வறுத்த வேர்கடலை கையில் இருந்து, கூடவே முருங்கைக்கீரையும் இருந்துவிட்டால் நொடியில் முருங்கைக் கீரைப் பொரியல் ரெடியாயிடும்.
முன்பெல்லாம் தேடித்தேடி ஓடியதுபோக, இப்போ ஃப்ரெஷ்ஷாவே கிடைக்குது. கிடைக்கும்போது வாங்கி அனுபவிச்சிட வேண்டியதுதான்.
தேவையானவை :
முருங்கைக்கீரை _ இரண்டுமூன்று கிண்ணம் (எவ்வளவு கீரையாக இருந்தாலும் சமைத்த பிறகு கொஞ்சமாகிவிடும்)
வறுத்த வேர்கடலை _ ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் _ 1
உப்பு _ ருசிக்கு
செய்முறை :
வேர்க்கடலையை வறுக்கும்போதே கடைசியில் மிளகாயையும் போட்டு சூடுவர வறுத்துக்கொள்ளவும். அல்லது ஏற்கனவே வறுத்த வேர்கடலை இருக்குமாயின், மிளகாயை மட்டும் வெறும் வாணலில் போட்டு சூடுவர வறுத்து எடுக்கவும்.
இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு இடித்துக்கொள்ளவும். மைய இடிக்க வேண்டாம். வேர்கடலை கொஞ்சம் வாயில் கடிபடுகிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்.
பிறகு அடிகனமான சட்டியில் ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, தண்ணீர் காய்ந்ததும் அதில் கீரையைப் போட்டு வதக்கவும்.
மெல்லிய பாத்திரம் வேண்டாம், பாத்திரம் மெல்லியதாக இருந்தால் தண்ணீர் சீக்கிரமே சுண்டிவிடும், கீரையும் வேகாது.
வதக்கும்போதே சிறிது உப்பு சேர்க்கவும். கீரை வெந்து தண்ணீர் சுண்டி வந்ததும் பொடித்த பொடியைப் போட்டு ஒரு கிண்டுகிண்டி இறக்கவும்.
எல்லா சாதத்துடனும் சூப்பராக இருக்கும். சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் சூப்பரோ சூப்பராக இருக்கும்.