கலகலா

 

தேவையானப் பொருள்கள்:

மைதா_ஒரு கப்
சர்க்கரை_1/2 கப்
நெய்_ஒரு டீஸ்பூன்
உப்பு_துளிக்கும் குறைவாக‌
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

மைதாவில் துளிக்கும் குறைவாக‌ உப்பு சேர்த்து (சுவைக்காக) சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.

இதை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு அதனுடன் நெய் சேர்த்து நன்றாக,உதிர் உதிராக வருமாறு பிசையவும்.நெய் மாவு முழுவதும் பரவியிருக்க வேண்டும்.

இதனுடன்  சர்க்கரையைக் கலந்துகொள்ளவும்.மாவுச்சர்க்கரையாக  இருந்தால் அப்படியே சேர்த்துக்கொள்ளவும்.இல்லை கிரிஸ்டலாக இருந்தால் மிக்ஸியில் போட்டு பொடித்த பிறகு சேர்க்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்தபிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பூரி மாவை விட நல்ல இறுக்கமாக பிசைந்துகொள்ளவும்.

மாவில் சர்க்கரை கலந்திருப்பதால் தண்ணீர் கொஞ்சம் அதிகமானாலும் மாவு நீர்த்துவிட வாய்ப்புண்டு.எனவே நல்ல கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

இப்போது மாவிலிருந்து சிறு எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்திக்கு தேய்ப்பதுபோல் தேய்த்துவிட்டு ஒரு கத்தியால் சிறுசிறு சதுரங்களாக வருமாறு துண்டுகளாக்கவும்.

அடுத்து ஒரு சதுரத்துண்டைக் கையிலெடுத்து எதிரெதிர் முனைகளை எதிரெதிர் பக்கங்களில் பிடித்து சிறிது முறுக்கிவிட வேண்டும்.

இதுபோலவே எல்லா மாவையும் செய்துகொள்ள வேண்டும்.

பார்ப்பதற்கு அழகான சிறுசிறு சங்குகள் போல் இருக்கும்.

இப்போது எண்ணெயை வாணலியில் ஊற்றி சூடுபடுத்தவும்.எண்ணெய் காய்ந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

இப்போது சுவையான,இனிப்பான,மொறுமொறுப்பான‌ கலகலா தயார்.

இதை ஒருவராக செய்தால் எல்லாவற்றையும் செய்து வைத்துக்கொண்டுதான்  பொரித்தெடுக்க வேண்டும்.

இருவர் செய்வதாக இருந்தால் ஒருவர் உருட்டி சங்குகள் செய்தால் மற்றவர் எண்ணெயில் போட்டெடுக்க வசதியாக இருக்கும்.

இனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

போளி

boliboli

தேவையானப் பொருள்கள்:

மேல் மாவிற்கு:‍

மைதா_4 கப்
சர்க்கரை_ஒரு துளி ( for taste )
உப்பு_ஒரு துளி ( for taste )
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
எண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்

பூரணம் செய்வதற்கு:

கடலைப் பருப்பு_1 கப்
துவரம் பருப்பு_1 கப்
வெல்லம்_2 கப்
ஏலக்காய்_2

செய்முறை:

முதலில் மைதாவை சலித்து எடுத்துக் கொண்டு அதனுடன் சர்க்கரை, உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட்டு, எண்ணெயை சேர்த்து மாவு முழுவதும் பரவுமாறு நன்றாகப் பிசைந்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எண்ணெய் தடவி மூடி வைக்கவும்.

அடுத்து பூரணம் செய்வதற்கு கடலைப் பருப்பு,துவரம் பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவிவிட்டு தேவையானத் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

மிகவும் குழைந்து போகாமல் மலர வேக வைக்க வேண்டும். வெந்ததும் நீரை வடித்து விடவும்.நீர் இருந்தால் பூரணம் கொழ கொழப்பாகிவிடும்.

நீர் முழுவதும் வடிந்த பிறகு நனைத்துப் பிழிந்த ஒரு பேப்பர் டவல் (அ) துணியில் கொட்டி உலர்த்தினால் மீதமுள்ள நீரும் வற்றிவிடும்.

இப்போது வெந்த பருப்பை மிக்ஸியில் போட்டு மழமழவென நன்றாகப் பொடித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு அடி கனமான கடாயில் பருப்பு பொடியுடன்,வெல்லத்தைப் பொடித்துப் போட்டு அடுப்பில் வைத்து மிதமானத் தீயில் கிளறி விடவும்.

வெல்லம் கரைந்து சிறிது நீர்த்து வரும்.விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.சிறிது நேரத்தில் நீர் வற்றி கெட்டியாக வரும்.அப்போது ஏலக்காயைப் பொடித்துப் போட்டுக் கிளறி இறக்கி ஆற வைக்கவும்.

போளி தட்டும் விதம்:

பூரணம் ஆறிய பிறகு சிறுசிறு எலுமிச்சை அளவிற்கு எடுத்து உருட்டி வைக்கவும்.

உருண்டையின் பாதி அளவிற்கு மேல் மாவில் இருந்து எடுத்து கையில் நல்லெண்ணெயைத் தொட்டுக்கொண்டு, உள்ளங்கை அகலத்திற்கு பரப்பிவிட்டு,அதன் நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி,கவிழ்த்து வைத்து (பூரணம் வெளியில் வராமல்) சப்பாத்தி போல் கையாலேயே பரப்பி விடவும்.

எவ்வளவு அகலமாக‌ வேண்டுமானாலும் தட்டலாம்.பூரணம் சப்பாத்தியின் உள்ளே எல்லா இடத்திலும் பரவியிருக்க வேண்டும். அப்போதுதான் சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

முதலில் ஒன்றிரண்டு தட்டுவதற்கு சிரமமாக இருக்கும்.அடுத்தடுத்து செய்யும்போது சுலபமாகி விடும்.

இதுபோல் தேவையானதைத் தயார் செய்துவிட்டு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி நெய் (அ) எண்ணெயைப் பயன்படுத்தி கல்லில் போட்டு ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

இதனை கடலைப்பருப்பு,பச்சப்பருப்பு இவற்றை தனித்தனியாக வைத்தோ அல்லது கலந்தோகூட செய்யலாம்.

பரோட்டா

தேவை:

மைதா_ 3 கப்

சோடா உப்பு_1 துளி

உப்பு_தேவையான அளவு

எண்ணெய்_ 1/4 கப்

செய்முறை:

மைதா,சோடா உப்பு,உப்பு மூன்றையும் இரண்டு (அ) மூன்று முறை சலித்துக்கொள்ளவும்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மாவு முழுவதும் எண்ணெய் தடவி மூடி ஊற வைக்கவும்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து மாவிலிருந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி  எண்ணெய் தடவி மூடி வைக்கவும்.

மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து ஒவ்வொரு உருண்டையாக எடுத்து எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு கனமான பெரிய அகலமான தட்டை கவிழ்த்துப் போட்டு சப்பாத்திக்கு தேய்ப்பது போல் ஆனால் மிகவும் மெல்லியதாக (கண்ணாடி போல்) பரத்தி அகலமாகத் தேய்க்க   வேண்டும்.

நன்கு தேய்த்த பிறகு ஒரு முனையைப் பிடித்து தூக்க வேண்டும்.துணியின் கொசுவம் மாதிரி வரும்.அதை உள்ளங்கையில் வைத்து சுருட்ட வேண்டும்.இதுபோல் எல்லா உருண்டைகளையும் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒவ்வொன்றாக எடுத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் ஆனால் இம்முறை சிறிய வட்டமாக கனமாக தேய்த்து மீண்டும் எண்ணெய் தடவி மூடி வைக்கவும்.

இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணெய் விட்டு ஒவ்வொரு பரோட்டாவாக போட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

எடுத்தவுடன் அதே சூட்டுடனேயே உள்ளங் கைகளுக்கிடையில் வைத்து அழுத்தி நொறுக்கி தட்ட வேண்டும். அப்போதுதான் ஏடு ஏடாக வரும்.

இதனுடன் குருமா (அ) சால்னா தொட்டு சாப்பிட இதற்காக இவ்வளவு நேரம் செலவிட்டதே மறந்து போகும்.இதற்கு நேரமும் வேலையும் அதிகம்.ஆனாலும் வீட்டிலேயே செய்து சாப்பிடும் போது அதில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.

சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »