எல்லோரும் ஸ்வீட் முறுக்கு எடுத்துக்கோங்க.இது எனது முந்நூறாவது பதிவு.
அச்சுமுறுக்கு செய்வது எனக்கு இதுதான் முதல்முறை.வீட்டில் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஞாயிறன்று அச்சு வாங்கியாச்சு.அம்மாவிடம் செய்முறை வாங்கி செய்தேன்.ஈர பச்சரிசி மாவிற்குபதில் கடையில் வாங்கிய மாவில் செய்தேன். சரியாக வந்தால் பார்க்கலாம்,இல்லையென்றால் தூக்கிப் போட்டுவிடலாம் என்ற தைரியத்தில்.
முதல் இரண்டு முறுக்குகளை அச்சிலிருந்து பிரிக்கவே முடியவில்லை.அச்சை அக்குவேறு,ஆணிவேறாகப் பிரித்து,முறுக்குகளைப் பிய்த்தெடுத்தேன். கோபம்கோபமாக வந்தது.இவர் கொஞ்சம் ஸ்ட்ராங்காக சொல்லியிருந்தால் வாங்காமலேயே வந்திருக்கலாமே என்றுகூடத் தோன்றியது.ஆனால் அடுத்தடுத்து செய்யும்போது அழகாக வந்துவிட்டது.அச்சு புதிதாக இருந்து,முதல்முறை செய்வதாக இருந்தால் கொஞ்சம் (நிறையவே) பொறுமை அவசியம்.
அச்சு இதுதான்.ஒரு மரக்கைப்பிடியுடன் கிடைக்கிறது.
தேவையானவை:
பச்சரிசி மாவு_ஒரு கப்(கடையில் வாங்கியது)
மைதா_ஒரு டேபிள்ஸ்பூன்
வெல்லம்_3/4 கப்
தேங்காய்ப்பால்_3/4 டம்ளர்
எள்_சிறிது
ஏலக்காய்_1 (பொடித்துக்கொள்ளவும்)
உப்பு_துளி
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
அரிசிமாவு,மைதா,எள்,உப்பு,ஏலக்காய்த்தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.
வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது கரையும் அளவிற்கு சிறிது தண்ணீர் விட்டு,அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் வடிகட்டி ஆறவைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும்.
தேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கரைக்கவும்.கரைத்த மாவு தோசைமாவு பதத்தில் இருக்கட்டும்.தேவையானால் சிறிது தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு வைக்கவும்.
அச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.
முறுக்கு பாதி வேகும்போதே ஒரு மரக்குச்சியால் அச்சிலிருந்து முறுக்கை லேஸாகப் பிரித்துவிடவும்.ஏற்கனவே வெந்திருப்பதால் ஒருமுறைத் திருப்பிவிட்டு உடனே எடுத்துவிடலாம்.
மீண்டும் அச்சை எண்ணெயில் வைத்து சூடேற்றி முன்பு சொன்னது போலவே செய்யவும்.இவ்வாறே ஒவ்வொரு முறையும் செய்யவும்.இரண்டு அச்சு இருந்தால் செய்ய வசதியாக இருக்கும்.
இப்போது சுவையான அச்சு முறுக்கு சாப்பிடத்தயார்.