
தேவை:
விருப்பமான காய்கறிகள்_2 கப்
(கேரட்,பீன்ஸ்,காலிஃப்ளவர்,உருளை கிழங்கு,சௌசௌ,வெள்ளை பூசணி,வெங்காயத்தாள்,முருங்கைக்காய்,கத்தரிக்காய் போன்றவை.இவற்றில் ஒரு காயோ அல்லது பல காய்கள் சேர்த்தோ செய்யலாம்.இதில் குறிப்பிட்டுள்ளதைத்தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை.உங்கள் விருப்பப்படி சேர்க்கலாம்)
பச்சை பட்டாணி_1/4 கப்
சின்ன வெங்காயம்_10
தக்காளி_2
பச்சை மிளகாய்_1
இஞ்சி_1 துண்டு
பூண்டு_2 பற்கள்
மிளகாய் தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_2 கொத்து
அரைக்க:
தேங்காய்_3 துண்டுகள்
கசகசா_1 டீஸ்பூன்
தாளிக்க:
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை_1
முந்திரி_5
எண்ணெய்_2 டீஸ்பூன்
செய்முறை:
பச்சை பட்டாணி சேர்ப்பதாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்.கசகசாவை மிதமான சூட்டில் வறுத்து சிறிது வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும்.காய்களை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும்.இஞசி,பூண்டு நசுக்கி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கி அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு காய்கறிகளை வதக்கவும்.பட்டாணி நன்றாக ஊறி இருந்தால் காய்களுடன் அப்படியே சேர்க்கலாம்.இல்லை என்றால் தனியாக வேகவைத்து சேர்க்கலாம்.இப்போது மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து வேகவிடவும்.
காய் வெந்ததும் கசகசா,தேங்காய் அரைத்து ஊற்றவும்.குருமா கெட்டியாக இருக்கட்டும்.இரண்டு கொதி கொதித்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.புதினா வாசம் பிடிக்குமானால் இரண்டு(அ)மூன்று இலைகள் சேர்க்கலாம்.இப்போது கமகமக்கும் காய்கறி குருமா தயார்.இது சப்பாத்தி,நாண்,இடியாப்பம் இவற்றிற்கு நன்றாகப் பொருந்தும்.