வாழைப்பூ,முருங்கைக் கீரைப் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

சிறிய வாழைப்பூ_ஒன்று
முருங்கைக் கீரை_ஒரு கப்(உருவியது)
முக்கால் பதம் வெந்த துவரம் பருப்பு (அ) பாசிப்பருப்பு_ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

வாழைப் பூவை ஆய்ந்து,பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

ஒரு வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும்.அதில் வாழைப் பூவைப் போட்டு,சிறிது மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும்.சீக்கிரமே வெந்துவிடும்.

வெந்ததும் நீரை வடித்துவிட்டு,ஆறியதும் தண்ணீர் இல்லாமல் ஒட்டப் பிழிந்து எடுத்து வைக்கவும்.

கீரையை உருவி,கழுவி எடுத்து வைக்கவும்.வெந்த பருப்பை தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.

இப்போது வாணலியை அடுப்பில் ஏற்றி,தாளிக்க உள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு வாழைப்பூவை சேர்த்து வதக்கவும்.

ஏற்கனவே வெந்திருப்பதால் நீண்ட நேரம் வதக்க வேண்டாம்.சூடேறினால் போதும்.அடுத்து வெந்த பருப்பு சேர்த்துக் கிளறவும்.அடுத்து கீரை,உப்பு சேர்த்துக் கிளறவும்.மூட வேண்டாம்.கீரை வெந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இப்படம் கீரை இல்லாமல் செய்தது.கீரை இல்லையெனில் அதை மட்டும் தவிர்த்து மற்றப் பொருள்களை சேர்த்து செய்ய வேண்டும். இரண்டிற்கும் செய்முறை  ஒன்றுதான்.