிவிடும்.மிதமானத் தீயில் மூடி போடவும்.

ஒரு நிமிடத்திற்குள்ளாகவே வெந்துவிடும்.

ஒரு பக்கம் வெந்ததும் தோசைத்திருப்பியால் திருப்பிப் போட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.கல்லின் சூட்டிலேயே வெந்துவிடும்.

அப்படியே வேண்டிய வடிவத்தில் தோசைத்திருப்பியால் துண்டுகள் போட்டால்,சாப்பிடும்போது எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும்.

கருவாடு,வாழைக்காய்,முட்டைக் குழம்பு

கருவாட்டுக் குழம்பிற்கு காரை,சங்கரா,நீர் சுதும்பு போன்ற கருவாடுகள் நன்றாக இருக்கும்.அவை கிடைக்காததால் நெத்திலியில் செய்துள்ளேன்.பழைய சாதத்திற்கு இதில் உள்ள வாழைக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்.

தேவையானப் பொருள்கள்:

கருவாடு_சுமார் 100 கி
வாழைக்காய்_1 (அ) பாதி
முட்டை_3 (ஒரு நபருக்கு ஒன்று)
புளி_பெரிய நெல்லிக் காய் அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_பாதி
முழு பூண்டு_1
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
வடகம்
வெந்தயம்

செய்முறை:

புளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.கருவாட்டினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நீரை வடிய வைக்கவும்.நான் இதில் சேர்த்திருப்பது நெத்திலிக் கருவாடு.எல்லாக் கருவாட்டிலும் இதனை செய்யலாம்.சின்ன வெங்காயம் நறுக்கி(அ)தட்டி வைக்கவும்.தக்காளியை நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.வாழைக்காயைக் கொஞ்சம் கனமான‌ வட்டமாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.மெல்லியதாக இருந்தால் சீக்கிரமே வெந்துக் குழைந்துவிடும்.

முட்டையை வேக வைத்து ஆறியதும் தோலை உரித்துவிட்டு லேசாக சில இடங்களில் கீறிவிட்டு எடுத்து வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி,எண்ணெய் ஊற்றி சூடாகியதும் முதலில் வடகம்,அடுத்து வெந்தயம் போட்டு தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி வதக்கி,அடுத்து கருவாடு சேர்த்து வதக்கி,அடுத்து மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும்.பிறகு மூடி போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு பாதி கொதித்த நிலையில் வாழைக்காயைக் குழம்பில் போட்டு கிளறி விடவும்.இப்போது தீ மிதமாக இருக்கட்டும்.இல்லை என்றால் காய் சீக்கிரமே வெந்து குழைந்துவிடும்.நன்றாகக் கொதித்து காய் வெந்த பிறகு முட்டையை சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை முதலியவற்றிற்கு நன்றாக இருக்கும்.அதைவிட அடுத்த நாள் வைத்திருந்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.மற்ற பாத்திரங்களில் செய்வதை விட மண் சட்டியில் செய்தால்தான் அருமையாக இருக்கும்.

முட்டை வறுவல்

 

தேவையானப் பொருள்கள்:

முட்டை_3
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_ஒரு டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

முட்டையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி மிதமானத் தீயில் வேக வை.கொதி நிலைக்கு வந்த பிறகு 5 லிருந்து 10 நிமிடங்களுக்குள் வெந்து விடும்.

வெந்த பிறகு ஆறவைத்து குளிர்ந்த நீரில் போட்டு உரித்தால் ஓடு எளிமையாக உரிக்க வரும்.பிறகு கத்தியால் நீள வாக்கில் பாதியாக உடையாமல் நறுக்கவும்.

மிதமானத் தீயில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருஞ்சீரகம்,கறிவேப்பிலைத் தாளித்து மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்துக் கிளறி கொஞ்சமாக ஒரு 2 டீஸ்பூன் அளவிற்கு தண்ணீர் விட்டு கொதித்து சுண்டியதும் நறுக்கிய முட்டையை கவிழ்த்துப் போட்டு எல்லா முட்டைகளிலும் மசாலா படுமாறு சிறிது நேரம் வேக விடு. பிறகு திருப்பி வீட்டு சிறிது நேரம் வைத்திருந்து எடுத்துவிடவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.